துளசிதாசரை வால்மீகியின் மறு அவதாரம் என்று பலரும் நம்புகிறார்கள். மகா புராணங்களில் ஒன்பதாவது புராணமான பவிஷ்ய புராணத்தில் இறைவன் ஸ்ரீராமனின் புகழைப் பாடுவதற்கு கலியுகத்தில் அவதாரம் எடுப்பதற்காக அனுமனிடம் இருந்து வால்மீகி எவ்வாறு ஒரு வரத்தைப் பெற்றார் என்று சிவன் தனது மனைவி பார்வதியிடம் கூறுகிறார்.
நாகதாசர் தனது ‘பக்தமாலை’ என்னும் நூலில் கலியுகத்தில் வால்மீகியே மீண்டும் துளசிதாசராக அவதாரம் எடுத்ததாக எழுதுகிறார். துளசிதாசர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் கழித்தார். வாரணாசியில் உள்ள கங்கையில் உள்ள துளசி படித்துறை இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் காசியில் அனுமனைப் பார்த்ததாக நம்பப்படும் இடத்தில் சங்கடமோட்ச அனுமன் கோயிலை நிறுவினார்.
துளசிதாசர் காட்டில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆசிரமத்தில் எல்லோரும் உணவு அருந்த உட்கார வாசலில், ‘ராம் ஜெய் சீதாராம்’ என்ற குரல் கேட்டது. வாசலுக்கு வந்த துளசிதாசரிடம் வாசலில் இருப்பவர் தான் ஒரு பிராமணனை கொன்ற கொலையாளி என்றும் தமக்கு உணவு தருமாறும் கேட்டார்.
இது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. ‘தங்களுக்கு சமமாக ஒரு கொலையாளியை எவ்வாறு அமர செய்தார்?’ என வினவ, துளசிதாசரும், ‘அவர் எப்போது ‘ராம் சீதா’ என சொன்னாரோ, அப்போதே அவர் பாவங்கள் எல்லாம் நெருப்பில் இட்ட தூசி போல் ஆகிவிட்டது. அதனாலேயே அவர் இங்கு உட்கார அருகதை உள்ளவராகிறார்’ எனக் கூறி சமாதானப்படுத்தினார்.
ஆனால், மற்றவருக்கு இந்த பதில் திருப்தியாக இல்லாததால் துளசி தாசரிடம், ‘ஒரு கல் நந்திக்கு இந்த ராம் பிரசாதத்தை தாங்கள் கொடுத்து உண்ணச் செய்தால் அவரது இந்தச் செயலை தாங்கள் ஒப்புக்கொள்கிறோம்’ என்று கூறினார்கள். உடனே துளசிதாசர் அருகில் உள்ள ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்திற்கு ஒரு தட்டில் நிறைய உணவை எடுத்துக்கொண்டு கிளம்ப எல்லா பிராமணர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். கோயிலினுள் சென்று ஸ்ரீ விஸ்வநாதரை பலவாறு துதித்து சிவனின் முன் நின்ற கல் நந்தியிடம் உணவை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட, கல் நந்தியும் பெருமூச்சு விட்டு எழுந்து வந்து இலையோடு அந்த உணவை உண்டு விட்டு மறுபடியும் கல் நந்தியாக மாறிவிட்டது.
இந்த ஆச்சரியத்தைக் கண்டு எல்லோரும் ஈசனின் புகழ் பாடி வணங்கி துளசிதாசருக்கு வணக்கம் செலுத்தி தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டனர். பக்தியின் முன் சாஸ்திரமோ வேதமோ பிற்பட்டது என்பது துளசிதாசரின் இச்செயலால் எல்லோரும் உணர்ந்தனர்.