பத்தாம் நாள்: வெற்றியைக் குவிக்கும் விஜயதசமி திருநாள்!

Vijayadashami
Vijayadashami
Published on
இதையும் படியுங்கள்:
ஒன்பதாம் நாள் - வாக்கில் வல்லமை தருவாள் வாணி!
Vijayadashami

நவராத்திரி வைபவம் நிறைவடைந்த அடுத்த நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. நேற்று சரஸ்வதி முன் சமர்ப்பித்த புத்தகம், எழுதுபொருள், கருவிகள் போன்றவற்றை புனர்பூஜை செய்து எடுத்துக் கொள்ளலாம். மாணவர்கள் வீட்டுப் பெரியவர்கள் கரங்களில் தம் புத்தகங்களைக் கொடுத்து அவர்களுடைய ஆசிர்வாதத்துடன் திரும்பப் பெற்றுக் கொள்வது வழக்கம். இதனால் கல்வியில் அபிரிமிதமான முன்னேற்றத்தை அவர்களால் அடைய முடியும். 

இதேநாளில், முதன்முதலாக பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்து வைப்பார்கள். அதாவது சரஸ்வதி, ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தி ஆகிய கடவுளரை வழிபட்டு, ஒரு தாம்பாளத்தில் நெல் பரப்பி, அதில் குழந்தையின் கைப் பிடித்து ‘அ…ஆ…‘ எழுதச் சொல்லிக் கொடுக்கும் சம்பிரதாயம். இதுவே வித்யாரம்பம் ஆகும். 

‘விஜயம்‘ என்றால் வெற்றி என்று பொருள். விஜயதசமி என்றால் வெற்றித் திருநாள். மேலோட்டமாகப் பார்த்தால் ஏதேனும் போட்டியிலோ, தேர்விலோ அல்லது போரிலோ வெற்றி என்றுதான் அர்த்தம் வரும். ஆனால் நம் மனதிலுள்ள கோபம், விரோதம், பகை, காழ்ப்புணர்வு முதலான தீய அரக்கர்களை வெற்றி கொள்வது என்பதுதான் உண்மையான அர்த்தமாகும். நமக்குள் பகை என்ற புகை இல்லாவிட்டால்தனே நல்லிணக்கம், நட்புறவு, சமுதாய அக்கறை, பிறர் நலன் விழைவது என்று அன்பு மலர்கள் மணம் வீசும்!

உள்ளத்தில் மாசு இல்லாவிடின், இறையருள் ஏகோபித்துப் பரவும், எங்கும் நிம்மதி, மகிழ்ச்சி, உற்சாகம் நிலவும். 

தெய்வீக கொண்டாட்டம் என்பதால், புராண, இதிகாசங்களின்படி மகிஷன் முதலான அரக்கர்கள் மாய்ந்து அந்த வெற்றியைக் கொண்டாடும் திருநாளாகவும் விஜயதசமி அமைகிறது. அதோடு ஒரு பெண் பூவாகவே இருந்தாலும், அவளும் புயலாக மாறுவாள் என்றும் இந்த சம்பவங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. தற்காலத்தில் சமூகத்தின் நடைபெறும் ஒழுக்கக் கேடுகளை நினைத்தால், பெண்கள் மிகுந்த தைரியசாலிகளாகத் திகழ வேண்டிய அவசியத்தை முன்னிருத்த வேண்டியிருக்கிறது. இந்த நந்நாள், அம்பிகையின் அருளால் பெண்களுக்கு அத்தகைய மன உறுதியை அளிக்கும் திருநாளாக அமைகிறது. 

இதையும் படியுங்கள்:
எட்டாம் நாள் - கல்விக் கடலின் கரை காண, தோணியாவாள் கலைவாணி!
Vijayadashami

மகாபாரத காலத்திலேயே துர்க்கை வழிபாடு இருந்திருக்கிறது. கௌரவர்களின் சதியால் வனவாசம் மேற்கொள்ள வேண்டியிருந்த பாண்டவர்கள், அந்த தண்டனையின் கடைசி ஆண்டில் அஞ்ஞாத வாசம் புரிந்தார்கள். அதாவது தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் ஒராண்டு அவர்கள் வாழ வேண்டும். அதற்குப் பிறகு கால கெடு முடிவதால், அஸ்தினாபுரத்துக்குத் திரும்பலாம் என்பது கௌரவர்-பாண்டவர் ஒப்பந்தம். 

இந்தக் கடைசி ஆண்டு அவர்கள் விராடம் என்ற நாட்டில் கழிக்கத் தீர்மானித்தார்கள். அங்கும் அவர்களை யாரும் அடையாளம் தெரிந்து கொண்டுவிடக் கூடாது என்பதால் திரௌபதியையும் சேர்த்து அறுவரும் மாறுவேடம் பூண்டு விராட மன்னனின் அரண்மனையில் பலவகைப் பணிகளை மேற்கொண்டார்கள். 

அதற்கு முன், தங்களிடம் உள்ள ஆயுதங்களை எங்காவது மறைத்து வைத்துவிட்டு, காலகெடு முடிந்த பிறகு வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்கள். அப்படி எங்கே அவற்றை மறைத்து வைப்பது? அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது மிக பிரமாண்டமான ஒரு வன்னி மரத்தைதான்.  அதன் பொந்துக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்தார்கள். கௌரவர்களின் துரோகத்தை முன்கூட்டியே ஊகித்ததால், பின்னாளில் மாபெரும் போருக்குத் தாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று எதிர்பர்த்தே அவ்வாறு செய்தார்கள். 

துரியோதனன் விதித்த காலகெடு முழுவதுமாக முடிந்தபின், விராட நாட்டிலிருந்து வெளியேறி, சிவபெருமான் அருள் பெற்ற வன்னி மரத்தை இருபத்தோரு முறை வலம் வந்து தம்முடைய ஆயுதங்களை எடுத்துக் கொண்டார்கள். ஊகித்தபடியே யுத்தம்தான் யாருக்கு அரசாட்சி என்பதை நிர்ணயிக்கும் என்ற கட்டாயம் வந்தது.  அதனால் குருக்ஷேத்திர யுத்தம் மூண்டதும், இந்த ஆயுதங்கள் பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்ததும் நடந்தது. 

இதையும் படியுங்கள்:
ஏழாம் நாள் - சகல கலைகளையும் அருள்வாள் கலைவாணி!
Vijayadashami

ஆகவே, இந்த விஜயதசமித் திருநாளில் துர்க்கை - மஹாலக்ஷ்மி - சரஸ்வதி ஆகிய அம்பிகையின் மூன்று அம்சங்களையும் ஒருசேர வழிபட்டு, நம் வளமான வாழ்க்கைக்கு அடிகோலுவோம். 

இந்த நந்நாளில் அம்பிகையை பலவகை வாசனை மலர்களால் அர்ச்சித்து போற்றலாம். பாசிப்பருப்பு பாயாசமும், தயிர் சாதமும் தயாரித்து நிவேதனம் செய்யலாம். 

நிறைவாக தாம்பாளத்தில் ஆரத்தி கரைத்து அதன் நடுவே கற்பூரம் ஏற்றி, மொத்த கொலுப்படிக்கும் மூன்று முறை சுற்றி திருஷ்டி கழித்து மங்களகரமாக நவராத்திரி பண்டிகையை நிறைவு செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com