

திருச்சி உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், குங்குமவல்லி தாயார் கோவில் என்றும் அறியப்படுகிறது. இங்கு ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய 2 தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பர்.
அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் மகப்பேறு வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவர். வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் அம்பிகை வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும்.
சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலுக்கு அருகாமையில் அமைந்திருக்கிறது கண்ணனூர் மாரியம்மன் கோவில்.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், அம்பாள் முன்பு தொட்டில் கட்டி, அதில் கோயில் முன்புள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளிக்கின்றனர். இப்படி நீர் தெளித்து தொட்டிலை ஆட்டி வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இவ்வாறு வேண்டுதல் வைத்து குழந்தை வரம் பெற்ற பெண்கள், பூக்குழி இறங்கி தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இப்படி பூக்குழி இறங்கும் நேரத்தில் அம்மனுக்கு அபிஷேகம் செய்த பாலை, அக்னி குண்டத்தில் நின்றுகொண்டே குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இப்படி செய்வதால் அந்த குழந்தைகள் நோய் நொடியில்லாமல், நீண்ட ஆயுளுடன் வாழும் என்பது நம்பிக்கை.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகலாபுரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் வாலீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இங்கு வாலீஸ்வரர் சன்னிதியைவிட, காலபைரவரின் சன்னிதியே பெரிதாக உள்ளது. நின்ற கோலத்தில் காலபைரவர் காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் காலபைரவர் சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார்.
எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து பைரவரை வித்தியாசமாக வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை இல்லாத தம்பதிகள் இங்குள்ள புனித குளத்தில் நீராடி காலபைரவரை வணங்கி அங்கிருக்கும் கல் வடிவில் இருக்கும் நாய் குட்டியை எடுத்துகொண்டு அங்கிருக்கும் நாய் வாகனத்தை மூன்று முறை சுற்றி வந்து பொம்மையை கீழே வைத்துவிட்டு காலபைரவரை பிரார்த்தனை செய்தால் மக்கட்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள இளநகர் உடையீசுவரர் கோயிலில் உள்ள லிங்கம் செம்மண்ணால் ஆனது இருப்பினும் அபிஷேகம் செய்தாலும் கரையாத அற்புதமானது. இக்கோயிலின் திருப்பணி போது ஒரு நந்தி கிடைத்தபோது அதனை கோயிலில் வைத்து வழிபடத் தொடங்கியுள்ளனர். இறைவியை வழிபட வந்த நிறைமாத கர்ப்பிணி நந்தி மேல் சாயவே, நந்தி சிறிது சிறிதாக நகர்ந்தது. அவள் தடுமாறி தரையில் சாய்ந்தாள். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது முதல் அந்த நந்தி சுகப்பிரசவ நந்தி என்றழைக்கப்படுகிறது.
சுகப்பிரசவம் ஆவதற்கு கர்ப்பிணிப் பெண்கள் இங்குள்ள சுகப்பிரசவ நாயகியை வழிபட்டு சுகப்பிரசவ நந்தி சிலையை சற்று தள்ளி வைத்துவிட்டு செல்கின்றனர். அவர்களுடன் உடன் செல்கிறவர்கள் நந்தியை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வைக்கின்றனர். இப்படி செய்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கை.
சென்னை மேற்கு மாம்பலத்தையட்டி அமைந்துள்ள மேட்டுப்பாளையத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமுத்தாலம்மன். இந்த ஆலய ஆடிப்பூர நன்னாளில், அம்மனுக்கு நடைபெறும் வளைகாப்புத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வார்கள்.
வரும் பெண்கள் கை நிறைய வளையல்களை அம்மனுக்கு வாங்கி வருவார்கள். அந்த வளையல்களை அம்மனுக்கு அணிவித்துவிட்டு, அதையே வேண்டுதலுக்கு வந்த பெண்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள். பிரசாத வளையலை அணிந்துகொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும், சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதீகம்.
கிருஷ்ணகிரி அருகே பில்லனகுப்பத்தை அடுத்த கல்கட்டிபுதூர் என்ற இடத்தில் ஒரு மரத்தடியில் உள்ளது. பந்தலு மாரியம்மன் கோயில். குழந்தை இல்லாத பெண்கள் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இங்கு வழிபட்டு சென்றபின் குழந்தை பிறந்தால் மீண்டும் கோயிலுக்கு வந்து அருகிலுள்ள மரத்தில் சேலை உள்ளிட்ட துணிகளை கட்டி நேர்த்திக் கடனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஐதீகம்.