
புரட்டாசி அமாவாசை முடிந்து 10ம் நாள் மகிசாசூரனை சக்தி சம்ஹாரம் செய்த நாள். வெற்றி. வெற்றி.. வெற்றி மட்டுமே விஜயதசமி. இந்த நாள் பல சிறப்புகளைப் பெற்று உள்ளது.
ராமர், ராவணனை அழித்தது இந்த நாள்தான். ஆதலால்தான் வட இந்தியாவில் ராம்லீலா என்று கொண்டாடப்படுகிறது. ராமாயணம் மட்டும் அல்ல. மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் நாடு, ஆயுதம் எல்லாம் இழந்து 12 வருடம் வனவாசம் முடிந்து ஒரு வருடம் தலைமறைவு வாழ்க்கையை முடித்து, இந்த விஜயதசமி நாள் அன்றுதான் தங்கள் ஆயுதங்கள் மற்றும் பலம் எல்லாம் திரும்ப பெற்றனர் என்று வியாசர் விஜயதசமியை பெருமை படுத்தினார். இப்படி சக்தியை பூஜிக்க சிறந்த நாள் விஜயதசமி தான்.
இந்த நாளில் எதைத் துவங்கினாலும் நிச்சயமாக வெற்றிதான். ஆதலால் தான் மக்கள் தங்கள் குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
நமது வீடுகளில் விஜயதசமிக்கு முதல் நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை சரஸ்வதி முன் வைத்து பூஜிப்பார்கள். அன்று முழுக்க முழுக்க யாரும் எதுவும் படிக்க மாட்டார்கள். அதேபோல் எழுதவும் மாட்டார்கள். சரஸ்வதியை நினைத்து தியானம் மட்டுமே செய்வார்கள்.
ஆனால், 10ம் நாள் விஜயதசமி அன்று நிச்சயமாக எல்லோரும் படிக்க வேண்டும். அதேபோல் எழுத வேண்டும். குழந்தைகளுக்கு அரிசியில் அனா ஆவன்ன இனா…என்று கை பிடித்து எழுத கற்றுக் கொடுப்பார்கள்.
வியாபாரிகள் தங்கள் வியபாரத்தைப் பெருக்க விஜயதசமியைக் கொண்டாடுவார்கள். அப்படி இப்படி எப்படி பார்த்தாலும் வெற்றி மேல் வெற்றி என்று பார்த்தால் அது விஜயதசமி மட்டுமே.
நமது கோயில்களில் நவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்மன் 9 நாளும் 9 அம்மனாக அலங்கரிப்பார்கள். தினமும் அம்மனை ஒரு கோலத்தில் பார்ப்பது சிறப்பு. 9ம் நாள் சரஸ்வதி அலங்காரம்தான் எல்லா கோயில்களிலும்.
நவராத்திரி நமது கலாச்சாரம். விஜயதசமி நமது வெற்றியின் ஆதாரம்.
கொண்டாடுவோம்...ஓம் சக்தி…!!!