பஞ்சாசன தலம் மனோன்மனீஸ்வரர் திருக்கோவில் - இது என்ன கோவில் என்று புதுமையாக உள்ளதா? ஆச்சரியப்பட வேண்டாம். இந்த மனோன்மனீஸ்வரர் திருக்கோவில் நாங்குநேரி திசையன்விளை செல்லும் மார்க்கத்தில் விஜயநாராயணம் ஊரில் அமைந்துள்ளது. இறைவன் பெயர் மனோன்மனீஸ்வரர். இறைவி பெயர் மனோன்மனீஸ்வரி என்ற சிவகாமி.
அன்னை பார்வதி உலக நன்மைக்காக சிவனை வேண்டி 1008 தாமரை மலர்களால் பூஜை செய்து வந்தார். பூஜை முடிந்த பின் அந்த 1008 தாமரை மலர்களும் வெவ்வேறு இடங்களில் விழுந்தன. தாமரை மலர்கள் விழுந்த இடங்களில் 1008 சிவலிங்கங்கள் தோன்றியன.
அவ்வாறு தோன்றிய 74 வது இடம் தான் விஜய் நாராயணம் மனோன்மனீஸ்வரர் கோவில் ஆகும். இது பஞ்ச ஆசன தலமாக கருதப்படுகிறது.1008 சிவசேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு பௌர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறும். இங்கு நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தில் பார்வதி தேவியும் 21 சித்தர்களும் உலா வருவதாக கூறப்படுகிறது. எனவே இங்கு நடைபெறும் பௌர்ணமி கிரிவலம் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இங்கு 21 சித்தர்களுக்கும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இந்தக் கோவிலின் முன்பாக உள்ள தீர்த்த குளம் சிவகங்கை தீர்த்த குளம் என போற்றப்படுகிறது. இதில் உள்ள நன்னீர் எல்லா வியாதிகளையும் போக்கும் தன்மை கொண்டது.
வல்லநாட்டில் உள்ள சாது சிதம்பர சுவாமிகள் இங்குள்ள தீர்த்தத்தை நோயாளிகளுக்கு கொடுத்து குணப்படுத்தினார்கள் என்று கூறப்படுகிறது. மனோன்மனீஸ்வரர் கோவில் பஞ்ச கைலாயத்தில் கடைசி சேத்திரமாக உள்ளது.
மகாபாரதத்தில் அர்ஜுனன் போரில் வெற்றி பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டது. அர்ஜுனன் வியாசரின் யோசனைப்படி இங்குள்ள நாராயணனுக்கு பூஜை செய்து வழிபட்டு போரில் வெற்றி பெற்றார். எனவே அர்ஜுனன் நாராயணனுக்கு இந்த இடத்தில் ஒரு பெரிய கோவிலும் கட்டி 1008 பிராமணர்களையும் இங்கு குடி அமர்த்தி வைத்தான். எனவே இந்த ஊருக்கு விஜய நாராயணம் என்ற பெயர் வந்தது.
பௌர்ணமி கிரிவலத்தில் கலந்து கொள்வது சிறப்பாகும். பௌர்ணமி கிரிவலத்தின் போது மிகப்பெரிய அளவில் அன்னதானம் நடைபெறும். இங்கு நடைபெறும் அன்னதானத்திற்கு உதவி செய்வது பல நன்மைகளை பயக்கும்.
திருநெல்வேலி நாங்குநேரி திசையன்விளை போன்ற இடங்களில் இருந்து விஜயநாராயணத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. மேலும் மாதந்தோறும் நடக்கும் பௌர்ணமி கிரிவலத்துக்கு திருநெல்வேலியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. விஜயநாராயணத்தில் வில்வ மரங்களும் மருதாணி மரங்களும் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊரில் சிவனும் நாராயணரும் தனித்தனியாக அருள் பாலித்து வருகிறார்கள். குழந்தை இல்லாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் குழந்தை வரம்கிடைக்கும் என்பது நம்பிக்கை.