

ஆலயங்களில் பிரதட்சிணமாக வரும்போது நாம் தரிசிக்கும் சன்னதிகளில் கடைசியாக பைரவர் சன்னதி இருக்கும். சீர்காழி சட்ட நாதர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்களுக்கும் ஒரே இடத்தில் சன்னதிகள் உள்ளன. சில ஸ்தலங்களில் சொர்ணாகர்ஷண பைரவராகவும், கால பைரவராகவும் இருக்கிறார்கள்.
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்குத்தான். காவல் தெய்வமாக விளங்கும் பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாகும்.
திருச்சி மாநகரம் பெரிய கடை வீதியில் க்ஷீபைரவநாத சுவாமிக்கு தனி ஆலயமுள்ளது. தேய்பிறை அஷ்டமியில் ஹோமங்களும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அபிஷேகப் பொருள்கள் மாறுபடும். அவரவர் ராசிக்காரர்களுக்கான பொருட்களை கொண்டு வழிபடுவது மிகச் சிறப்பான பலன்களைத்தரும்.
வளர்பிறை அஷ்டமியில் மாலை 7மணிக்கு மேல் க்ஷீபைரவருக்கு பள்ளயபூஜை நடைபெற்றது. பள்ளயபூஜை என்பது எந்தவித அலங்காரமும் இல்லாமல், அவருக்கே உரித்தான தோற்றத்தில் வைத்து, எதிரே வாழையிலைகளைப் பரப்பி அதன்மேல் நிறைய தயிர்சாதம், கதம்ப சாதம், உளுந்து, மிளகு வடை போன்றவைகளையும் படைத்து, நிவேதனம் செய்து கொண்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்வதாகும்.
பள்ளயபூஜை தரிசனம் செய்வதால் மரண பயம் போகும். விபத்துக்கள் நேராது. எதிரிகளின் வலிமை மட்டுப்படும். அன்னத்தினால் ஏற்படும் தோஷங்கள், திருஷ்டிகள், வியாதிகளில் இருந்து நிவாரணம், செல்வம் பெருகும், கிரக தோஷங்கள் இதனால் ஏற்படும் வறுமை, தம்பதிகளுக்கிடையே ஏற்படும் குறைகளுக்கு நிவர்த்தி என பல பலன்கள் கிடைக்கும்.
சனிபகவான் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதகமாயிருக்கிறாரோ அவர்கள் பள்ளய பூஜையில் கலந்துகொள்வது நல்லது. பள்ளய பூஜை எல்லா ஆலயங்களிலும் நடைபெறுவதில்லை.
பைரவர் அருள் பெற அரளிப் பூவூடன் அர்ச்சனை செய்து மிளகு தீபமேற்றி வழிபடலாம். திருச்சியில் உள்ள இத்தலத்தை தரிசித்து பலன்பெற பக்தர்கள் வருகை எப்போதும் இருக்கும்.
இவை யாவும் நான் வழக்கமாக செல்லும் கோவிலின் அர்ச்சகர் சொல்ல தொகுத்து எழுதியுள்ளேன் படித்து பைரவரின் அருள் பெருங்கள்.