
இன்று மாலை 05.30 மணிக்கு மாசி மாதம் முடிந்து பங்குனி ஆரம்பிக்கும் நேரத்தில் காரடையான் நோன்பு அல்லது காமாட்சி நோன்பு அல்லது சாவித்திரி விரதம் என்று அழைக்கப்படும் நோன்பு இந்துக்களால் நோற்கப் படுகிறது. தமிழகத்தில் சுமங்கலிப் பெண்கள் நோற்கும் மிக முக்கியமான நோன்புகளில் ஒன்று இந்த சாவித்திரி நோன்பு.
இந்த சத்தியவான் சாவித்திரி புராணக்கதை சிவபுராணத்தில் உள்ளது. இதை பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போது மார்க்கண்டேய முனிவர் திரௌபதிக்கு எடுத்துரைக்கிறார்.
நாட்டை எதிரிகளிடம் இழந்த சால்வ நாட்டு மன்னர் துயுமத்சேனன் தன் மனைவி, மகன் சத்தியவானுடன் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவருக்கும் அவர் மனைவிக்கும் கண் பார்வையும் போய்விடுகிறது. மந்திர நாட்டு மன்னன் அசுவபதியின் மகள் சாவித்திரி தான் மணமுடிக்க ஏற்ற இளவரசனைத்தேடி சத்தியவான் தங்கியிருந்த காட்டுப் பகுதிக்கு வந்தாள். சத்தியவானைக் கண்டதும் தன் இதயத்தை அவனிடம் பறிகொடுத்தாள். மணந்தால் சத்தியவானைத்தான் மணப்பேன் என்று தன் தந்தையிடம் கூறும்போது அந்த நேரத்தில் அங்கு வந்த நாரதர், "இன்றிலிருந்து பன்னிரெண்டு மாதங்களுக்குள் சத்தியவான் இறந்து விடுவான்" என்று கூறுகிறார். ஆனால் சாவித்திரி திடமான மனதுடன் தான் மனதில் வரித்த சத்தியவானையே மணந்து கொண்டு காட்டிலேயே வசித்து வருகிறாள்.
சத்தியவான் இறப்பு பற்றிய ரகசியம் அவனுக்குத் தெரியாது. ஆனால் சாவித்திரிக்கு அவன் இறக்கும் நாள் நெருங்கி விட்டது என்பது தெரிந்ததால், அவன் எங்கு சென்றாலும் அவனுடனேயே செல்கிறாள். அவன் தன் கண் பார்வையிலேயே இருக்கும்படி பார்த்துகொண்டு அதே சமயத்தில் அவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி இறைவனை பிரார்த்திக் கொண்டும் இருக்கிறாள்.
அன்று விறகு வெட்ட காட்டிற்குச் சென்ற சத்தியவான் சாவித்திரியின் மடி மீது தலை வைத்து உயிர் துறந்தான். சத்தியவானின் உயிரை எடுத்துச்செல்ல வந்த எமதூதர்களால் பதிவிரதையான சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை நெருங்க முடியவில்லை. அதனால் எமதர்மராஜாவே அந்த உயிரை எடுத்துச்செல்ல வர வேண்டியதாயிற்று.
தன் கணவனின் உயிரை எடுத்துக்கொண்டு சென்ற எமதர்மராஜனை ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்த சாவித்திரி தான் பதிவிரதை என்பது உண்மையானால் சத்தியவான் உயிரை திருப்பிக் கொடுத்து விடுமாறு கண்ணீருடன் வேண்டுகிறாள். ஆனால் எமதர்மராஜா, "உயிர் போவது என்பது விதி முடிந்த செயல். ஆகவே அந்த காரியத்தை செய்வதே எனது தர்மம், கடமை" என்று பதிலுரைக்கிறார்.
சாவித்திரி விடாமல் திட சித்தத்துடன் அயராமல் அவரைப் பின் தொடரவே அவள் மேல் இரக்கம் கொண்ட எமதர்மராஜா அவளுக்கு ஒரு வரம் கொடுப்பதாக சொல்கிறார். அதே சமயத்தில் "இறந்தவனின் உயிரைத்தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள்!" என்கிறார்.
உடனே சாவித்திரி, "எனக்கு நூறு பிள்ளைகள் பிறந்து அவர்கள் என் மாமனாரின் தேசத்தை ஆள்வதை என் கணவனின் பெற்றோர் தன் கண்களால் காண்பதை நான் நேரில் கண்டு களிக்க வேண்டும்" என்று கேட்கிறாள். தன் கணவன் உயிர் பறிபோன அப்பேர்ப்பட்ட இக்கட்டான நேரத்திலும் சாவித்திரி என்னும் பெண்மணி தன் புத்திசாலித்தனம், சமயோஜித புத்தி ஆகியவற்றால் எப்படி அந்த நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டாள் என்பதை பார்க்கிறோம். அவளின் விடாமுயற்சியும் பதிவிரதத்தன்மையும் எமதர்மராஜனின் மனதை இளகச் செய்ய, அவ்வாறே வரம் கொடுத்து சத்தியவானின் உயிரை திரும்பக் கொடுக்கிறார்.
மாசி மாதம் முடிந்து பங்குனி ஆரம்பிக்கும் வேளையில், அதாவது மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் சாவித்திரி தன் கணவன் சத்தியவான் உயிரை மீட்கும் நிகழ்வு நிகழ்ந்தது. அதனால் சரியாக அதே வேளையில் வருடா வருடம் "உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நோற்றேன். ஒருக்காலும் என் கணவர் பிரியாமல் இருக்கணும்!" என்று சொல்லி மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் 'காரடையான் நோன்பு' நோற்று சரடு கட்டிக் கொள்வது தமிழகத்தில் பழக்கம்.
கார்காலத்தில் விளைந்த அரிசியில் அடை செய்து சாவித்திரி நோன்பு நோற்று கடவுளுக்கு தன் கணவன் உயிரைத் திரும்பக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தாளாம். அதனால் இந்த நோன்பிற்கு 'காரடையான் நோன்பு' என்னு பெயர் வந்ததாம்.
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் இந்த நிகழ்வு ஏற்பட்டதால், வருடந்தோறும் அந்த நேரத்தில் சுமங்கலிப் பெண்கள் நோன்பு நோற்று என்றென்றும் தன் கணவர் தன்னோடு சேர்ந்து வாழ வேண்டிக்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு இலையில் ஒரே ஒரு அடையும் வெண்ணையும் வைத்து, தாம்பாளத்தில் தேங்காய் உடைத்து வைத்து தாம்பூலம் வைத்து அதில் நடுவில் பூக்கட்டிய மஞ்சள் சரடையும் வைத்து,
தோரம் கிருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம்
தாராம்யஹம் பர்துஹூ : ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
சுப்ரீதா பவ ஸர்வதா
என்னும் சரடு கட்டிக்கொள்ளும் மந்திரத்தை சொல்லி இந்த வருடம் மாசியும் பங்குனியும் கூடும் நேரம் நாளை 14.03.25 (வெள்ளிக்கிழமை) மாலை 05.30 முதல் 06.30 என்பதால் அந்த நேரத்தில் சுமங்கலிப் பெண்கள் நோன்பு நோற்று சரடு கட்டிக்கொள்ள வேண்டும்.