
ஒருவருடைய வாழ்க்கையில் செய்யக்கூடாத மிகவும் முக்கியமான ஒன்று கடன் வாங்குவதுதான். வட்டிக்கு கடன் வாங்கக்கூடிய பலரும் அந்த வட்டியை கட்ட முடியாமலும், கடனை அடைக்க முடியாமலும் கஷ்டப்படுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வரவை விட செலவுகள்தான் அதிகமாக இருக்கிறது. வேறு வழியே இல்லாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கு ஏதுவாக பல நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் என்று கூறி கடன் வாங்க வைக்கிறார்கள். இப்படி கடன் வாங்கிவிட்டு பிறகு அந்தக் கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மீளாத கடனில் இருந்து மீள மந்திரம்: கடன் பிரச்னை தீர வேண்டும் என்பதற்காக பலரும் பல பரிகாரங்களை செய்திருப்பார்கள். பல வழிபாட்டை செய்திருப்பார்கள். இப்படி மந்திர உச்சாடனம் செய்திருப்பார்கள். இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தினால் அவர்களுடைய பரிகாரமோ வழிபாடோ மந்திர உச்சாடனமோ பலன் கொடுக்காமல் அந்த கடன் பிரச்னையில் இருந்து அவர்களால் வெளியே வர முடியாத சூழ்நிலையே எஞ்சி இருக்கும்.
அப்படிப்பட்டவர்கள் இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் அவர்களுடைய கடன் பிரச்னை என்பது குறைய ஆரம்பிக்கும். சிறிய தொகையாக இருக்கக்கூடிய கடன் பிரச்னையாக இருந்தால் அது முற்றிலும் நீங்கிவிடும். பெரிய அளவில் இருக்கக்கூடிய கடன் தொகையாக இருக்கும் பட்சத்தில் அந்தக் கடனைத் திருப்பி அடைப்பதற்குரிய வழிகள் கிடைக்கும். ஒருசிலருக்கு அந்தக் கடன் சுமையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியாவது திரும்பி செலுத்தக்கூடிய பண வரவை ஏற்படுத்தித் தரும்.
அப்படி சிறப்பு வாய்ந்த இந்த மந்திரத்தை தேய்பிறை நாட்களில் ஆரம்பிப்பது என்பது மிகவும் சிறப்பு. தேய்பிறையில் நம்முடைய பிரச்னைகள் தீர்வதற்கான பரிகாரத்தையோ வழிபாட்டையோ நாம் செய்தோம் என்றால் நிலவு தேய்ந்து கொண்டே போவது போல நம்முடைய பிரச்னைகளும் தேய்ந்து கொண்டே போய் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. அதனால் நல்ல நாளாக பார்த்து தேய்பிறை நாளில் இந்த மந்திர உச்சாடனத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
இந்த மந்திர உச்சாடனத்தை காலையில் எழுந்ததும் கூறலாம் அல்லது இரவு படுக்கச் செல்வதற்கு முன் கூறலாம். காலையில் எழுந்ததும் கூறுபவர்களாக இருக்கும் பட்சத்தில் முகம், கை, கால்களை கழுவிக்கொண்டு பல் துலக்கி விட்டு இந்த மந்திரத்தை சொல்லலாம். குளிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. காலையிலேயே இந்த மந்திரத்தை சொல்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த மந்திரத்தை கூறி முடித்துவிட்டு அசைவம் சாப்பிட்டால் எந்தத் தவறும் கிடையாது. ஆனால், அசைவம் சாப்பிட்ட பிறகு இந்த மந்திரத்தை கூறக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக 108 நாட்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்திற்கு நம்முடைய கையில் தண்ணீரை வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் வைத்து நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் அது விரைவிலேயே பலன் அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்குக் காரணம் தண்ணீர் நம்முடைய எண்ணங்களை ஈர்க்கும் தன்மை கொண்டதாக திகழ்வதுதான்.
ஒரு சுத்தமான டம்ளர் நிறைய தண்ணீரை எடுத்து அதை நம்முடைய இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.
மந்திரம்:
‘லலிதம் ஸ்ரீதரம்
லலிதம் பாஸ்கரம்
லலிதம் சுதர்சனம்’
இப்படி 108 முறை கூறி முடித்த பிறகு, ‘இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி, இந்த மந்திரத்தின் பலனால் என்னுடைய கடன் முற்றிலும் தீர்ந்துவிட்டது, அதற்கு நன்றி‘ என்று மனதார நன்றி கூற வேண்டும். பிறகு தண்ணீரை குடிக்க வேண்டும். இப்படி நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் நன்றி கூறுவதன் மூலம் அந்த பிரபஞ்சமே நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது. மேலும், நாம் எந்தப் பரிகாரத்தை செய்தாலும், எந்த வழிபாட்டை செய்தாலும் அது நிறைவடைந்த பிறகு நன்றி கூற வேண்டும். நன்றி கூறினால் அந்த வழிபாடும் பரிகாரமும் பலன் தரும் என்ற கூற்றும் நிலவி வருகிறது. மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை முழு மனதோடு கூறுபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் நீங்கும்.