முருகன், குமரன், சண்முகன், கந்தன், வேலவன், ஆறுமுகன், கார்த்திகேயன், காங்கேயன் என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் முருகப்பெருமானுக்கு விசாகன் என்றொரு திருநாமமும் உண்டு. முருகப்பெருமான் வைகாசி விசாகத்தன்று அவதரித்ததால் இத்திருநாமம் அவருக்கு ஏற்பட்டது. முருகனுடைய அவதாரத் திருநாளான வைகாசி விசாகம் அநேகமாக வைகாசி மாத பௌர்ணமி நாளன்று விசாக நட்சத்திரத்தன்று வரும். இத்திருநாள் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வைகாசி விசாகம் என்று சிறப்பித்து கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகக் கருதப்படுவது கிருத்திகை நட்சத்திரமாகும். மாதாமாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்திற்கு பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். அதே போல தை மாதம் வரும் பூச நட்சத்திரமும் முருக வழிபாட்டுக்குரியது. ஆனால், வைகாசி விசாகம் முருகப் பெருமானின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததற்கே மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. பூமியில் தாராகாசுரன், சூரபத்மன், சிங்கமுகன் என்ற மூன்று அசுரர்கள் பூமியிலும், தேவலோகத்திலும் பெருத்த அழிவை ஏற்படுத்தினார்கள். அவர்கள் சிவபெருமானின் மகனின் கரங்களால் மட்டுமே இறக்க வேண்டும் என்னும் வரம் பெற்றனர். தேவர்கள் சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு ஈசனிடம் சென்று முறையிட, சிவபெருமானின் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகள் வெளிவந்தன. அந்தப் பொறிகளை அக்னி தேவரும், வாயு தேவரும் எடுத்துக் கொண்டு போய் கங்கையில் சமர்ப்பிக்க, கங்கா தேவி அவற்றை சரவணப்பொய்கையில் கொண்டு போய் சேர்க்கிறாள்.
ஆறு தீப்பொறிகளும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களை ஆலிங்கனம் செய்ய, அங்கே ஞானம், ஐஷ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் என்னும் அருமையான குணங்களுடன் ஆறு அழகான குழந்தைகளாக உருவாகும் முருகனை கார்த்திகைப் பெண்டிர் அறுவர் வளர்க்கின்றனர். பார்வதி தேவி அங்கே வந்து எல்லாக் குழந்தைகளையும் சேர்த்து ஆரத் தழுவ, ஓருடல், ஆறுமுகங்கள், பன்னிரு விழிகள், பன்னிரு கைகளுடன் முருகன் உருவாகிறார்.
இந்த வைபவம் வைகாசி விசாகத்திருநாளன்று நடைபெற்றதால், இதுவே முருகனின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி. தைர்யம், வீரம், வீடு, மனை, வகனப்பிராப்தி, ரத்த சம்பந்தமான உறவுகள், செல்வம் போன்ற பல விஷயங்களுக்கு அதிபதி முருகக்கடவுள். அறுபடை வீடுகளிலும் முருகனின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், திருச்செந்தூரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இங்கே வைகாசி விசாகம் 10 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளன்று பால் குடம் சுமந்தும், காவடி எடுத்தும் முருகப்பெருமானை பக்திபூர்வமாக வழிபடுகின்றனர். முருகன் மட்டும் அல்லாது சிவன் மட்டும் அம்பிகையின் வழிபாடும் இந்தத் திருநாளில் செய்யப்படுகிறது. வைகாசி விசாகம் வெப்பம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் வருவதால் திருச்செந்தூர் சுப்ரமணியர் சுவாமி திருக்கோவிலில், கருவறையில் தண்ணீர் நிற்குபடி வைத்து, இறைவனுக்கு வெப்ப சாந்தி உற்சவம் நடைபெறும். இந்த நாளில் முருகனுக்கு வெப்பத்தைத் தணிக்கக் கூடிய உணவு வகைகளான சிறுபருப்பு பாயசம், நீர்மோர் போன்றவை பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.
அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் பக்தியுடன் முருகனின் அபிஷேகத்திற்காக பால் குடம் தலையில் சுமந்து வந்து சமர்ப்பிப்பது வழக்கம். இந்த வருட வைகாசி விசாகத் திருநாள் ஜூன் மாதம் 9ஆம் தேதி (திங்கட்கிழமை) வருகிறது. இது நம் நாட்டில் மட்டுமல்லாமல் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலும் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாமும் முருகப்பெருமானின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத்தன்று முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு முருகப்பெருமானின் திருவருளைப் பெறுவோம்.