

சென்னை நகரின் வேளச்சேரியில் அமைந்துள்ள மிகப் பழமையான தண்டீஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இக்கோயில் வேளச்சேரி பிரதான சாலையில், கிழக்கே 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் தண்டீஸ்வரர், மற்றும் அன்னை கருணாம்பிகை (கருணைமிக்க அன்னை) என அழைக்கப்படுகிறார். இவ்வருடம் இக்கோயில் பிரம்மோத்சவ விழா மே 20ல் தொடங்கி பத்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது
மார்க்கண்டேயனுக்கும் எமதர்மனுக்கும் இடையே நடந்த சண்டையின் காரணமாக இந்தப் புகழ்பெற்ற கோயில் உருவானதாகச் சொல்லப்படுகிறது.. தன் பக்தனான மார்கண்டேயனின் உயிரை பறிக்க வந்த யமனை சிவபெருமான் தாக்கினார்.
ஈஸ்வரன் யமனை உதைத்து யமனின் தண்டம் என்ற ஆயுதத்தைப் பறித்தார். அதனால் யமன் தன் செயல்களைச் செய்யமுடியாமல் செயலற்றுப் போனான். யமன், தன் தண்டத்தைத் திரும்பப்பெற இந்த இடத்தில் ஒரு நீரூற்றை உருவாக்கி சிவபெருமானை வழிபட, சிவனும் யமனை மன்னித்து தண்டத்தை கொடுத்தருளினார். எனவே சிவபெருமான் தண்டீஸ்வரர் எனப் போற்றப்படுகிறார்.
இந்த இடத்தின் பெயருக்குப் பின்னால் மற்றொரு புராண வரலாறும் சொல்லப்படுகிறது. சோமாசுரன் என்ற அசுரன் பிரம்ம தேவரிடமிருந்து வேதங்களைக் கைப்பற்றினான். விஷ்ணு பகவான் அசுரனிடமிருந்து அவற்றை மீட்டெடுத்தார். வேதங்கள் சில காலம் அசுரனின் காவலில் இருந்ததால், அவை தீட்டுப்பட்டு அசுர தோஷத்தைப் பெற்றிருந்தன.
எனவே, சிவன் அவற்றின் தூய்மையையும் புனிதத்தையும் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையில் அவை தவம் செய்தன. சிவன் அவற்றைத் தூய்மைப்படுத்தி, அவற்றின் அசல் மகிமையை மீட்டெடுத்தார். நான்கு வேதங்களும் வழிபடப்பட்ட இடம் வேதஸ்ரேணி என்று அழைக்கப் பட்டது, அது காலப்போக்கில் வேளச்சேரி என்று அறியப்பட்டது.
இக்கோயில் சோழர் காலத்தின்போது (கி.பி. 10 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கிழக்கு நோக்கிய கருவறையில் சிவலிங்க வடிவில் தண்டீஸ்வரர் வீற்றிருக்கிறார். ஒரு தனி சன்னதியில் அன்னை கருணாம்பிகை எழுந்தருளியுள்ளார். அவர் நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். புகழ்பெற்ற வேத அறிஞரான ஸ்ரீ அப்பைய தீட்சிதரால் நிறுவப்பட்ட ஸ்ரீ சக்கரம், கருணாம்பிகை தேவியின் சன்னதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது
தை மாதத்தின் முதல் நாளில் சூரியக்கதிர்கள் இங்குள்ள லிங்கத்தின் மீது விழுகின்றன. சிவபெருமானின் அனைத்து குணங்களும் கொண்ட வீரபத்திரர் வலது காலை மடித்து அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார் என்பது தனி சிறப்பு.. நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் ஆகியவை உள்ளன.. நந்தி தலை குனிந்த நிலையில் பணிவான கோலத்தில் காட்சியளிக்கிறார்.
ஒருமுறை, சப்த கன்னியர்கள், ஒரு அசுரனை அழிக்க முடிவு செய்தனர், ஆனால் தவறுதலாக ஒரு முனிவரைக் கொன்றுவிட்டனர். இதற்கிடையில், கன்னியர்கள் தன்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்பதை அந்த அசுரன் அறிந்துகொண்டான். முனிவரைக்கொன்ற தோஷத்தால் கன்னியர்கள் பாதிக்கப்பட்டனர், மேலும் அவர்கள் அசுரனைக்கண்டு அஞ்சினர். எனவே, கன்னியர்களைப் பாதுகாக்க சிவன் வீரபத்திரனை அனுப்பினார். வீரபத்திரர் அசுரனைக்கொன்று கன்னியர்களைப் பாதுகாத்தார். இந்த இடத்தில் பெண்களின் காவல் தெய்வமாக வீரபத்திரர் வணங்கப்படுகிறார்.
இங்கு பக்தர்கள் நீண்ட ஆயுளுக்காகவும் இழந்த வேலையை திரும்ப பெறவும் ஈசனை பிரார்த்தனை செய்கின்றனர். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளிலிருந்து விமோசனம் வேண்டி வீரபத்ரரிடம் பிரார்த்தனை செய்கின்றனர். அவருக்கு வெற்றிலை மாலைகளுடன் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு. கன்னியர்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய சப்த கன்னிகைகளையும் வீரபத்திரரையும் வழிபடுகின்றனர்.