

வசந்த பஞ்சமி அல்லது ஸ்ரீ பஞ்சமி என்று அழைக்கப்படும் சரஸ்வதி பூஜை தை அமாவசைக்கு பிறகு ஐந்தாம் நாளில் பஞ்சமி திதியில் கொண்டாடப்படுகிறது. இது வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கிறது. அறிவு, மொழி, இசை மற்றும் கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த வஸந்த பஞ்சமி (Vasantha Panchami) வட இந்தியாவை பொறுத்த வரையில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. அவர்கள், இந்த நன்னாளில் சரஸ்வதி தேவியை வணங்கி அவளின் பரிபூர்ண ஆசியை பெறுகிறார்கள்.
நம் இந்தியாவை பொறுத்த வரையில் பண்டிகை கொண்டாடப்படும் உற்சாகமும் பக்தியும் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தாலும், வெவ்வேறு மாநிலங்கள் பண்டைய தலைமுறையிலிருந்து வெவ்வேறு மரபுகளைக் கொண்டுள்ளன என்பதில் சிறிதளவு ஐயமும் இல்லை.
தென்னிந்தியாவில் நாம் இந்த சரஸ்வதி பூஜையை நவராத்திரியின் ஒன்பது நாளில் அதாவது மகா நவமியில் கொண்டாடுகின்றனர். வட மாநிலங்களில் இந்த வருடம் சரஸ்வதி பூஜை என்கிற வசந்த பஞ்சமி, 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும்.
இது பொதுவாக ஜனவரி பிற்பகுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது . இந்த கையானது பொதுவாக நாற்பது நாட்கள் வசந்த காலத்திற்கு முன்னதாக கொண்டாடப் படுகிறது.
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் என உலகின் பல பகுதிகளில் இருக்கிற இந்துக்கள் இதை கொண்டாடுகின்றனர். இந்தோனேசியா மற்றும் பாலியில் இப்பூஜையானது ஹரி ராய சரஸ்வதி என்று அனுசரிக்கப்படுகிறது.
சரஸ்வதி தேவியை வழிபடுவதுதான் இந்த பண்டிகையின் சிறப்பம்சமாகும். மக்கள் அவளுக்கு விருப்பமான மஞ்சள் நிறத்தின் துடிப்பான நிழல்களில் ஆடைகளை ஆர்வத்துடன் உடுத்தி, அருகிலுள்ள கோயில்களில் உள்ள சரஸ்வதி தேவியின் சிலைகளுக்கு முன் பிரார்த்தனை செய்கிறார்கள். பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமான பிரசாதத்தை தேவிக்கு படைக்கிறார்கள்.
வங்காளம் மற்றும் பீகார்:
மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் அரிசியால் செய்த உணவுகளும் குங்குமப்பூவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. பூந்தி, லட்டு, கீர், மால்புவா, கேசர் ஹல்வா, கேசரி பாத், சோந்தேஷ் மற்றும் ராஜ்போக் போன்ற சுவையான இனிப்புகளை படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஒடிசா:
ஒடிசாவில், 2-5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காதி சுவான் அல்லது வித்யா-ஆரம்பாவில் இந்த புனிதமான நாளில் முறையாகக் கல்வியை கற்கத் தொடங்குகிறார்கள், இதில் உள்ளூர் இசை மற்றும் நடன நிகழ்ச்சியும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசம்:
இந்த மாநிலங்களிலுள்ள இந்துக்களின் கருத்துப் படி, இந்து புராணத்தில், அன்பின் கடவுளான மதனா , சிவபெருமானை அவருடைய தியானத்திலிருந்து மீட்டெடுக்கவும், பார்வதி தேவியிடம் அவரை கவனம் செலுத்த வைக்கவும் அவர் மீது மலர்கள் மற்றும் தேனீக்களின் அம்புகளை எய்த நாள் இதுவாகும் .
அதனால்தான், இந்த மாநிலங்களில், மக்கள் சிவபெருமான் கோவில்களுக்கு சென்று தம்பதியரை வணங்கி, மாவிளக்கு மற்றும் கோதுமைக் கதிரைக் காணிக்கையாக செலுத்துகிறார்கள். உத்தரபிரதேசத்தில், சடங்குகளின் ஒரு பகுதியாக சரஸ்வதி சிலைகள் கங்கை நதியில் கரைக்கப்படுகின்றன.
பஞ்சாப்:
இந்த மாநிலத்தில், சீக்கியர்களால் வசந்த பஞ்சமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பிரகாசமான மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் தலைப்பாகைகளை அணிந்து, இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைரும் ஒன்று சேர்ந்து காற்றாடியை பறக்கவைக்கும் போட்டிகளில் ஈடுபடுகிறார்கள்.
நாமும் வசந்ந பஞ்சமி அன்று சரஸ்வதியை தொழுவோம், அவளின் ஆசிகளைப் பெறுவோம்.
சரஸ்வதி மாதாவிற்கு ஜே !!!