
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்திலுள்ள சாஸ்தாம்கோட்டை, ஸ்ரீ தரும சாஸ்தா கோயில் ஒரு புண்ணியத் தலமாகும். ஏராளமான வானரங்கள் கூட்டம் கூட்டமாக இக்கோயிலைச் சுற்றி குடியிருக்கின்றன. பரசுராமரால் நிறுவப்பட்டது என்று கூறப்படும் 12 முக்கிய ஐயப்பன் கோயில்களில் இதுவும் ஒன்று. கேரளாவிலுள்ள மிகப் பழைமையான சாஸ்தாம்கோட்டை கோயிலினுள் மூலவர் ஸ்ரீ தர்ம சாஸ்தா, தமது துணைவியார் பிரபா மற்றும் மகன் சத்யகா ஆகியோருடன் வீற்றிருக்கிறார். இக்கோயிலின் மூன்று புறங்களும் கேரளாவின் மிகப்பெரிய ஏரியான சாஸ்தாம்கோட்டை ஏரியால் சூழப்பட்டுள்ளது.
இக்கோயில் ராமாயணம் எழுதப்பட்ட காலகட்டம் வரையில் பழைமை வாய்ந்தது என்றும், ஸ்ரீராமர், சீதை மற்றும் இலக்குவன் ஆகியோர் வானரப்படையுடன் அயோத்திக்குத் திரும்பும் வழியில் இங்கே வந்து ஐயப்பனை (தரும சாஸ்தா) வணங்கியதாக தொன்ம நம்பிக்கை நிலவுகிறது. இங்குள்ள ஏரிக்கரையில், ஸ்ரீராமர் பித்ரு தர்ப்பணம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீராமரின் வானரப்படைத் தலைவர் நீலன் என்ற குரங்கை ஐயப்ப சேவைக்காக சாஸ்தாம்கோட்டையில் விட்டுச் சென்றதாகவும், நீலனின் பரம்பரையில் உள்ள குரங்குகள்தான் இன்றும் இக்கோயிலில் காணப்படுகின்றன என்பதும் இங்குள்ளவர்களின் நம்பிக்கை.
சாஸ்தாம்கோட்டை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில், ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அமைந்துள்ள ஐந்து பழைமையான சாஸ்தா கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கேரளாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான சாஸ்தாங்கோட்டை ஏரியின் கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் அழகிய சூழல், இதை ஒரு அழகான காட்சியாக மாற்றியுள்ளது. ராவணனால் கடத்தப்பட்ட சீதையை கண்டுபிடிக்கும் முயற்சியில், ஸ்ரீராமர் இங்கு ஒரு சுயம்பு சிலையை வழிபட்டதாகப் புராணக் கதை கூறுகிறது. மேலும், இந்தத் தொடர்பு, சீதா தேவியை தேடி இலங்கைக்குச் செல்லும் வழியில் ஹனுமன் இந்தக் கோயிலுக்கு வருகை தந்ததன் காரணமும் ஆகும்.
குரங்குகள் வசிக்கும் காட்டு நிலத்தின் மத்தியில் சாஸ்தாம்கோட்டை கோயில் இருப்பதால், இந்த வழிபாட்டுத் தலத்தையும் குரங்குகள் தங்கள் வீடாக மாற்றிக் கொண்டு விட்டன. பக்தர்கள் தரும் கடலை, பழங்கள் போன்றவற்றை வாங்கிச் சாப்பிட்டு வாழ்கின்றன.
கோயில் உத்ஸவங்கள்: பிப்ரவரி - மார்ச் மாத அளவில் பத்து நாட்கள் திருவிழா, சாஸ்தாம்கோட்டையில் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் பத்தாவது நாள் நடைபெறும், ‘கெட்டு காழ்ச்சா’ என்ற வழிபாட்டின்போது மாடு, குதிரை, அலங்காரம் செய்யப்பட்ட தேர் போன்ற உருவ பொம்மைகள் தயாரிக்கப்பட்டு ஊர்வலம் செல்வது வழக்கம். இது தவிர, திருவோணம், நவராத்திரி, மண்டல மகோத்ஸவம் (41 நாட்கள்), மகர சம்கிரம பூஜை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், பத்தாம் உதயம் போன்ற விசேஷ நாட்களிலும் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.
வானர சத்யா: சாஸ்தாம்கோட்டை ஸ்ரீ தரும சாஸ்தா கோயிலிலுள்ள குரங்குகளுக்கு, ‘வானர சத்யா’ எனப்படும் விருந்து படைத்து கௌரவிக்கப்படுகிறது. இந்த விருந்து ஓணம் சத்யாவைப் போன்றது. இலைகளில் அழகாக பரிமாறிய ‘சத்யா’ விருந்தினை, வானரங்கள் ஒற்றுமையாக வந்து சாப்பிடும் அழகே அழகு.
‘ஐயனே! கருணாகரானந்த மூர்த்தியே… ஐயனே ஸ்ரீ ஹரிஹரசுதன் ஐயன் ஐயனே போற்றி! போற்றி!’ என கூறி, சாஸ்தாம்கோட்டை ஸ்ரீ தரும சாஸ்தாவை நாமும் வணங்கி வழிபடுவோம்.