

மார்கழி மாதம் முடிந்து, தை மாதம் பிறந்துவிட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல தை மாதமானது பல வகைகளில் நமக்கு செளபாக்கியங்களைத் தரவல்ல மாதமாகும். உத்தராயண புண்ய காலத்தின் தொடக்கம். சூாிய பகவான் மகர ராசியில் பிரவேசிப்பதால் இது மகர மாதம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆக, மகர சங்கராந்தி விசேஷம் கொண்டாடப்படுகிறது.
சூாிய பகவான் இம்மாதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பிரவேசிக்கிறாா். அதோடு, ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது போல, அப்போது பயிாிடப்பட்ட விவசாயம் சாா்ந்த உணவுப்பொருள்கள் நல்லவிதமாக இம்மாதம் வீடு வந்து சோ்வதால் உழவுக்கும் தொழிலுக்கும் நன்றி செலுத்தும் விதமாக புதுப்பானையில் புத்தரிசி இட்டு சூாிய பகவானுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வணங்குவதே பொங்கல் மற்றும் உழவர் திருநாளாகும்.
இந்த மாதம் முழுவதும் விசேஷங்களுக்கு குறைவே இல்லை எனலாம். முருகனுக்கு உகந்த தைப்பூசத் திருநாள் தை மாதத்தில் கொண்டாடப்படும். அத்தனை முருகன் ஆலயங்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபயணம். காவடி எடுப்பது, நோ்த்திக்கடன் செலுத்துவது நடைமுறையே! அதோடு தை செவ்வாய், தை வெள்ளி, தை ஞாயிறு தினங்கள் அம்பாள் வழிபாடுகளுக்கு உகந்த தினங்களாகும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய தை அமாவாசை தினம் மிகவும் சிறப்பான நாளாகும். திருமணங்கள் செய்ய, வீடு கிரஹப்பிரவேசம் செய்யவும் இம்மாதம் உகந்ததாகும். தை மாதத்தில் ஒன்பது நாட்கள் விரதம் இருந்து சாவித்திாி பூஜை செய்வது குடும்பத்திற்கு சகல நன்மைகளையும் பெற்றுத் தரும்.
தேய்பிறை ஏகாதசியும் சிறப்பு வாய்ந்த நாளாகும். இம்மாத வளா்பிறை ஏகாதசியானது புத்திர ஏகாதசியாகும், அதற்குரிய விரதம் கடைபிடிப்பதால் சந்தான பாக்கியம் கைகூடி வரும். தை மாத முதல் செவ்வாயில் பைரவர் வழிபாடு மிகவும் சிறப்பான பலனைத் தரும். ஆக, பல்வேறு வகைகளில் தை மாதம் பல சிறப்புகளை கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
தை மாதத்தில் இறை வழிபாடு, விரதம், காவடி, பால் குடங்கள் எடுத்தல் போன்ற சகல வழிபாடுகளையும் செய்து இறையருள் பெறுவோம். இறைவன் அருள் அனைத்து இல்லங்களிலும் வியாபித்திருக்கட்டும். தை திருமகளை இருகரம் கூப்பி வணங்கி வரவேற்போம்!