
முருகப்பெருமான் என்றாலே 'அறுபடை வீடுகள்' தான் நினைவிற்கு வரும். ஆனால், முருகப்பெருமானுக்கே மிகவும் பிடித்த கோவில்களாக இரண்டு கோவில்கள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று தான் வயலூர் முருகன் கோவில்.
இக்கோவில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள குமரவயலூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. வயலூர் முருகன் கோவில் 1200 ஆண்டுகள் பழமையானதாகும். இதை 9 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டியதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் சிவபெருமானுக்கு உரியதாக இருந்தாலும், முருகப்பெருமானால் இக்கோவில் புகழ் பெற்றது.
முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த ஆலயங்கள் இரண்டு என்று அருணகிரிநாதர் சொல்லியிருக்கிறார். ஒன்று திருச்செங்கோடு, இன்னொன்று திருச்சி வயலூர் கோவில் ஆகும். திருப்புகழில் 92 இடங்களில் வயலூரை பற்றிப் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.
திருவண்ணாமலையில் முருகப்பெருமானின் அருளைப் பெற்ற அருணகிரிநாதர் ‘முத்தைத்தரு பத்தித் திருநகை' என்று தொடங்கும் திருப்புகழின் சில பாடல்களைப் பாடினார். ‘வயலூருக்கு வா!' என்று முருகப்பெருமானின் உத்தரவை ஏற்று அருணகிரிநாதர் வயலூருக்கு செல்கிறார். அங்கே பொய்யா விநாயகரின் அருளைப் பெறுகிறார். ஆனால், முருகப்பெருமானின் அருள் கிடைக்கவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த அருணகிரிநாதர், ‘ஒலித்த அசரீரி பொய்யோ!' என்று கத்துகிறார். அப்போது அவர் முன்பு முருகப்பெருமான் தோன்றுகிறார். ‘திருப்புகழைப் பாடு’ என்று முருகப்பெருமான் கேட்கிறார். அதற்கு அருணகிரிநாதர் பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் நானறியென் எனக்கென்ன ஞானம் இருக்கிறது உன்னைப்பற்றி பாடுவதற்கு என்று கேட்கிறார்.
உடனே முருகப்பெருமான் தன்னுடைய வேலை எடுத்து அருணகிரிநாதரின் நாக்கில் ‘ஓம்’ என்று எழுதுகிறார். உடனே அருணகிரிநாதருக்கு திருப்புகழ் கரைப்புரண்டு ஓட ஆரம்பிக்கிறது. முருகப்பெருமானைப் போற்றி வயலூர் முருகன் கோவிலில் 18 பாடல்கள் பாடியுள்ளார். அதன்பிறகு நிறைய திருதலங்களுக்கு சென்று திருப்புகழை பாடினார்.
முருகப்பெருமானின் அருளும், ஆசியும் நிறைந்த திருத்தலம் தான் திருச்சி வயலூர் முருகன் திருத்தலமாகும். இக்கோவிலுக்கு சென்றால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்றும் நம் வேண்டுதலை முருகப்பெருமான் உடனே நிறைவேற்றுவார் என்றும் சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நீங்களும் ஒருமுறை சென்று முருகப்பெருமானின் அருளைப் பெறுங்கள்.