சிவனின் நெற்றிக்கண்ணும் ஆறு பொறிகளும்: வைகாசி விசாகத்தன்று நடந்த அதிசயம்!

Vaikasi Visakam
Vaikasi VisakamAI Image
ரேவதி பாலு

சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சமீபத்தில் ஒரு நாடகம் மெரீனா தியேட்டர்ஸால் மேடையேற்றப்பட்டது. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

Updated on

முருகனுடைய அவதாரத் திருநாளான வைகாசி விசாகம் அநேகமாக வைகாசி மாத பௌர்ணமி நாளன்று விசாக நட்சத்திரத்தன்று வரும்.  இத்திருநாள் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வைகாசி விசாகம் என்று சிறப்பித்து கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

முருகன், குமரன், சண்முகன், கந்தன், வேலவன், ஆறுமுகன், கார்த்திகேயன், காங்கேயன் என்று பல்வேறு நாமங்களால் துதிக்கப்படும் முருகப்பெருமானுக்கு விசாகன் என்றொரு திருநாமமும் உண்டு.  முருகப்பெருமான் வைகாசி விசாகத்தன்று அவதரித்ததால் இத்திருநாமம் அவருக்கு ஏற்பட்டது.

முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகக் கருதப்படுவது கிருத்திகை நட்சத்திரமாகும்.  மாதாமாதம் வரும் கிருத்திகை நட்சத்திரத்திற்கு பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். அதேபோல தை மாதம் வரும் பூச நட்சத்திரமும் முருக வழிபாட்டுக்குரியது.  ஆனால், வைகாசி விசாகம் முருகப் பெருமானின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததற்கே மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது.  பூமியில் தாராகாசுரன், சூரபத்மன், சிங்கமுகன் என்ற மூன்று அசுரர்கள் பூமியிலும், தேவலோகத்திலும் பெருத்த அழிவை ஏற்படுத்தினார்கள். அவர்கள் சிவபெருமானின் மகனின் கரங்களால் மட்டுமே இறக்கவேண்டும் என்னும் வரம் பெற்றனர்.

தேவர்கள் சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு ஈசனிடம் சென்று முறையிட, சிவபெருமானின் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகள் வெளிவந்தன.  அந்தப் பொறிகளை அக்னி தேவரும், வாயு தேவரும் எடுத்துக்கொண்டு போய் கங்கையில் சமர்ப்பிக்க,  கங்கா தேவி அவற்றை சரவணப்பொய்கையில் கொண்டு போய் சேர்க்கிறாள்.

இதையும் படியுங்கள்:
ஒரே சங்கு வடிவ ஸ்ரீ வல்லப சேத்திரம்: திருவாழ் மார்பன், இரட்டை கொடிமரம், மழலை பாக்கியம் அருளும் அதிசய தலம்!
Vaikasi Visakam

ஆறு தீப்பொறிகளும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களை ஆலிங்கனம் செய்ய, அங்கே ஞானம், ஐஷ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் என்னும் அருமையான குணங்களுடன் ஆறு அழகான குழந்தைகளாக உருவாகும் முருகனை கார்த்திகைப் பெண்டிர் அறுவர் வளர்க்கின்றனர்.  பார்வதிதேவி அங்கே வந்து எல்லாக் குழந்தைகளையும் சேர்த்து ஆரத்தழுவ, ஓருடல், ஆறுமுகங்கள், பன்னிரு விழிகள், பன்னிரு கைகளுடன் முருகன் உருவாகிறார். இந்த வைபவம் வைகாசி விசாகத்திருநாளன்று நடைபெற்றதால், இதுவே முருகனின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.             

முருகன் நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி.  தைர்யம், வீரம், வீடு, மனை, வகனப்பிராப்தி, ரத்த சம்பந்தமான உறவுகள், செல்வம் போன்ற பல விஷயங்களுக்கு அதிபதி முருகக்கடவுள்.

அறுபடை வீடுகளிலும் முருகனின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், திருச்செந்தூரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.   இங்கே வைகாசி விசாகம் 10 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளன்று பால் குடம் சுமந்தும், காவடி எடுத்தும் முருகப்பெருமானை பக்திபூர்வமாக வழிபடுகின்றனர். அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் பக்தியுடன் முருகனின் அபிஷேகத்திற்காக பால் குடம் தலையில் சுமந்து வந்து சமர்ப்பிப்பது வழக்கம்.

இந்த வருட வைகாசி விசாகத் திருநாள் 9மே மாதம் 30 ஆம் தேதி0 இன்றைய தினம் வருகிறது.  இது நம் நாட்டில் மட்டுமல்லாமல் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலும் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  நாமும் முருகப்பெருமானின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத்தன்று  முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு முருகப்பெருமானின் திருவருளைப் பெறுவோம்.

logo
Kalki Online
kalkionline.com