மயிலாப்பூர், சென்னையின் மிகப் பழைமையான பகுதிகளில் ஒன்றாகும். இது கி.பி. 2ம் நூற்றாண்டுக்குப் பிற்பகுதியில் உருவாகி இருக்கும் என்று கருதப்படுகிறது. மயிலாப்பூரின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் கொண்டாடும் நோக்கத்துடன் கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் ‘மயிலாப்பூர் விழா’ கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 21வது ஆண்டு மைலாப்பூர் திருவிழா இன்று துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவினை தொடர்ந்து நடத்துவதற்கு சுந்தரம் ஃபைனான்ஸ் ஆதரவு அளித்து வருகிறது.
மயிலாப்பூர் திருவிழா, நமது பாரம்பரியமான இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலாசார நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மகிழ்ச்சியான இயக்கமாக வளர்த்துள்ளது. இது மயிலாப்பூர்வாசிகளை மட்டுமில்லாமல், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் மயிலாப்பூர் திருவிழாவின் சிறப்பு அம்சங்கள்: பாரம்பரிய நடை பயணங்கள், கூட்டு நடன, இசை, நாட்டுப்புறக் கலைகள், கோலப்போட்டி மற்றும் கோலக் காட்சிகள், உணவு - கைத்திறன் பயிற்சிகள், சதுரங்கப் போட்டிகள், பழைய பாரம்பரிய விளையாட்டுகள் (பல்லாங்குழி, தாயக்கட்டம் போன்றவை).
மயிலாப்பூர் திருவிழா, மயிலாப்பூரின் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயிலை ஒட்டிய மாடவீதிகளில் நடைபெறும்.
மயிலாப்பூர் திருவிழாவின் இன்னொரு முக்கிய பிரச்சாரம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வினை ஏற்படுத்தி, துணிப் பைகளின் பயன்பாட்டினை பரவலாக்குதல் ஆகும். அதன்படி, பதிமூன்றாவது ஆண்டாக பத்தாயிரம் துணிப் பைகள் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக வழங்கப்படும். இந்த முயற்சியில் பெங்களூருவைச் சேர்ந்த ரூவா அறக்கட்டளை உதவுகிறது. அவர்கள் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக்கின் பாதிப்புகளை விளக்கி அறிவுரை வழங்குகிறார்கள்.
மேலும், இந்த விழாவினை நடத்தும் சுந்தரம் ஃபைனான்ஸ், சுத்தம் மற்றும் சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘தூய்மையான மயிலாப்பூர்’ இயக்கத்தை நடத்துகிறது.
மயிலாப்பூர் திருவிழாவின் அங்கமாக ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி லேடி சிவசாமி அய்யர் பள்ளியில் காலை 8 முதல் 11 மணி வரை நடைபெறும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கைவினைப் பயிற்சிகள் (ஸ்டிரிங் ஆர்ட், மண்டலா கோஸ்டர் தயாரிப்பு) இடம்பெறும்.
கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் மயிலாப்பூரின் கலாசார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களை (தனிநபர் அல்லது நிறுவனத்தை கௌரவிக்கும் வகையில் ‘ஸ்பிரிட் ஆஃப் மயிலாப்பூர்’ விருது வழங்கப்பட உள்ளது. 2025ம் ஆண்டுக்கான விருது ஜனவரி 12 மாலை 5.45 மணிக்கு அறிவிக்கப்படும்.
மயிலாப்பூர் திருவிழா குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுந்தரம் ஃபைனான்ஸ் தலைவர் ரஜீவ் லோச்சன், "பழம்பெரும் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வளர்ப்பதே எங்கள் நோக்கம். தாத்தா, பாட்டி தலைமுறையும் புதிதாக வளர்ந்து வரும் குழந்தைகளும் பாரம்பரியத்தைக் கொண்டாட இது ஒரு நல்ல வாய்ப்பாகும்" என்று கூறினார்.
விழா இயக்குநர் வின்சென்ட் டி'சௌசா, "இந்த ஆண்டு இரண்டு புதிய அம்சங்கள் உள்ளன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கோலவிழி அம்மன் கோயில் வளாகத்தில் கோலப் போட்டி, பல்லாங்குழி மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடைபெறும்" என்று அவர் குறிப்பிட்டார்.