பயணத்தைப் பாதுகாப்பாக்கும் வெண்ணங்கொடி முனியப்பன்!

Vennankodi Muniyappan who makes the journey safe
Vennankodi Muniyappan who makes the journey safe
Published on

சுற்றுலாவுக்கு மட்டுமல்ல; ஆன்மிகத்துக்கும் பெயர் பெற்ற ஊரான சேலத்தில் ஈஸ்வரன், பெருமாள், மாரியம்மன்கள் மட்டுமல்ல; காவல் தெய்வமான முனியப்பனுக்கும் சிறப்பான வழிபாடுகள் உண்டு. பூட்டு முனியப்பன், செட்டிக்காட்டு முனியப்பன், தலை வெட்டி முனியப்பன், மேட்டூர் முனியப்பன், இருட்டுக்கல் முனியப்பன் என திசைக்கொரு  முனியப்பன்கள் சேலம் மக்களின் காவல் தெய்வங்களாக இருந்தாலும், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஜாகிர் அம்மாபாளையத்தில் கம்பீரமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் வெண்ணங்கொடி முனியப்பன்.

சேலத்தைத் தாண்டி வாகனங்களில் பயணிக்கும் வெளியூர்  பயணிகள் வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலில் தங்கள் வாகனத்தை நிறுத்தி இவரை வழிபடாமல் செல்வதில்லை. காரணம், பயணங்களின்போது இந்த முனியப்பனை வேண்டி எலுமிச்சை கனி பெற்றால் அவரே உடன் வந்து விபத்துகளில் இருந்து உங்களைக் காப்பதாக அனுபவத்தில் உணர்ந்தவர்கள் சொல்கின்றனர். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் முழுமையாக வெண்ணங்கொடிகள் சூழ்ந்துள்ளதால் இவருக்கு வெண்ணங்கொடி முனியப்பன் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.

புராண காலத்தில் அண்டகாசுரன் எனும் கொடிய அசுரனை அழிக்கும் பொருட்டு காத்தாயி அம்மன் என்ற பெயரில் தோன்றிய அன்னை பராசக்தி,  லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி, சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கி அவர்கள் மூலம் அசுரனை அழித்ததாகவும், பிறகு அந்த ஏழு முனிகளையும் ஒன்றாக்கி முனியப்பன் என்ற ஒரே வடிவமாகி கலியுகத்தில் மக்களை காப்பதற்காக அன்னையால் அனுப்பப்பட்டதாக வரலாறு.

முனியப்பனின் அம்சமாக விளங்குபவரே வெண்ணங்கொடி முனியப்பன். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலின் மூலவரான முனியப்பன் வெண்ணங்கொடி என்ற ஒரு வகை மரக்கொடி படர்ந்த பகுதியில் அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறார். தவறைக் கண்டால் கண்டிக்கும் கண்களுடன் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு வலது கையில் வேலும், இடது கையில் வாளும் வைத்து அருள்புரிகிறார். ஐந்து தலைமுறைகளைக் கடந்துள்ளது இந்தக் கோயில்.

இதையும் படியுங்கள்:
செல்வ வளம் தரும் பூரண கும்ப கலசம் பற்றி அறிவோமா?
Vennankodi Muniyappan who makes the journey safe

தங்களின் வேண்டுதல்களை சீட்டுகளில் எழுதி முனியப்பனின் சூலாயுதத்தில் கட்டினால் அந்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்பது பக்தரின் ஆழ்ந்த நம்பிக்கையாக உள்ளது. அவ்வாறு கட்டி தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் அதற்குரிய நேர்த்திக்கடன்களை செய்தும் மகிழ்கின்றனர். முக்கியமாக, அமாவாசையில் செய்வினை, பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்னைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த பரிகார பூஜைகளும், எலுமிச்சை பழத்தில் குங்குமம் தடவி குழந்தைகள் முதல் பெரியவர் வரை திருஷ்டி கழிக்கப்படுதலும் இங்கு பிரசித்தம்.

குழந்தைப்பேறு மற்றும் திருமணம் வேண்டி பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்தவுடன் தொட்டில் கட்டியும் பொங்கல் வைத்தும் வழிபடுகின்றனர். இங்குள்ள வேல் விலங்கு என்னும் சிறிய இரும்பு கம்பி கொண்டு சுவாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலகி, பய உணர்வு நீங்குவதாக நம்பிக்கை. ‘கட்டுவர்த்தனம்’ என்ற பெயர் கொண்ட இந்த வழிபாடு சில குறிப்பிட்ட கோயில்களில் மட்டுமே நடைபெறுகிறது என்பது தனிச் சிறப்பு.

இக்கோயிலில் 24 மணி நேரமும் வாகன பூஜைகள் நடைபெறுகிறது. சேலம் வழியாக நீங்களும் வேறு ஊர்களுக்குப் பயணித்தால் அப்போது அவசியம் வழித்துணை முனியப்பனை தரிசித்து அருள் பெற்றுச் செல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com