
கேரளாவில் உள்ள சிவன் கோவில்களில் முக்கியமானது திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு நாதன் சிவன் கோவில் ஆகும். இக்கோவில் 1200 ஆண்டு பழையது என்றும் இங்கு சித்திரை மாதம் பூர நட்சத்திரத்தன்று நடக்கும் பூரம் திருவிழாவுக்கு வரும் கூட்டம் உலகில் அதிக மக்கள் கூடும் கூட்டங்களில் ஒன்றாகும் என்றும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
வடக்கே கைலாயத்தில் இருந்து வந்த சிவனை, மக்கள் வடக்கு நாதன், வடக்குண்ண நாதன், வடக்கும் நாதன் என்கின்றனர். பிரம்மந்த புராணம் கோயிலின் கதையை கூறுகிறது.
ஸ்தல புராணக் கதை
பரசுராமர் சத்திரியர்களை 21 முறை அழித்த பாவத்தைத் தொலைக்க ஒரு யாகம் நடத்தினார். அன்று இருந்த நிலம் முழுவதையும் பிராமணருக்கு தானம் வழங்கினார். இன்னும் அவருக்கு நிலம் தேவைப்பட்டது உடனே கடல் மாதாவிடம் சென்று தனக்கு இன்னும் கொஞ்சம் நிலம் அளிக்கும்படி வேண்டினார். தனது மழுவை (கோடரி) கடலுக்குள் எறிந்தார் . அது சென்று விழுந்த தூரம் வரை கடல் பின்வாங்கி நிலம் தோன்றியது.
கடல் தனக்கு வழங்கிய நிலத்தை புனிதமாக்க கருதிய பரசுராமர் கைலாயத்துக்குச் சென்று, தனக்குக் கடல் வழங்கிய இடத்தில் வந்து சிவபெருமான் தங்கினால், அந்த இடம் புனிதம் ஆகும் என்று கேட்டுக்கொண்டார். பரசுராமரின் வேண்டுதலை ஏற்று தன் குடும்பத்துடன் சிவ கணங்களுடன் வந்து தங்கிய இடம்தான் திருச்சூர்.
கருவறை நாதர்
ஊர் திரும்பிய பரசுராமர் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டார். சிவபிரான் தன் இடத்துக்கு வந்திருப்பதை அறிந்து கொண்டார். அந்த இடத்தையே மூலஸ்தானம் (கருவறை) ஆக்கினார். கொச்சி மகாராஜா வடக்கும்நாதனுக்கு வேறு ஒரு இடத்தில் பெரிய கோவில் கட்ட விரும்பினார். மூலஸ்தானத்தில் இருக்கும் சிவலிங்கத்தை எடுத்தால் ஆலமரத்தின் கிளைகளை கொஞ்சம் வெட்டியாக வேண்டும். கிளைகளை வெட்டும் போது அவை சிவலிங்கத்தின் மீது விழுந்து காயப்படுத்தி விட்டால் என்ன செய்வது? என்று மன்னர் பயந்தார். அப்போது யோகத்திரிபாடு என்ற அந்தணர் சிவலிங்கத்தின் மேல் தான் கவிழ்ந்து கொள்வதாகவும் அதன் பின்பு மரக்கிளைகளை வெட்ட வேண்டும் என்றும் கூறினார். அதன்படியே மரக்கிளைகளை அகற்றி ஆலமரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தை எடுத்துச் சென்று புதிய கோவிலின் கருவறையில் வைத்தனர்.
சமய ஏற்பு (Religious Synchronisation)
இப்போது திருச்சூரில் இருக்கும் கோயில் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அக்காலகட்டத்தில் அங்கு மக்கள் வணங்கி வந்த பரமக்காவு பகவதிக்கும் சிவன் கோவிலுக்குள் ஒரு சன்னதி வைக்கப்பட்டது. மேலும் கூடல் மணிக்கியா கோயில் , கொடுங்கல்லூர் பகவதி கோவில், அம்மா திருவடி கோவில் போன்ற உள்ளூர் கோயில்கள் மக்கள் செல்வாக்கு பெற்று இருந்தன. சமண புத்த சமயங்களும் அக்காலத்தில் இருந்தன. புதிய தெய்வங்கள் வரும்போது பூர்வீகத் தெய்வங்களையும் தம்முள் இணைத்துக்கொள்ளும். இதனை சமயவியல் அறிஞர்கள் Religious Synchronising என்பர்.
ஆதிசங்கரர் பிறப்பு
காலடி என்ற ஊரில் சிவகுரு மற்றும் ஆரியாம்பா தம்பதியருக்கு ஆதிசங்கரர் பிறந்தார். இவருடைய பிறப்புக்கு காரணம் இவரது பெற்றோர்கள் வடக்கும் நாதனுக்கு செய்த வேண்டுதல்களும் வழிபாடுகளும் ஆகும்.
திருச்சுற்றுக் கடவுளர்
வடக்கும் நாதன் கோவில் கேரளாவில் மிகப் பழைய சிவன் கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் திருச்சுற்றுக் கடவுளராக கிருஷ்ணர், ரிஷப நாதர் சிம்மோதரன், வேட்டைக்கார தர்ம சாஸ்தா, நாகர் மற்றும் ஆதிசங்கரர் உள்ளனர். திருச்சுற்று கூத்தம்பலம் எனப்படுகிறது. இதன் நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்கள் உண்டு.
வழிபாட்டு முறை
வடக்கும் நாதன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இங்கேயுள்ள கடவுளரை வரிசையாக வணங்கி வர வேண்டும். முதலில் ஸ்ரீ மூலஸ்தானத்தில் உள்ள கருவறைநாதரை வணங்க வேண்டும். பின்பு கோசாலை கிருஷ்ணண், அதன் பின்பு நந்திகேஸ்வரர் தொடர்ந்து, பரசுராமர், சிம்மோதரர் (சிங்க வயிறு கொண்ட சிவகணம் சிம்மோதரன் ஆவான்), காசி விஸ்வநாதர், (இவர் சிமோதாரனுக்கு வடக்கே சன்னதி கொண்டு உள்ளார்) பின்பு சம்பகும்பம், நிறைவாக தென்கிழக்கு மூலையில் உள்ள சிதம்பரநாதர் வணங்க வேண்டும்.
சுவரில் புடைப்புச் சிற்பமாக விளங்கும் நிருத்யானந்தாவுக்கு நித்ய பூஜை உண்டு. நந்திகேஸ்வரர் என்ற வெள்ளை நந்தி, மற்றும் வாசுகி சயனம் என்ற பாம்புப் பள்ளியும் இக்கோவிலின் சிறப்பு அம்சங்கள் ஆகும்
திருச்சூர் பூரம்
திருச்சூரில் சித்திரை மாதம் பூர நட்சத்திரத்தன்று பூரம் திருவிழா நடைபெறும். மற்ற கோவில்களிலும் இவ்விழா நடைபெற்றாலும் திருச்சூரில் நடைபெறுவது அனைத்திற்கும் தாய்த் திருவிழா ஆகும். இவ்விழாவின் (குடமாட்டம்) யானை அணிவகுப்பு உலகப் புகழ் பெற்றது.