
‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்பதைப் படித்திருக்கிறோம். இப்படி மானிடராய் பிறந்த நாம் இறைவனைத் தொழும்போது நம் ஒவ்வொரு உறுப்பும் அந்த ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு பொருட்களுடன் தொடர்புடையதாக விளங்குகின்றன.
எப்படியெனில், மனித உடம்பில் பாதம் கோபுரத்தையும், முழங்கால் ஆஸ்தான மண்டபத்தையும், தொடை நிருத்த மண்டபத்தையும், தொப்புள் பலிபீடத்தையும், மார்பு மகா மண்டபத்தையும், கழுத்து அர்த்த மண்டபத்தையும், சிரம் கருவறையையும், வலது செவி தட்சிணாமூர்த்தியையும், இடது செவி சண்டிகேஸ்வரரையும், மார்பு நடராசரையும், கழுத்து நந்தியையும், வாய் ஸ்தபன மண்டப வாயிலையும், மூக்கு ஸ்நபன மண்டபத்தையும், புருவ மத்தி லிங்கத்தையும், தலை விமானத்தையும் ஒத்திருப்பதாக ஆன்மிகத் தகவல்கள் அறிவுறுத்துகின்றன.
இதைத்தான் சிதம்பரத்தில் உள்ள பொற்கூரையில் வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 ஓடுகள் உணர்த்துகின்றன. சிதம்பரத்தில் வேயப்பட்டுள்ள ஓடுகளைப் பொருத்தியுள்ள ஆணிகள் 72,000 என்கின்றனர். இவை மனித உடலின் நாடிகளோடு ஒத்துப்போகிறது என்கிறார்கள். இப்படி ஒவ்வொன்றோடும் பொருத்தி வைத்துப் பார்த்தால் ஊன் உடம்பே ஆலயம் என்பது சாலப்பொருந்தும் என்பது உண்மையாகிறது.
தட்சிணாமூர்த்தியின் சின் முத்திரையில் பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் ஆன்மாவையும், மற்ற மூன்று விரல்களும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் சுட்டுவதாக உள்ளது. இப்படி நம் உடம்பும் ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுடன் தொடர்புடையதாக இருப்பதால்தான், ‘ஊனுடம்பே ஆலயம்’ என்றார்கள்.
இப்படி இறைவனை துதித்து விட்டு உலக வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பொழுது, ‘எட்டு எட்டாய் மனித வாழ்வை பிரித்துக் கொள்’ என்கிறோம். அப்படியென்றால் 8 என்ற எண் நமக்கு நன்மை பயப்பதா? ஆம். நன்மையானதுதான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தது எட்டாவது மகனாக அஷ்டமி திதியிலே. எட்டாவது அவதாரமே கிருஷ்ண அவதாரம். மனிதனின் உயரம் அவரது கையால் எட்டு சாண் அளவே. சூரியக் கதிர் பூமியை அடைய எடுக்கும் நேரம் எட்டு நிமிடமே. ஜாதகத்தில் ஆயுள் தானம் என்பது எட்டாம் இடமே. சிவனின் குணங்களும் எட்டே. அவரது வீரச் செயல்களும் எட்டே.
வீரட்டத் தலங்களும் எட்டே. முனிவர்கள் அடையும் சித்தியும் எட்டே. ஐஸ்வர்யமும் எட்டே. திசையும் எட்டே. கோயில் விக்ரகங்களுக்கு சாத்தும் அஷ்டபந்தனம் என்பது எட்டு வகை மூலிகைகளால் ஆன மருந்தே. ஈஸ்வர பட்டம் பெற்ற சனி பகவானின் ஆதிக்க என்னும் எட்டே. இப்படி ஒவ்வொன்றையும் பற்றிய விளக்கமும் பொருளும் கூறிக்கொண்டே போனால் மேலோட்டமாகப் பார்ப்பது ஒன்றாகவும் ஆழ்ந்து அறிந்து பார்ப்பது வேறொன்றாகவும் புலப்படும். அதுதான் ஆன்மிகம் என்பது.
'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
என்கிறார் திருமந்திரத்தில் திருமூலர். நம் உள்ளம் பெரும் கோயிலாகத் திகழ மும்மூர்த்திகளை வணங்கி, மும்மலங்களை அகற்றி இயல்பாய் வாழ முயன்றிடுவோம்! அந்த பக்தியில் கிடைக்கும் ஆனந்தமே நம் உடம்பில் ஒரு தேஜசை கொடுக்கும். அப்போது நம் உடம்பு அப்பழுக்கற்ற ஒரு ஆலயமாகத் திகழும்!