
தசமி என்பது இந்து நாட்காட்டியின்படி, அமாவாசை மற்றும் பௌர்ணமியை அடுத்து வரும் பத்தாவது சந்திர நாளாகும். இது வளர்பிறை (சுக்ல பட்சம்) மற்றும் தேய்பிறை (கிருஷ்ண பட்சம்) என இரு வகைகளில் வருகிறது. தசமி திதிகள் பல தெய்வங்களின் வழிபாட்டுக்கு உகந்தவை என்றாலும் இந்த நாளில் நிமிஷாம்பாளை விரதம் இருந்து வழிபட்டால் நாம் கேட்ட வரங்களை தருவாள்.
நிமிஷாம்பாள் என்பது, லலிதா சகஸ்ரநாமத்தில் குறிப்பிட்டிருக்கும் அன்னையின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்று. ஒரே ஒரு பார்வையில் பக்தர்களின் துன்பங்களை சம்ஹாரம் செய்து, அவர்கள் வேண்டிய வரங்களை கொடுக்கக் கூடியவள் என்பதால் இந்த அம்பிகைக்கு நிமிஷாம்பாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
அந்த வகையில் இன்று (அக்டோபர் 16-ம்தேதி) தேய்பிறை தசமி திதி அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து நிமிஷாம்பாள் கோவிலுக்கு சென்று அவளை மனமுருக வழிபாடு செய்தால் கேட்ட வரங்கள் கிடைக்கும்.
மாதந்தோறும் தசமி திதி 2 முறை வருகிறது. இந்த 2 நாட்களிலுமே நிமிஷாம்பாளை விரதம் இருந்து வழிபாடு செய்வது உத்தமம். நிமிஷாம்பாள், யாக குண்டத்தில் இருந்து வெளிப்பட்டு, அசுரனை வதம் செய்தது தசமி திதியில் என்பதால் இந்த நாளில் அதிகமானவர்கள் நிமிஷாம்பாள் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.
அந்த வகையில் 10 தசமி திதிகளுக்கு நிமிஷாம்பாள் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி, உங்களின் கோரிக்கைகளை சொல்லி அன்னையை வேண்டிக்கொண்டால் உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்று, வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் கூறுகின்றனர். ஆனால் 10 தசமி திதிகள் வரை பக்தர்களை காக்க வைக்காமல் ஐந்து தசமி திதிகளுக்குள்ளேயே பக்தர்களின் கோரிக்கையை அன்னை நிமிஷாம்பாள் நிறைவேற்றி தந்து விடுவாளாம்.
அப்படி வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவிலுக்கு வந்து அன்னைக்கு அபிஷேகம் செய்வது, பிரசாதம் வழங்குவது, மாலை, புடவை சாற்றுவது என தங்களால் முடிந்தவற்றை செய்து வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.
நிமிஷாம்பாள் ஆலயம் சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் நெரிசல் மிகுந்த காசிச்செட்டி தெருவில் அமைந்துள்ளது. மிகவும் பரபரப்பான சவுகார்பேட்டை பகுதியில் மிகவும் பழமையான நிமிஷாம்பாள் கோவில் இருப்பது பலருக்கு தெரிவதில்லை.
மிகச் சிறிய கோவில் தான்; ஆனால் அவள் தரும் வரமோ மிகப்பெரியது. இருந்தாலும் சமீப காலமாக நிமிஷாம்பாளை வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, தசமி திதியில் அன்னை நிமிஷாம்பாளை விரதம் இருந்து மனமுருகி வழிபடும் பக்தர்களுக்கு அவர்களின் கோரிக்கை நிச்சயமாக நிறைவேறுவதாக கூறப்படுகிறது. இதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் மாதந்தோறும் வரும் தசதி திதிகளில் நிமிஷாம்பாள் கோவிலுக்கு வழிபடும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கர்நாடகாவில் தான் அன்னை நிமிஷாம்பாளுக்கு முதன் முதலில் கோவில் எழுப்பப்பட்டது. அதன் பிறகே பல இடங்களில் நிமிஷாம்பாள் கோவில்கள் நிறுவப்பட்டு, வழிபடப்பட்டு வருகின்றன.
நிமிஷத்தில் வரம் அருளும் இந்த நிமிஷாம்பாளை வணங்கி வாழ்வில் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெறுவோம்!