வைகாசி விசாகம்: முருகனுக்கு உகந்த 17 அபிஷேகங்களும் அவற்றின் அற்புதப் பலன்களும்!

முருகப்பெருமானுக்கு செய்யும் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பான பலன் கிடைக்கும் என்ற சாஸ்திரங்கள் சொல்கின்றன.
Murugan abhishekam benefits
Murugan abhishekam benefitsImage credit- AI Image
Updated on

27 நட்சத்திரங்களிலும் விசாக நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் நாம் முறையாக வழிபாடுகளை மேற்கொண்டால் முன்னேற்றங்கள் படிப்படியாக வந்து கொண்டேயிருக்கும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகத்தன்று வள்ளல் முருகப்பெருமானை உள்ளத்தில் நினைத்து வழிபட்டால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும்.

இந்தாண்டு வைகாசி விசாகம் நாளை சனிக்கிழமை (மே 30-ம்தேதி) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் (மே 30-ம்தேதி) பௌர்ணமி திதி பகல் 12.55 மணிக்கு தொடங்கி மறுநாள் மே 31-ம்தேதி பகல் 2.45 மணி வரை உள்ளது. விசாக நட்சத்திரம் மே 29-ம்தேதி பகல் 12.31 மணிக்கு தொடங்கி மறுநாள் (மே 30-ம்தேதி) பகல் 2.18 மணி வரை உள்ளது.

தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று அபிஷேகம். அதன்படி முருகப் பெருமானுக்கு செய்யும் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பான பலன் கிடைக்கும் என்ற சாஸ்திரங்கள் சொல்கின்றன.

மொத்தமாக அபிஷேகத்திற்கு பணம் செலுத்த முடியாதவர்கள், தங்களுடைய பிரச்சனைகள், குறைகள் தீருவதற்கு உரிய பொருளை அபிஷேகத்திற்கு வாங்கிக் கொடுத்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
வைகாசி விசாகம்: விசாகனின் அவதாரத் திருநாள்!
Murugan abhishekam benefits

பசும்பால் - பாலால் அபிஷேகம் செய்தால் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். தீர்க்காயுசுடன் நீண்ட காலம் வாழவும், ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.

பஞ்சாமிர்தம் - பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படவும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கச் செய்யும்.

தயிர் - குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிகள் முருகனுக்குப் பசுந்தயிரால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறந்த பரிகாரமாக நம்பப்படுகிறது.

சந்தனம் - உடலுக்குக் குளிர்ச்சியையும், மன அமைதியையும், அழகையும் தரும். பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும்.

மஞ்சள் - தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். மேலும், இது வீட்டில் உள்ள துரதிர்ஷ்டங்களைத் தடுத்து நேர்மறை ஆற்றலை உருவாக்குவதோடு, பிறரைக் கவரும்படியான வசீகரத் தோற்றத்தையும் அழகையும் தரும்.

குங்குமம் - முருகப்பெருமானுக்குச் செய்யப்படும் குங்கும அபிஷேகம் செவ்வாய் தோஷங்களை நிவர்த்தி செய்யவும், திருமணத் தடை அகலவும், வாழ்வில் சுபிட்சம் உண்டாகவும், சிறந்த பலன்களைத் தரும். குல விருத்தி, குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும்.

நல்லெண்ணெய்- நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்தால் நல்ல எண்ணம் உடையவர்களின் பழக்கம் நமக்கு கிடைக்கும்.

தேன் - தேன் அபிஷேகம் செய்தால் தித்திப்பான செய்தி வரும். இனிய குரல் வளம் பெறவும், வாழ்க்கையில் இனிமை தவழவும் உதவும்.

பச்சரி மாவு - பச்சரி மாவால் அபிஷேகம் செய்தால் கடன்கள் தீரும்.

சர்க்கரை - சர்க்கரையால் அபிஷேம் செய்தால் சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர்.

இளநீர் - இளநீரால் அபிஷேகம் செய்தால் இனிய சந்ததிகள் பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கவும், மகிழ்ச்சி பெருகவும் வழிவகை செய்யும்.

மாம்பழம் - மாம்பழத்தால் அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும்.

விபூதி (திருநீறு) - முருகனுக்கு மிகவும் பிடித்தமான அபிஷேகம் இதுவாகும். திருநீரால் அபிஷேகம் செய்தால் திக்கெட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிட்டும். சகல பாவங்களும் நீங்கி, பிறவிப் பயனை அடைய உதவும்.

அன்னம் - அன்னத்தால் அபிஷேகம் செய்தால் சருமநோய்கள் அனைத்தும் தீர்ந்து போகும்.

பன்னீர் - பன்னீரால் அபிஷேகம் செய்தால் பார்போற்றும் வாழ்வு அமையும். மன அமைதி, புத்துணர்ச்சி மற்றும் லட்சுமி கடாட்சம் கிடைக்கச் செய்யும். தொழில், வாழ்க்கையில் வளர்ச்சியை தரும்.

எலுமிச்சை சாறு - மனதில் தோன்றும் தேவையற்ற பயங்கள் மற்றும் எதிர்ப்புகள் அகல உதவும்.

கரும்புச்சாறு - தீராத நோய்கள் மற்றும் பிணிகள் நீங்கி உடல் பலம் பெற உதவும்.

வைகாசி விசாகம் மட்டுமன்றி முருகனுக்குரிய சஷ்டி திதி, கார்த்திகை மற்றும் விசாக நட்சத்திர நாட்களில் இந்த அபிஷேகங்களைச் செய்வது கூடுதல் பலனைத்தரும்.

வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமான வழிபடுவதன் மூலம் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க இயலும். பகை விலகும். பாசம் பெருகும். தொகை கிடைக்கும். தொல்லைகள் அகலும். அன்றைய தினம் இயன்றவரை அன்னதானம் செய்யலாம். வடை, மோர், பானகம், தயிர் சாதம் போன்றவற்றையும் தானம் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
வைகாசி விசாகம்: முக்கியத்துவம் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை...
Murugan abhishekam benefits

விசாகத்தன்று வேலவனை வழிபட்டால் வெற்றி கிடைக்கும். குமரனை வழிபட்டால் குறைகள் தீரும். கந்தனை வழிபட்டால் கவலைகள் அகலும். சண்முகனை வழிபட்டால் சந்தோஷங்கள் சேரும்.

logo
Kalki Online
kalkionline.com