மகாவிஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது 'ஏகாதசி விரதம்.' இந்த விரதத்தை கடைப்பிடிப்பது, 'அஸ்வமேத யாகம்' செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள். ஏகாதசி விரதம் என்பது மாதத்திற்கு இரண்டு முறை, வளர்பிறையில் ஒருமுறை, தேய்பிறையில் ஒருமுறை வருவதாகும். ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி தினத்தன்று இருக்கும் விரதத்திற்கு ஏற்றவாறு நற்பலன் கிடைக்கும் என்றாலும், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி விரதமே அனைத்து ஏகாதசி விரதத்திலும் சிறந்தது. ஏனென்றால், அது வைகுண்ட பதவிக்கே வழிவகுக்கும் என்பதால்.
மார்கழி மாதம் வளர்பிறை பதினொன்றாம் நாள் வைகுண்ட ஏகாதசியாக இந்துக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றுதான் பெருமாளின் பக்தர்களுக்காக வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன என்று நம்பப்படுகிறது.
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று வைகுந்தத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து அதன் வழியாக மது, கைடபர் என்னும் இரு அசுரர்களை பகவான் பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார். அந்த அசுரர்கள் இரு கரம் கூப்பி, "பகவானே! தாங்கள் எங்களுக்கு இன்று செய்த அனுக்கிரஹத்தை ஒரு உத்ஸவமாகக் கொண்டாட வேண்டும். வருடந்தோறும் இந்த நாளில் பெருமாள் ஆலயங்களின் சொர்க்க வாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு மோட்சம் கிடைக்க அருள வேண்டும்" என்று வரம் கேட்டனர். இவ்வாறாக வைகுண்ட ஏகாதசி ஆலயங்களில் கொண்டாடுவது பழக்கத்தில் வந்தது. இதனால் வைகுண்ட ஏகாதசிக்கு 'மோட்ச ஏகாதசி' என்ற பெயர் வந்தது.
இவ்வளவு சிறப்புமிக்க இவ்விரதத்தை எவ்வாறு கடைபிடிப்பது? வைகுண்ட ஏகாதசி விரதம் என்பது மூன்று நாட்கள் இருக்க வேண்டிய விரதம் ஆகும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விரதம் நாளை வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அதற்கு முதல் நாளான இன்று தசமி திதியில் இந்த விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அதாவது, இன்று பகல் பொழுதுடன் உணவு சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டு பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதத்தை துவங்கலாம்.
நாளை அதிகாலை பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை கண்டு தரிசித்த பிறகு அன்று பகல் முழுவதும் முடிந்தால் உணவு உட்கொள்வதை முழுவதும் தவிர்த்து விடலாம். அல்லது பால், பழம் போன்று எளிய உணவு உட்கொண்டு மாலையிலும் பெருமாள் தரிசனம் செய்ய வேண்டும். நாளை மறுநாள் துவாதசி திதி. அன்று அதிகாலையிலேயே தளிகை முடித்து பெருமாளுக்கு நிவேதனம் செய்து பாரணை செய்து விரதத்தை முடிக்க வேண்டும். முதல் நாள் இரவு கண் விழித்தபோதிலும் துவாதசியன்று பகலில் தூங்காமல் தவிர்த்து மாலையில் மீண்டும் பெருமாளை தரிசித்து விட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம்.
இந்து சமயத்தவர்கள், குறிப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று கண்டிப்பாக விரதம் இருந்து பெருமாளை வழிபடுகின்றனர். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த வைகுண்ட ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாளைத் தொழுதால் அழிந்து விடும் என்பது இந்துக்களின் உறுதியான நம்பிக்கை.