
கோயம்புத்தூரில் இருக்கும் மிகவும் பழமையான பெருமாள் கோவில் தான் சிங்காநல்லூரில் இருக்கும் உலகளந்த பெருமாள் கோவில். பெருமாள் பக்தர்களுக்கு இது ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாக உள்ளது. இக்கோவில் கரிகாலனால் கட்டப்பட்ட கோவில். கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே வைணவ திவ்யதேசம் இக்கோவிலாகும். ஆனால், இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில் அல்ல. இந்த கோவிலின் சிறப்புகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
மகாபலிச் சக்ரவர்த்தியின் ஆணவத்தை போக்க பெருமாள் வாமன அவதாரம் எடுத்து வந்து ஒரு காலில் மண்ணுலகையும், இன்னொரு காலில் விண்ணுலகையும் அளந்து விஸ்வரூப தரிசனத்தை மகாபலிக்கு காட்டினார். மண்ணுக்கும், விண்ணுக்கும் கால்களை நோக்கிய கோலத்தில் உலகளந்தை பெருமாளாக இங்கே காட்சியளிக்கிறார்.
ஓணம் பண்டிகையின் பத்து நாட்களும் இக்கோவிலில் திருவிழா களைக்கட்டும். வைக்குண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமர்சையாக இங்கு கொண்டாடப்படும்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைப்பெறுகின்றன. விநாயகர் சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, ஓணம் திருநாளில் தேரோட்டம் நடைபெறும்.
இங்குள்ள உற்சவர் சிலை பஞ்சலோகத்தால் ஆனது. தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோவில்களில் பஞ்சலோகத்தால் ஆன விக்ரஹம் இக்கோவில் மட்டுமே உள்ளது. வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி இந்த உலகத்தையே அளந்த உலகளந்த பெருமாளாக கம்பீரமாக காட்சியளிக்கிறார்.
எட்டுக்கைகளுடன் பெருமாள் காட்சியளிக்கிறார். இரு கைகளில் அபய முத்திரையும் மீதி ஆறு கைகளில் சக்கரம், கதை, கேடயம், வில், அம்பராத்தூணி, பியோகச் சக்கரத்துடன் இருக்கிறார். ஏழு நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரம் விண்ணுயர அமைந்துள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலில் பெரிய அளவிலான சக்கரத்தாழ்வார் மற்றும் ஆஞ்சிநேயர் வாயிற்காப்பாளர்களாக காட்சியளிக்கிறார்கள்.
இக்கோவில் கரிகாலனால் கட்டப்பட்ட கோவிலாகும். போர் சம்மந்தமாக கரூர் வந்த கரிகாலச் சோழன் கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் மக்களின் நலன் கருதி இக்கோவிலை நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான குறிப்பு மூலவர் சிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட உலகளந்த மூலவர் பெருமாள் வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது மேலும் இக்கோவிலுக்கு சிறப்பை கூட்டுகிறது.
இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்றும்,1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. உற்சவர் உலகளந்த பெருமாள் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாரும் உடனிருக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பழமையான பெருமாள் கோவிலை நீங்களும் ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவது நன்மை பயக்கும்.