
நடராஜர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சிதம்பரம்தான். நடராஜருக்கு அமைந்த மற்றுமொரு சிறப்பு மிகுந்த ஆலயம் நெய்வேலியில் உள்ள அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்னும் நடராஜர் கோயிலாகும். இக்கோயில் கடலூரில் இருந்து நாற்பத்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கும் நடராஜருக்கு ஆண்டுதோறும் ஆறு மகா அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.
நாம் இன்று படிக்கும் திருவாசகம் நூலானது மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிதம்பரம் கோயிலில் வைத்து சிவபெருமானே தனது கரங்களால் எழுதியது. அந்த நூலின் இறுதியில் ‘திருச்சிற்றம்பலமுடையான்’ என்று இறைவன் கையெழுத்திட்டு இருப்பதே இதற்குச் சான்று. அந்தப் பெயரை நினைவு கூறும் வகையில்தான் நெய்வேலியிலுள்ள ஆலயத்திற்கு ‘அழகிய திருச்சிற்றம்பலமுடையான் தியான சபை’ என்று பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இக்கோயில் நடராஜ பெருமான் இடது காலை தூக்கி ஆட, அருகே அவரது நடனத்திற்கு ஏற்ப கையில் தாளத்துடன் சிவகாமி அம்பாள் ஓசை கொடுத்த நாயகி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில்தான் உலகிலேயே மிக உயரமான ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை உள்ளது. இந்த சிலை 10 அடி ஒரு அங்குல உயரமும், எட்டடி நாலு அங்குள்ள அகலமும், 2400 கிலோ எடையும் கொண்டது. நடராஜர் அருகே வீற்றிருக்கும் சிவகாமியம்மையின் சிலை ஏழடி உயரமும் சுமார் 75 கிலோ எடையும் கொண்டது.
எல்லா கோயில்களிலும் நடராஜரின் பாதத்தில் மாணிக்கவாசகர்தான் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் நடராஜர் பாதத்தில் திருமூலர் இருப்பது விசேஷம். மேலும், வலப்புறத்தில் வியாக்ரபாதரும் இடப்புறம் பதஞ்சலி முனிவரும் காட்சி தருகின்றனர். இந்த இரு முனிவர்களின் பெருந்தவத்திற்கு இறங்கித்தான் நடராஜர் தனது ஆனந்த நடனத்தை அருளியதாக வரலாறு.
நடராஜப்பெருமானுக்கு பஞ்ச சபைகள் எனும் ஐந்து சபைகள் உண்டு. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலமுடையான் கோயிலில் உள்ள நடராஜர் சன்னிதி ‘பளிங்கு சபை’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் நுழைந்தவுடன் நந்தி பகவான் கம்பீரத்துடன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்து விட்டு உள்ளே சென்றதும் தியான மண்டபம் என்னும் பளிங்கு சபையில் நடராஜர் சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார்.
அவர்களை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவுடன் கோயில் சுற்றுச்சுவரில் திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட ‘விதியை வெல்வது எப்படி?’ என்ற புத்தகத்தில் உள்ள அனைத்து தேவார பாடல்களும் பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகத்தினரால் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டுள்ளன. பளிங்கு சபையின் மேற்கு புறத்தில் செம்பொற் ஜோதிநாதர் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தின் பாணமானது நர்மதையாற்றிலிருந்து கொண்டுவரப்பட்டது.
இந்தக் கோயிலில் உள்ள நவகிரக மண்டபம் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் நவகிரக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தாமரை பீடத்தில் பெரிய வட்ட வடிவமான தேரில் சூரிய பகவான் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். இந்தத் தேரை பாகன் ஓட்ட, ஏழு குதிரைகள் இழுத்த நிலையில் உள்ளது. தேரைச் சுற்றி அஷ்டதிக்கு பாலகர்கள் உள்ளனர்.
கோயில் நுழைவு வாயிலின் வலதுபுறத்தில் ஆராய்ச்சி மணி என்ற பெயரில் மணி மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே மனுநீதி முறைப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களின் குறைகளையும் நியாயமான விருப்பங்களையும் ஒரு தாளில் நடராஜருக்கு கடிதமாக எழுதி மனுநீதி முறை பெட்டியில் போட வேண்டும். பின்னர் ஆராய்ச்சி மணியை மூன்று முறை ஒலிக்கச் செய்து விட்டு கோயிலை வலம் வந்து வீட்டிற்குச் செல்கின்றனர்.
பின்னர் அந்த கோரிக்கை கடிதங்கள் காலை நேர பூஜையின்போது தீட்சிதர்களால் நடராஜர் முன்பு ரகசியமாகப் படிக்கப்பட்டு பின்னர் எரியூட்டப்படும். அதைக் கேட்டு பக்தர்களின் குறைகளை இறைவன் நீக்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. இப்படி குறை நீங்கியவர்கள் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி கடிதத்தையும் எழுதி அந்த மனுநீதி முறை பெட்டியில் போடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.