
வைகாசி விசாகம் முருகப்பெருமானின் அவதார தினமாக விளங்கும் புனிதமான நாள். இந்த நாளில் முருகனின் சக்தியானது அதிகமாக இருக்கும். விசாகம் என்பது குரு பகவானின் நட்சத்திரம். தமிழ் மாதத்தில் இரண்டாவது மாதமாக வரக்கூடிய இந்த வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரமும் இருக்கக்கூடிய இந்த நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்தால் பலன் அதிகமாக இருப்பதுடன் நம்மை கைவிட மாட்டான் வேலவன். விசாகம் நட்சத்திரம் அன்று நாம் என்ன வேண்டி வழிபட்டாலும் அது நிச்சயமாக நடக்கும் என்பது உறுதி.
நேற்று (ஜூன் 8) மதியம் 2:10 மணிக்கு தொடங்கிய வைகாசி விசாகம் இன்று மாலை 4:40 மணி வரை உள்ளது. எனவே வைகாசி விசாகம் 9-ம்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதனால், காலை 6:00 முதல் 07:20 மணி, காலை 09.10 மணி முதல் 10.20 மணி வரை முருகனை வழிபட சிறந்த நேரம் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை வேலைக்கு சென்று திரும்புபவர்கள் மாலை 6 மணிக்கு வழிபடலாம். ஆனால், 4:40 மணிக்கு விசாகம் முடிவதால் காலை வழிபாடு சிறந்தது.
6 விளக்குகள், செவ்வரளியால் பூஜை செய்வது சிறப்பு. முருகன்பெருமானுக்கு உகந்த நாளான இன்று வீட்டில் கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் அல்லது முருகப்பெருமானின் நாமங்களை சொல்லி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.
முருகப்பெருமானுக்கு ஆறுமுகங்கள் என்பதால் ஆறு வகையான பிரசாதங்களை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். பால் பாயாசம், சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், மல்லி சாதம் என ஆறு வகையான பிரசாதங்களை முருகப்பெருமானுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்ய வேண்டும். முருகனுக்கு பிடித்தமான தினை மாவில் பிரசாதம் செய்தும் வழிபடலாம்.
வைகாசி விசாகத்தின் போது இந்த பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் சேரும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
இந்த நாளில் வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், நேர்மறை ஆற்றல் ஆகியவை பெருகுவதற்கு வீட்டில் சில சிறப்பு பொருட்களை வாங்கி வைப்பது மிகவும் பலன் அளிக்கும். இந்த பொருட்கள் நவகிரகங்களில் செல்வத்தை அருளும் சுபகிரகங்களின் ஆசியை நமக்கு பெற்றுத்தரும்.
மாலையில் இந்த பொருட்களை சிறிதளவு வாங்கி வீட்டில் வைப்பதன் மூலம் நன்மைகள் தொடர்ந்து நிகழும். ஆன்மிக சக்திகள் பெருகி வாழ்வில் செழிப்பு உண்டாகும்.
இந்த நாளில் உங்கள் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அவருக்குரிய அபிஷேகப் பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம். எல்லாப்பொருட்களையும் வாங்கிக்கொடுக்க முடியாது என்றால் பால் மட்டுமாவது வாங்கிக்கொடுங்கள்.
சில பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் வீட்டில் கஷ்டம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். பணவரவு அதிகரிக்கும். சுபகாரியங்கள் நடக்கும்.
அந்த வகையில் வீட்டில் சுபகாரியங்களை ஏற்படுத்த கூடியதாகவும், குபேரனுக்கு உகந்ததாகவும் இருக்கக்கூடிய மஞ்சளை வாங்கி வைக்க வேண்டும்.
குபேரன் வாசம் செய்யும் ஊறுகாயை இன்று வாங்கி வீட்டில் வைக்கலாம். உங்கள் வீட்டில் ஊறுகாய் இருந்தாலும் ஒரு 10 ரூபாய்காவது ஊறுகாய் வாங்கி வைப்பது குபேரனின் அருள் கிடைக்க வழிவகுக்கும்.
முருகனுக்கு பிடித்த பழங்களாக மாம்பழம், வாழைப்பழத்தை வாங்கலாம். அல்லது முக்கனிகளான மா, பழ, வாழை வாங்கலாம்.
ஆறு எண்ணிக்கையில் கசப்பு இல்லாத காய்கறிகளை வாங்கி வைக்கலாம். முருகனுக்கு
உகந்த அபிஷேக பொருளான சந்தனத்தை வாங்கி வைக்கலாம்.
கல் உப்பு, மகாலட்சுமியின் அம்சமான துவரம் பருப்பு, நாட்டு சர்க்கரை, குருவின் ஆற்றல் நிறைந்த வெள்ளை சர்க்கரை, சுக்கிரனின் ஆற்றல் நிறைந்த பால், பூஜை பொருட்களாக சந்தனம், பச்சை கற்பூரம், ஏலக்காய், விரலி மஞ்சள், கிராம்பு இந்த பத்து பொருட்களுடன் முடிந்தால் எட்டு கிராம் வெள்ளி வாங்கி வைப்பது சுக்கிரனை வசியப்படுத்தி செல்வத்தை பெருக்கும்.
மேலும் ஆறு வெற்றிலை, மூன்று பாக்கு ஆகியவற்றை முருகனுக்கு படைத்து வழிபடுவது அதிர்ஷடத்தை அள்ளித்தரும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புனிதமான நாளில் எண்ணெய் வகைகளை வாங்குவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
இந்த வழிபாட்டு முறைகளை வைகாசி விசாகமான இன்று செய்வது நம் வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வரும்.
இதில் கூறப்பட்டுள்ள எல்லா பொருளையும் வாங்க முடியாவிட்டாலும் பத்து ரூபாயை கொடுத்து ஒரு பொருளையாவது வாங்கி வைப்பது நல்லது.