
சனி பகவானின் பிறப்பைக் குறிக்கும் ஒரு சிறப்பு நாள் சனி ஜயந்தி வைகாசி மாதத்தில் வரும் மாத அமாவாசை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சனி பகவானை வழிபட, கஷ்டங்களிலிருந்து விடுபடலாம், கர்மக் கடன்களைத் தீர்க்கலாம், ஒழுக்கம், பணிவு, ஆன்மிக வளர்ச்சி போன்றவற்றை மேம்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
சனி பகவானிடமிருந்து வரும் சக்தி அலைகள் யாராவது நீதி, நேர்மை, சத்தியம், அன்பு, அஹிம்சை, பண்பு, பக்திக்கு விரோதமான காரியங்களை செய்தால் அவர்களுக்கு பலவிதமான இடையூறுகளையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும், துன்பங்களையும், தீமைகளையும் உண்டாக்குகிறது. இதன் காரணமாகத்தான் சனி பகவானுக்கு பயப்படுகிறார்கள்.
பொதுவாக, சனி பகவான் காக்கை வாகனத்தின் மீது அமர்ந்து அருள்பாலிப்பார். ஆனால், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பம் பகுதியில் உள்ள சனி பகவான் கோயிலில் கல்லில் யந்திரம் செதுக்கப்பட்டு அதுவே சனி பகவானாக வணங்கப்பட்டு வருகிறது. இது சித்தர்களால் உருவாக்கப்பட்ட சனி பகவான் என்கிறார்கள்.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ளது திருக்கொள்ளிக்காடு இங்குள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தில் சனி பகவான் கலப்பை ஏந்திய வடிவில் தனிச் சன்னிதியில் பொங்கு சனி எனும் அவதாரத்தில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கிறார். சனீஸ்வரருக்கு அருகில் தனிச்சன்னிதியில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீ மகாலட்சுமி தாயார். எனவே, திருக்கொள்ளிக்காட்டில் பொங்கு சனீஸ்வரரையும் மகாலக்ஷ்மி தாயாரையும் மனதார வேண்டிக்கொண்டாலே, மங்கல காரியங்கள் சீரும் சிறப்புமாக நடைபெறும். ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். இங்கு நவகிரகங்களும் ‘ப’ வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம், குச்சனூரில் அமைந்துள்ளது பிரபலமான சனி பகவான் கோயில். சனி தோஷம் உடையவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து மனமுருக வேண்ட, அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு காகத்திற்கு அன்னமிட்டு வழிபடுகின்றார்கள். இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில் இது. வேறு எங்கும் இல்லாத வழக்கமாய் பூஜைக்கு மண்ணாலான காக்கை பொம்மைகளை காணிக்கையாக செலுத்துவது போன்ற பல அதிசயமான விஷயங்கள் நிறைந்துள்ள ஒரே கோயில் இதுவென்பது சிறப்பு.
சனி பகவானை எந்தக் கோயிலிலும் வலம் வர முடியாது. ஆனால், அவரை வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ள ஒரே கோயில் திருநெல்வேலி மாவட்டம், இலத்தூர் மதுநாத சுவாமி கோயில் மட்டும்தான். இங்கு மட்டுமே சனி பகவான் அருள் ஆசி வழங்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறார். அகத்தியருக்கு ஏழரைச் சனி நடைபெற்ற காலத்தில், இங்கு வடக்கு நோக்கி அமர்ந்து சனீஸ்வர ஸ்தோத்திரம் பாடியபோது, சனீஸ்வர பகவான் அகத்தியருக்குக் காட்சியளித்தார். இதன் அடிப்படையில், இங்கு பொங்கு சனியாக சனீஸ்வர பகவான் தனிச்சன்னிதியில், வலம் வந்து வழிபடும் விதம் எழுந்தருளியுள்ளார்.
மயிலாடுதுறை அருகிலுள்ள கூறை நாடு புணுகீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனி பகவான் சிவப்பு நிறக் கல்லில் காட்சி தருகிறார். இது இங்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. சனி பகவான் திருநள்ளாறில் இருப்பதைப் போன்று கிழக்கு நோக்கி தனி விமானத்துடன் கூடிய கருவறையில் அமர்ந்துள்ளார்.
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது கல்பட்டு எனும் ஊர். இங்கு வக்கிர சனி பகவானுக்கு தனிக் கோயில் உள்ளது. சனிக்கிழமை அன்று அகல் விளக்கில் கருப்பு துணியில் எள் வைத்து நல்லெண்ணெய் விளக்கேற்றி சன்னிதியை 9 முறை வலம் வந்து சனி பகவானின் வலது புறமாக நின்று வழிபட அனைத்து கஷ்டங்களும் விலகும் என்பது ஐதீகம்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் வன்னிவேடு அகத்தீஸ்வரர் சிவன் கோயில் குளத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷம். இங்குள்ள சனீஸ்வர பகவானுக்கு 17 பாகற்காயை மாலையாகத் தொடுத்து அணிவித்து தீபமேற்றி வழிபட வீடு, கட்டடம் கட்டும் பணி தடங்கள் இல்லாமல் நடக்கும் என்பது நம்பிக்கை.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது மங்கம்மாபேட்டை. இங்குள்ள மங்கள சனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனி பகவான், தன்னுடைய மனைவி நீலா தேவியை மடியில் அமர்த்தியபடி கல்யாண சனீஸ்வரராக காட்சியளிக்கிறார். எனவே, இந்த ஆலயத்தில் இங்கே சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், பீமரதசாந்தி போன்ற சுப விசேஷங்களையும் செய்கிறார்கள். இவ்வாறு செய்வதால், ஆயுள் விருத்தியாகி, குடும்ப நலனும் மேம்படுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பிரமிடு போன்று அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் கருவறை விமானம் மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்கிறது.