
பாஞ்சராத்ர ஸ்ரீ ஜயந்தி என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்ததாகக் கருதப்படும் ஸ்ரீ ஜயந்தியாகும். கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜயந்தி என நாம் கூறுவது ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கியிருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இன்னொன்று அதே தேய்பிறை அஷ்டமியும் ரோஹிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி ஆகும். சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாகக் கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும், பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜயந்தி என்றும் ஸ்ரீ கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு இரண்டு ஆகமங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று வைகானஸ ஆகமம், இன்னொன்று பாஞ்சராத்ர ஆகமம். வைகானஸ ஆகமத்திற்கு அஷ்டமி பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பஞ்சராத்ர ஆகமம் அஷ்டமியினுடைய மிச்சமும் ரோஹிணி நட்சத்திரத்தின் மிச்சமும், முக்கியமாக சூரிய உதயம் கழிந்து இரண்டு நாழிகைகள் அஷ்டமி திதி, ரோஹிணி நட்சத்திரம் இருந்தால் அதை பாஞ்சராத்ர ஆகம கிருஷ்ண ஜயந்தியாக எடுத்துக் கொள்வார்கள். ஸ்ரீ வைஷ்ணவ ஜயந்தி, அதாவது வைஷ்ணவ கிருஷ்ண ஜயந்தி என்று சொல்லப்படுவதும் பாஞ்சராத்ர ஜயந்திதான்.
இந்த பாஞ்சராத்ர ஜயந்தி பிருந்தாவனம், மதுரா, கோகுலம், துவாரகை, குருவாயூர், உடுப்பி பூரி ஜெகநாத், பண்டரிபுரம் போன்ற ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயங்கள் மற்றும் பெருமாள் கோயில்களில் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று வழுக்கு மரம் ஏறுவது, உறியடி திருவிழா என பல ஸ்ரீ கிருஷ்ணரின் குறும்புகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறும்.
ஒரு நீண்ட நெடிய கம்பை வழுவழுப்பாக்கி அதன் மேல் விளக்கெண்ணெய், வெண்ணெய் போன்றவற்றை அதிகமாக தடவி அதன் மேல் பண முடிப்பைக் கட்டி செங்குத்தாக நட்டு வைப்பார்கள். இதற்கு வழுக்கு மரம் என்று பெயர். இதில் ஏறி அதன் நுனியில் கட்டப்பட்டிருக்கும் பண முடிப்பை எடுப்பவர்களுக்கு அதில் உள்ள பணம் முழுவதும் சொந்தம். அதேபோல, உறியடி உத்ஸவம் நடைபெறும். ஸ்ரீகிருஷ்ணர் சிறுவனாக இருந்தபொழுது வெண்ணையை திருடி உண்ட லீலையை இந்த உறியடி உத்ஸவம் நினைவூட்டும். பக்தர்கள் வெண்ணெய் அல்லது தயிரால் நிரப்பப்பட்ட ஒரு மண் பாண்டத்தை உறி கயிற்றின் மூலம் உயரத்தில் கட்டி அதன் கீழ் நின்று கண்ணை கட்டிக்கொண்டு அதை கழியால்அடிக்க முயல்வார்கள். இதுவே உறியடி உத்ஸவம்.
கண்ணபிரான் பிறந்த நாளன்று வீடுகளில் மிகச் சிறப்பாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீட்டை சுத்தமாக்கி மலர்களினால் அலங்கரித்து, கோலமிட்டு கையில் வெண்ணையுடன் தவழும் குழந்தை கண்ணனுடைய படத்தை வைத்து அலங்கரித்து வாசல் முதல் சுவாமி வரை உள்ள இடம் வரை சிறு சிறு பாதங்கள் வரைவது வழக்கம் கோகுலத்தில் கண்ணன் தோழியர்களுடன் கோபியர் வீடுகளில் வெண்ணை திருடும்போது அவசரத்திற்கு கீழே சிதறிய வெண்ணையில் கண்ணனின் மலர் பாதங்கள் வீடு முழுவதும் வெண்ணைய் ஆனது. அதனால்தான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த நாளன்று வெண்ணையினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இந்த காலத்தில் வெண்ணையினால் பாதம் போட முடியாது. அரிசி மாவினால் பாத கோலம் போட்டு கிருஷ்ணரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்கிறார்கள்.
வைஷ்ணவர்கள் கொண்டாடும் இந்த பாஞ்சராத்ர ஸ்ரீ ஜயந்தி திங்கட்கிழமை அன்றும், வைகானஸ ஸ்ரீ ஜயந்தி ஞாயிற்றுக்கிழமையும் கொண்டாடப்படுகிறது. நாமும் பகவான் கண்ணனை நினைத்து வழிபட்டு பெருமாள் கோயில் கிருஷ்ணர் கோயில்களில் நடைபெறும் சிறப்பு அலங்காரம் பூஜையில் பங்கேற்று பகவான் கிருஷ்ணரின் அருளைப் பெற்று நிறைவுடன் வாழ்வோம்.