

பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரம், பிரகலாதனுக்காக ஓடிவந்த மகாவிஷ்ணு எடுத்த அவதாரமாகும். தூணைப் பிளந்துகொண்டு வந்து இரண்யனை அழித்த நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் சிறிதும் தணியவில்லை; கோபம் குறையவில்லை. தேவர்களும், முனிவர்களும் கலங்கிப் போனார்கள்.
எல்லோரும் சிவபெருமானிடம் சென்று முறையிட, சிவபெருமானும் தட்சனின் யாகத்தில் தோன்றச் செய்த வீரபத்திரரை அழைத்து நரசிம்மரின் கோபத்தை தணிக்கும்படி பணித்தார். ஆனால் வீரபத்திரரால் நரசிம்மரை நெருங்கக் கூட முடியவில்லை. தவித்துப் போன வீரபத்திரர் ஈசனை நினைத்து தவம் செய்தார்.
சரபேஸ்வரர் யார்?
அப்பொழுது வீரபத்திரரின் மீது கோடி சூரிய பிரகாசத்துடன் ஜோதிப் பிழம்பானது தோன்றி இரண்டறத் தழுவியது. இதனால் வீரபத்திரரின் உருவமே மாறியது. யாளி போன்ற முகத்துடன், கழுத்து முதல் இடுப்பு வரை மனித உடல் கொண்டு, சிம்மம் போன்ற கால்களும் வாலும் கொண்டு சரபேஸ்வரர் எனும் வினோத உருவம் எடுத்தார்.
யாளி, பறவை, மனித முகம் என மூன்றும் கலந்த அபூர்வ தோற்றத்துடன் சரபேஸ்வரராக காட்சியளித்தவர் தன்னுடைய இரு இறக்கைகளால் வீசி நரசிம்மரை குளிர்வித்தார். நரசிம்மரின் கோபத்தை தணித்தார். உக்ரம் தணிந்த நரசிம்மர் சாந்த சொரூபமாக மாறினார். தேவர்களும் முனிவர்களும் ஒன்று கூடி அரியாகிய நரசிம்மரையும், அரனாகிய சரபேஸ்வரரையும் மலர் மாறி பொழிந்து வழிபட்டார்கள். அன்று முதல் சரபேஸ்வரர் வழிபாடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக புராணம் கூறுகிறது.
எட்டு கால்கள், இரண்டு முகங்கள், நான்கு கைகள், மிகக் கூரிய நகங்கள், உடலின் இரு புறங்களிலும் இறக்கைகள், சிங்கம் போல் நீண்ட வால், கருடனைப் போன்று மூக்கு, யானையைப் போன்ற கண்கள், கோரப்பற்கள், யாளியைப் போன்ற உருவமும் உடையவராய் சரபேஸ்வரர் தோன்றினார்.
சரப ஜெயந்தி:
வைகாசி மாதத்தில் (ஏப்ரல் - மே) வரும் பௌர்ணமி நாளான வைகாசி பௌர்ணமி அன்று இறைவனின் பிறந்த நாளாக "சரப ஜெயந்தி" கொண்டாடப்படுகிறது. அன்று கோவில்களில் சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
சரபேஸ்வரர் வழிபாடு மற்றும் நன்மைகள்:
சரபேஸ்வரர் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. சரபேஸ்வரருக்கு அருகம்புல், வில்வம், செவ்வரளி, சிவப்பு ரோஜா போன்ற சிவப்பு நிற மலர்களைக் கொண்டும், வாசனை மலர்களைக் கொண்டும் அர்ச்சனை செய்வது, நிவேதனமாக இளநீர் மற்றும் பழங்களை படைத்தும் வழிபடலாம். சரபேஸ்வரரை வழிபடும் பொழுது அவருக்கு இருபுறமும் இருக்கும் சக்திகளான பிரத்தியங்கரா தேவி மற்றும் சூலினி துர்க்கை ஆகியோரையும் நினைத்து வழிபடுவது முழுமையான பலனைத்தரும்.
மாதப்பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவரை வழிபடுவதால் மிகுந்த பலன்கள் கிடைக்கும். ராகு காலத்தில் குறிப்பாக ஞாயிறு மாலை 4: 30 - 6.00 சிறப்பாக வழிபடப்படும் இவர் நாள்பட்ட நோய்கள், மற்றும் தேவையற்ற மனக் கவலைகளை போக்குபவர். சரபேஸ்வரரை வழிபடுவதன் மூலம் சட்டப் பிரச்னைகள், எதிரிகளின் தொல்லைகள், தீய சக்திகள் மற்றும் மன பயம் போன்றவை நீங்கும்.
சரபேஸ்வரர் வீற்றிருக்கும் கோவில்கள்:
*மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. 12 கால் மண்டபத்தில் சரபேஸ்வரரும், அவருக்கு வலதுபுறம் பிரத்தியங்கரா தேவியும், இடதுபுறம் சூலினி துர்கையும் காணப்படுகின்றனர். இங்கு ராகுகால வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
*தமிழகத்தில் சரபேஸ்வரருக்கு என்று கோவில்கள் குறைவு. சில கோவில்களில் தனியாக சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆனால் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோவிலில் சரபேஸ்வரர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். 13 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட கோவில் இது.
*தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்: யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான இங்கு சரபேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
*கங்கைகொண்ட சோழபுரம்:
தஞ்சை பெரிய கோவிலை போன்ற கட்டிடக்கலை அமைப்பை கொண்ட இக்கோவிலிலும் சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உண்டு.
*மதுரை மீனாட்சி அம்மன் கோவில்: இங்கு தெற்கு கோபுரத்தில் சரபேஸ்வரர் சுதை வடிவில் காணப்படுகிறார்.
*சிதம்பரம் நடராஜர் கோவில்:
இந்த ஆலயத்தின் கோபுரங்களிலும் சரபேஸ்வரரின் சுதை வடிவம் காணப்படுகிறது.
*வைத்தீஸ்வரன் கோவில்:
இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் சரபேஸ்வரர் சுதை வடிவில் வீற்றிருக்கிறார்.
*கோயம்பேட்டில் அமைந்துள்ள மிகவும் பழமையான குறுங்காலீஸ்வரர் கோவிலில் சரபேஸ்வரருக்கு என்று தனி சந்நிதி அமைந்துள்ளது.
*சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூரில் அமைந்துள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் சரபேஸ்வரருக்கு சன்னதி உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரருக்கு வழிபாடு மிகவும் விசேஷசமாக நடத்தப்படுகிறது. அதேபோல் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலிலும் சரபேஸ்வரர் வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.