
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் தான் பொம்மி, திம்மி. சொத்து தகராறு காரணமாக மாற்றான் தாயாரான சித்தியின் பிள்ளைகள் இவர்களை கொல்ல நினைக்கவே அங்கிருந்து இவர்கள் இருவரும் தப்பித்து வந்த இடம் தான் வேலூரில் இருக்கும் பாலாற்றங்கரை.
அச்சமயம் வேலூரை ஆட்சி செய்த மன்னனிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி தாங்கள் தங்குவதற்கு இடம் கேட்கிறார்கள். மன்னர் காட்டிய இடத்தில் வாழ்ந்து வந்தார்கள் சகோதரர்களான பொம்மியும், திம்மியும். அப்போது அந்த ஊரின் எல்லையம்மன் கோவிலில் இருந்த சப்தமாதர்களும் சாமுண்டேஸ்வரியை வழிப்பட ஆரம்பிக்கிறார்கள்.
ஒருநாள் அந்த ஊரில் கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்தனர். அப்போது சகோதரர்களான பொம்மியும், திம்மியும் சாமுண்டீஸ்வரியின் சக்தியை பெற்று அந்த கொள்ளையர்களை ஊரைவிட்டே அடித்து துரத்தினார்கள். அப்போது தான் அந்த அம்பாளின் அருளைப்பற்றி ஊர் மக்கள் அனைவரும் தெரிந்துக் கொண்டனர்.
அதுவரை பொம்மியும், திம்மியும் மட்டுமே வழிப்பட்டுக்கொண்டு வந்த சமுண்டீஸ்வரியை ஊர் மக்கள் அனைவரும் வழிப்பட ஆரம்பித்தனர். சகோதரர்கள் அந்த அம்பாளின் பெயர் 'சாமுண்டீஸ்வரி' என்று கூறினார்கள். அதன் பிறகு ஊர் மக்கள் செல்லமாக அம்மனை 'செல்லியம்மன்' என்று அழைக்க ஆரம்பித்தனர்.
வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பக்கத்தில் தான் செல்லியம்மன் கோவில் இருக்கிறது. 'தன்னிடம் வரம் கேட்டு வருபவர்களை வெறும் கையோடு அம்பாள் அனுப்பியதே கிடையாது. நாம் என்ன வேண்டி வந்தாலும் அதை நிறைவேற்றி விடுவாள்' என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
இக்கோவில் 1000 வருடம் பழமையானது என்று சொல்லப்படுகிறது. இக்கோவிலின் தலவிருட்சம் மூங்கில், அத்தி, வேப்பமரமாகும். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளியால் ஆன தேரை கோவிலை சுற்றி பக்தர்கள் இழுத்து செல்லும் நிகழ்வு நடைப்பெறும்.
மூங்கில் மரத்தில் ஊஞ்சலை கட்டி பெண்கள் குழந்தை வரம் வேண்டுவார்கள். இத்தகைய சக்தி வாய்ந்த கோவிலுக்கு நீங்களும் ஒருமுறை சென்று வருவது நல்ல பலனைத் தரும்.