நாகை மாவட்டம், திருமருகலில் உள்ள அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அப்பர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலமாகும். மகாலட்சுமி தாயார் தவமிருந்து மகாவிஷ்ணுவை அடைந்தது, பிரம்ம தேவர் தவம் இருந்து பேறு பெற்றது, சனி கிரகத்தின் தாக்கம் போக்கும் தலம் என பல சிறப்புகளைக் கொண்டதாகும். கோச்செங்கோட் சோழன் திருப்பணியில் மாடக் கோயிலாக அமைந்துள்ள இது, இரு பிராகாரங்கள், 5 நிலை ராஜகோபுரம், அதன் எதிரே நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தம் என எழிலாகக் காட்சி அளிக்கிறது.
நீதி நெறி தவறாத குசகேது மகாராஜாவின் ஆட்சி காலத்தில் ஒரு சமயம் விதியின் பயனாக கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மன்னன் தற்கொலைக்கு முயன்றார். தன்னலம் கருதாமல் தனது குடி மக்களின் நலனுக்காக தன் உயிரையும் துறக்கத் துணிந்த மன்னனை தடுத்து, சிவ கணங்களுடன் காட்சி அளித்தார் சிவபெருமான். அதோடு, மருகல் நாட்டின் வறுமை தீர அத்தலத்தில் மாணிக்க மழை பெய்யச் செய்து அந்நாட்டின் வறுமையைப் போக்கியதால் இத்தல இறைவனுக்கு அருள்மிகு மாணிக்கவண்ணர் என்ற பெயர் ஏற்பட்டது.
ஒரு சமயம் பிருகு முனிவர் வைகுண்டம் வந்தபோது, அங்கு திருமகள், நித்திய சூரியர்களோடும் மற்றவர்களோடும் வீற்றிருந்த திருமால் பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. இதனால் பெரும் கோபம்கொண்ட பிருக முனிவர், திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார். ஆனாலும், தனது தவறை எண்ணி திருமால், தன்னை உதைத்ததால் முனிவரின் கால்களில் வலி ஏற்பட்டிருக்குமோ என எண்ணி அவரது கால்களை பிடித்துவிட்டார்.
இதைக் கண்டு சினம் கொண்ட திருமகள், ‘தான் இருக்கும் இடம் தேடி வந்து தன்னை அடையும் வரை வைகுண்டத்தை விட்டு விலகி கடும் தவம் செய்ய பூலோகம் சென்றார். பல தலங்களைக் கண்ட திருமகள், மாணிக்கவண்ணரின் கோயிலை அடைந்து, அங்கு ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தி தவமியற்றத் தொடங்கினார். அதோடு, வில்வம் கொண்டு அத்தல மாணிக்கவண்ணரை பூஜித்தார்.
ஒரு ஆவணி மாதம் பௌர்ணமி திதியுடன் கூடிய நாளில், மாணிக்கவண்ணரின் அருளால் திருமால் திருமகளை சந்திக்க திருமருகல் வந்து சேர்ந்தார். அவர்களுக்கு மாணிக்கவண்ணர், வண்டுவார் குழலி அம்மையுடன் காட்சி அளித்து திருமாலையும், திருமகளையும் இணைத்து வைத்து அருள்புரிந்தார் என்பது இத்தல வரலாறு. இதன்படி, இத்தலமே வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது.
மகாலட்சுமி தாயார் உருவாக்கிய தீர்த்தம் தற்போதும் மகாலட்சுமி தீர்த்தம் என்றே விளங்குகிறது. பிரிந்த தம்பதியர் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி மாணிக்கவண்ணர்-வண்டுவார் குழலி அம்மையை வழிபட்டால் மீண்டும் சேர்ந்து வாழ்வது உறுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை.