கார்த்திகை அமாவாசையன்று பக்தர்களைத் தேடி வரும் கங்கை!

Kinatril Pongiya gangai
Kinatril Pongiya gangai
Published on

ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் அய்யாவாள் என்பவர்  தஞ்சாவூர் மராத்திய அரசுக்கு உட்பட்ட திருவிடைமருதூர் என்கிற ஊருக்கருகிலுள்ள திருவிசநல்லூர் என்னும் கிராமத்தில் வாழ்ந்தவர். இவர் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சதாசிவ பிரம்மேந்திரர் சுவாமிகளின் சமகாலத்தில் வாழ்ந்தவர். சிறந்த சிவபக்தர். ஊர் ஊராகச் சென்று எல்லா சிவாலயங்களையெல்லாம் தரிசித்து வந்தார். பிறகு திருவிசநல்லூரில் தங்கி நாள் தவறாமல் திருவிடைமருதூர் சிவனை தரிசித்து வந்தார். இவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் கங்கையை அவர் வாழ்ந்த திருவிசநல்லூர் கிராமத்திற்கே அழைத்து வந்தது.

300 ஆண்டுகளுக்கு முன் ஒரு கார்த்திகை அமாவாசை தினத்தன்று ஸ்ரீதர அய்யாவாளின் தகப்பனாரின் திவசம். அந்தணர்களை அழைத்து முறைப்படி சிராத்தம் செய்ய வெகு சிரத்தையாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அன்று அந்தணர்களுக்கு அளிக்க வேண்டிய உணவுக்காக சமையல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு முதியவர், அய்யாவாள் வீட்டு வாசலுக்கு வந்து, "ஐயா! மிகவும் பசிக்கிறது. ஏதேனும் உண்ண தாருங்கள்" என்று வேண்டினார். பசியால் அவர் முகம் வாடியிருப்பதைப் பார்த்த ஸ்ரீதர அய்யாவாளுக்கு மனம் பொறுக்கவில்லை. உள்ளே சென்று பார்த்தார். திவசத்தன்று அந்தணர்களுக்குப் பரிமாற வேண்டிய உணவு மட்டும்தான் இருந்தது. இதை அவர்கள் மட்டுமே உண்ண வேண்டும். இந்த விதிமுறைகள் நன்கு தெரிந்திருந்தும் ஸ்ரீதர அய்யாவாள் அந்த உணவில் சிறிதெடுத்து, பசியோடு வாசலில் நிற்கும் முதியவருக்குத் தந்து விட்டார். அந்த முதியவரும் அந்த உணவை நன்றியோடு பெற்றுக் கொண்டு உண்டு விட்டு சென்று விட்டார்.

இதைப் பார்த்த அந்தணர்கள் மிகுந்த கோபம் அடைந்தார்கள். "என்ன தைரியம் உங்களுக்கு? சிராத்தத்திற்காக தயாரித்த உணவை சிராத்தம் நடக்கும் முன்பே யாரோ ஒருவருக்கு அளித்து விட்டீர்களே? இது எப்பேர்ப்பட்ட தோஷம்? இந்த  தோஷம் போக வேண்டுமானால் காசிக்கு சென்று அங்கு கங்கையில் நீராடி விட்டு வர வேண்டும். பின்புதான் திதி கொடுத்து முடிக்க முடியும்!" என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.

அய்யாவாள் அதிர்ச்சியடைந்தார். காவிரிக்கரையிலிருந்து கங்கைக்கரைக்குச் செல்ல பல மாதங்கள் ஆகுமே? ஆனால், திதி இன்றுதானே கொடுக்க வேண்டும் என்று மிகவும் மனம் வருந்தி சிவபெருமானை துதித்தார். ஈசனின் சிரசின் மேல் இருக்கும் கங்கையை போற்றும் 'கங்காஷ்டகம்' என்னும் ஸ்லோகத்தை வாசிக்கத் தொடங்க, இவர் வீட்டுக் கிணற்றில் கங்கை சங்கமித்தது. அவரது வீட்டுக் கிணற்றிலேயே கங்கை பிரவாகமாகப் பொங்கியது. இதனால் சிறந்த சிவபக்தரான ஸ்ரீதர அய்யாவாளின் பெருமையை அந்த கிராமமே உணர்ந்து கொண்டது.

இதையும் படியுங்கள்:
நாகங்களுக்கு நாக்கு ஏன் பிளவு பட்டிருக்கிறது தெரியுமா?
Kinatril Pongiya gangai

ஆனால், அதேசமயத்தில் இதில் அந்த திருவிசநல்லூர் கிராமமே வெள்ளக்காடானது. இன்னும் சற்று நேரத்தில் அந்த ஊரே மூழ்கிவிடும் நிலை ஏற்பட்டது. இந்த வெள்ளத்திலிருந்து அந்த கிராமத்தையும், ஊர் மக்களையும் காப்பாற்றிடவும் அவரையே அனைவரும் வேண்டினர். இதையடுத்து அய்யாவாள் கங்கையை மீண்டும் துதித்து தனது வீட்டுக் கிணற்றிலேயே தங்கும்படி பிரார்த்தனை செய்தார். வெள்ளம் மெதுவாக வடிந்து ஊர் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்த அற்புதத்தைக் கண்ட அந்தணர்கள் திரும்பி வந்து ஸ்ரீதர அய்யாவாளின் மேன்மையை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டனர். தாங்களும் கங்கையில் நீராடி நல்ல முறையில் திதியை முடித்துக் கொடுத்தனர்.

Kinatril Pongiya gangai
Kinatril Pongiya gangai

சம்பவம் நடந்த அன்று ஸ்ரீதர அய்யாவாளுக்கு திருவிடைமருதூர் சிவனை தரிசிக்க போக முடியவில்லை. அன்று மாலை ஈசன் கருவறையில் ஒரு துண்டு சீட்டில் அய்யாவாள் வீட்டில் உணவருந்தியதால் அன்று இரவு தனக்கு நைவேத்தியம் வேண்டாமென்று எழுதி வைத்திருப்பதைப் பார்த்து, ஒரு ஏழையாக வந்து அய்யாவாள் வீட்டில் உணவருந்தியது ஈசனே என்று உணர்ந்து அனைவரும் அய்யாவாளின் மகிமையும், பெருமையும் புரிந்தவராய் கை கூப்பித் தொழுதனர்.

வருடா வருடம் கார்த்திகை அமாவாசையன்று திருவிசநல்லூரில் அய்யாவாள் வீட்டுக் கிணற்றில் பொங்கி வரும் கங்கை நீரில் நீராட ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அங்கே வருகின்றனர். இந்த வருட கார்த்திகை அமாவாசை நாளை 30.11.2024 (சனிகிழமை) அன்று வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com