மதுரையில் ஆன்மீகக் கொண்டாட்டம்: மீனாட்சி அம்மன்- கள்ளழகர் கோவில்களில் வசந்த உற்சவம் தொடக்கம்!

மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில்களில் வரும் 21-ம்தேதி முதல் வசந்த உற்சவம் விழா தொடங்குகிறது.
Kallazhagar and Meenakshi Amman
Kallazhagar and Meenakshi Amman
Updated on

ழகர் கோவில் என்ற 'திருமாலிருஞ்சோலை' என்று ஆழ்வார்களால் பாடப் பெற்ற அருள்மிகு சுந்தரராசப் பெருமாள் என்கின்ற கள்ளழகர் திருக்கோவில், மதுரை மாநகரின் மையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இது உலகளவில் பிரசித்தி பெற்ற ஓர் பெருமாள் (விஷ்ணு) கோவிலாகும். 108 வைணவ திவ்யதேச திருப்பதிகளுள் அதிகமாகப் பாடல்கள் (129) பெற்ற மூன்றாம் திவ்யதேசம் இதுவே ஆகும்.

இக்கோவிலில் பெருமாள் கள்ளழகர் என்றும் அவரது மனைவியான லட்சுமி திருமகள் என்றும் அழைக்கப் படுகின்றனர். சங்க இலக்கியங்களிலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் இக்கோயில் திருமாலிருஞ்சோலை என்று குறிக்கப்படுகிறது. துர்வாச முனிவரிடமிருந்து சுதபவ முனிவர் பெற்ற சாபத்தைப் போக்க பெருமாள் கள்ளழகராகத் தோன்றியதாக நம்பப்படுகிறது. கோவிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

இதையும் படியுங்கள்:
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் தனி சிறப்பு என்ன தெரியுமா?
Kallazhagar and Meenakshi Amman

இக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் சித்திரை திருவிழாவை போன்றே ஒன்றானது ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ திருவிழாவாகும். அதன்படி இந்தாண்டு வைகாசி வசந்த உற்சவ திருவிழா வருகிற 22-ந்தேதி மாலையில் முதல் நாள் திருவிழாவாக தொடங்குகிறது. அன்றைய தினம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழர் பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி மேளதாளம் முழங்க புறப்பாடாகி சென்று அங்குள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து விழா வருகிற 31-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் மாலையில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

இதேபோல் மதுரையில் அமைந்துள்ள மற்றொரு பிரசித்தி பெற்ற திருக்கோவிலான மீனாட்சி அம்மன் கோவிலிலும் வைகாசி வசந்த திருவிழா 21-ம் தேதி தொடங்குகிறது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு, மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோவிலாகும்.

ஆசியாவின் மிகப் பெரிய கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும், மர்மங்களையும் கொண்டுள்ளது. மதுரையின் மையப்பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், உலகெங்கிலும் உள்ள பக்தர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய ஆன்மீகத் தலமாகும். 1000 கால் மண்டபம், இசைத்தூண்கள் மற்றும் பொற்றாமரை குளம் ஆகியவை இக்கோவிலின் மிகச்சிறந்த கலைப் பொக்கிஷங்களாகும்.

இந்தக் கோவில், சிவனை மீனாட்சியின் கணவராகவும், விஷ்ணுவை அவளுடைய சகோதரராகவும் சித்தரிப்பதன் மூலம், இந்து மதத்தின் சைவ மற்றும் வைணவ மரபுகளுக்கு இடையே ஒரு இணக்கமான, பாதுகாப்பு உறவைக் குறிக்கிறது. இத்தலத்தில் மூலவர் சுந்தரேசுவரர் (சிவபெருமான்) மற்றும் அம்பிகை மீனாட்சி (பார்வதி) ஆவர். இத்தலத்தில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது மீனாட்சி அம்மன் மதுரையில் பிறந்ததாக நம்பப்படுவதால், இங்கு அம்மனுக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலமானது. அதேபோல் கோடை காலத்தில் இக்கோவிலில் வைகாசி வசந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 21-ம்தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது.

விழா நடக்கும் 10 நாட்களும், தினமும் மீனாட்சி-சுந்தரேசுவரர் , கோவிலில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு புதுமண்டபம் செல்வார்கள். அங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து கோவிலுக்குள் செல்வார்கள்.

10-ம்நாள் விழாவில் மீனாட்சி, சுந்தரேசுவரர் பகலில் புதுமண்டபத்தில் எழுந்தருளி அங்கு பக்தர்களுக்கு காட்சி அளித்த பின்னர் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதிகளை வலம் வருவர்.

மேலும் வருகிற 31-ம்தேதி முதல் அடுத்த மாதம் 2-ம்தேதி வரை திருஞானசம்பந்தர் திருவிழா நடக்கிறது.

அதில் 2-ந்தேதி திருஞானசம்பந்தர் நட்சத்திரத்தன்று தங்கப் பல்லக்கில் எழுந்தருளி 63 நாயன்மார்கள் நான்கு ஆவணி மூலவீதியில் வலர் வருவர்.

மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்வசம் நடைபெற உள்ளதால் வருகிற 21-ம்தேதி முதல் ஜூன் மாதம் 2-ம்தேதி வரை கோவில் சார்பில் நடத்தப்படும் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட மாட்டாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மீனாட்சி திருக்கல்யாணத்தில் யாருக்கு முதல் மாங்கல்யம்? பலரும் அறியாத 'பிரியாவிடை' அம்மன் ரகசியம்!
Kallazhagar and Meenakshi Amman

எனவே இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com