சோமாசுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் இருந்து நான்கு வேதங்களையும் பறித்து சென்றான். அதனை திருமால் மீட்டு வந்தார். வேதங்கள் அசுரனிடம் இருந்த தோஷத்தைப் போக்க சிவனை நோக்கி தவம் செய்தன. சிவன் அவற்றுக்குக் காட்சி தந்து அவற்றின் தோஷத்தைப் போக்கினார். வேதங்கள் வழிபட்டதால் அத்தலம், ‘வேதச்சேரி’ என்று அழைக்கப்பட்டது. அதுவே இப்போது வேளச்சேரி என்றானது.
மார்க்கண்டேயரின் ஆயுளை எடுக்க எமன் கயிறை வீசும்போது அது சிவனின் மீது விழுந்தது .சிவன் கோபப்பட்டு எமனின் பதவியை பறித்தார் .எமன் தனது பாவம் மற்றும் தனது பதவியைப் பெற பூலோகத்தில் உள்ள இந்த எம குளத்தில் நீராடி தனது பதவியைத் திரும்பப் பெற்றார். அதனால் இப்பெருமானை வணங்கினால் தீர்க்க ஆயுளையும் இழந்த பதவியும் பெறலாம். சிவனை பூஜிப்பதற்காக எமன் தனது தண்டத்தை ஊன்றி பூஜை செய்தார். பூஜை முடிந்ததும் திரும்ப தண்டத்தை எடுக்க முடியவில்லை. அதுவே தண்டீஸ்வரர் என்ற பெயர் பெற்றதாக கூறுவது உண்டு.
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டீஸ்வரர் திருக்கோயில் கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று வாசல்கள் கொண்டிருந்தாலும் தெற்கு வாசலே புழக்கத்தில் உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் தெற்கு வாசலில் அமைந்துள்ளது. அன்னை கருணாம்பிகை நம்மை வரவேற்க அருகே கிழக்கு நோக்கி மூலவர் தண்டீஸ்வரர் காட்சி தருகிறார். கருவறை சுற்றில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் சன்னிதிகள் உள்ளன.
தெற்கு நோக்கி நின்ற கோலமாக நான்கு கரங்களுடன் அருளாசி வழங்குகிறார் அன்னை கருணாம்பிகை. திருவான்மியூர் மருந்தீஸ்வரருக்கு துணையாக திரிபுரசுந்தரி இருப்பதைப் போல தண்டீஸ்வரருக்கு ஒரு துணையை உருவாக்க விரும்பிய அப்பைய தீட்சிதர் ஸ்ரீசக்கரத்துடன் நிறுவிய தெய்வமே கருணாம்பிகை என தல வரலாறு கூறுகிறது.
வேதங்களுக்கு தோஷங்கள் நீக்கி பரிசுத்தம் அளித்தது போல அடியார்களுக்கும் சகல தோஷங்கள் நீக்கும் தலமாக இது விளங்குகிறது. இந்த ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். தல தீர்த்தம் ஆலயத்திற்கு மேற்கே அமைந்துள்ள எமன் உருவாக்கிய திருக்குளம் எம தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.