
நம் இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களிலும் லட்சக்கணக்கான திருக்கோயில்கள் உள்ளன. அந்த வகையில், இந்தியாவிலேயே அதிக சொத்துக்களைக் கொண்ட 5 பணக்காரக் கோயில்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. பத்மநாப சுவாமி கோயில்: இந்தியாவிலுள்ள பணக்கார கோயில்களில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் முதலிடம் பிடிக்கிறது. ஸ்ரீ மகாவிஷ்ணு மூலவராகக் குடிகொண்டிருக்கும் இக்கோயில் 100 அடி உயரத்துடன் ஏழு வரிசைகள் கொண்ட கோபுரம் இருக்கிறது. இந்தக் கோயிலின் மொத்த சொத்து மதிப்பு 1,20,000 கோடி ரூபாய் ஆகும். மேலும், இந்தக் கோயிலில் எண்ணற்ற புதையல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2. திருப்பதி கோயில்: ஆந்திர பிரதேசம், திருப்பதியில் அமைந்துள்ள திருமலை பணக்கார கோயில்களின் வரிசையில் இரண்டாம் இடம் பிடிக்கிறது. உலகிலேயே அதிக பக்தர்களால் கவரப்படும் இந்தக் கோயிலில் மூலவர் பெருமாள் ஆவார். இந்தக் கோயிலுக்கு ஒன்பது டன் தங்கம் மற்றும் 14,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அதிக தங்க நகைகள் சேர்வதால் அவ்வப்போது நகைகள் ஏலம் விடப்படுவதும் உண்டு.
3. வைஷ்ணவா தேவி கோயில்: ஜம்மு & காஷ்மீரில் அமைந்துள்ள இந்தக் கோயில் தனது குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றும் தாய் என்று பக்தர்களால் அழைக்கப்படுவதால் ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இங்கே வருகை புரிகின்றனர். நன்கொடையாக மட்டுமே இந்தக் கோயிலுக்கு ரூபாய் 500 கோடி கிடைப்பதோடு, இக்கோயிலுக்கு சொந்தமாக 1.2 டன் தங்கம் இருக்கும் நிலையில், மேலும் கிலோ கணக்காக தங்கம் நன்கொடையாகப் பெறப்படுவதால் பணக்கார கோயில்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறது.
4. சீரடி சாய்பாபா கோயில்: மகாராஷ்டிராவில் உள்ள அஹமது நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு சாய்பாபா 1858ல் சீரடிக்கு வந்து, 1918ல் முக்தி அடையும் வரை இங்கு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் நன்கொடையாக 2000 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்கில் 350 கிலோ தங்கம், 4000 கிலோவுக்கு மேல் வெள்ளி மற்றும் 1,800 கோடி ரூபாய் இருப்பதால் பணக்கார கோயில்களின் வரிசையில் நான்காம் இடம் பிடிக்கிறது.
5. குருவாயூர் கோயில்: கேரள மாநிலம், குருவாயூர் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் மிகவும் புகழ்பெற்ற தலமாகும். இங்கு தங்க முலாம் பூசப்பட்ட 3.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பம் உள்ளது. மேலும், இந்தக் கோயிலின் சொத்து மதிப்புகள் 2,500 கோடி ரூபாயாக இருப்பதால் இக்கோயில் பணக்கார கோயில்களின் வரிசையில் ஐந்தாம் இடம் பிடிக்கிறது.