பொதுவாக, நாம் ஒரு ஆபத்தில் இருக்கும்போது கடவுள் ஏதோ ஒரு மனித ரூபத்தில் வந்து நம்மை நிச்சயம் காப்பாற்றுவார் என்றே நம்புவோம். அதைப்போலவே பல சந்தர்ப்பங்களில் தெய்வம் நமக்கு பற்பல மனிதர்கள் வாயிலாக நம்மை ஆபத்தின் வாயிலிருந்து காப்பாற்றிய ஆச்சரியத்தையும் நாம் அனுபவித்திருப்போம். தெய்வத்திற்கு பல சந்தர்ப்பங்களில் விலங்குகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்திருப்பதை நம் புராணங்கள் பல இடங்களில் புளகாங்கிதத்தோடு எடுத்துக்காட்டுகிறது.
இராமாயணத்தில், ஸ்ரீராமபிரான் கடலைக் கடந்து இலங்கை நோக்கிச் செல்ல பாலம் அமைக்க முற்பட்டபோது, வானரங்கள்(குரங்குகள்) எல்லாம் பெரிய மலைகளை, பாறைகளை, கடலில் கொண்டு போய் சேர்த்து பாலம் அமைக்க வினயத்தோடு உதவி செய்ததாம். குரங்குகள் செய்த அந்த உதவியை பார்த்து, ‘தாங்களும் ஏதாவது உதவி செய்ய வேண்டுமே பெருமானுக்கு; ஆனால் நம்மால் அவ்வளவு பெரிய பாறைகளை எல்லாம் முதுகிலோ கைகளிலோ சுமந்து கொண்டு போக முடியாதே’ என எண்ணி வருந்திய அணில்கள், ‘நமக்கு உதவி என்றால் ஓடி வருபவன் அந்த பகவான்தானே, அவனுக்கு உதவி செய்ய இது ஒரு நல்ல தருணம். எப்படியாவது பெருமாளுக்கு உதவி செய்வோம்’ என்று எண்ணி எல்லா அணில்களும் கூடி பேசி ஒரு நல்ல முடிவுக்கு வந்ததாம்.
அணில்கள் எல்லாம் ஒரு படையாக கூடி கடலில் நனைந்து, மண்ணில் தம் உடல்களைப் புரட்டிக்கொண்டு, அம்மணலை பாறைகளின் இடுக்கில் பூச்சு வேலைக்கு உதவுவது போல மணல்களை உதறி மிகச்சிறப்பான கைங்கர்யத்தைச் செய்ததாம். அந்தக் கைங்கர்யத்தை மெச்சி அல்லவா ஸ்ரீராமபிரான் அணில்களின் முதுகை தம் மூன்று விரல்களால் தடவிக் கொடுத்தார்? இந்த கைங்கர்ய நிகழ்வை நினைவுப்படுத்தும்விதமாக அன்றோ, அணில்களின் முதுகில் இன்றளவும் அந்த மூன்று கோடுகள் தடயங்களாக உள்ளன?
அணில்கள் இப்படி ஸ்ரீராமருக்கு உதவி செய்தது என்றால், கழுதை ஸ்ரீகிருஷ்ணர் பிறக்கும்போது செய்த உதவி இருக்கிறதே, அதுவும் பேருதவிதான். கம்சன் தனது தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால்தான் தனது உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தவுடன், கணவன் மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான். இவர்களுக்குக் குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான். தம் சிறைக்காவலர்கள் மீது கம்சனுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அவர்கள் தேவகிக்குக் குழந்தை பிறக்கும் செய்தியை தன்னிடமிருந்து மறைத்து விடுவார்களோ என அவன் பயந்தான். கழுதை எப்படியும் பொய் சொல்லாது. அதற்கு நுகரும் சக்தி மிக மிக அதிகம். குழந்தை பிறந்தால் உடனடியாக கழுதை கத்த ஆரம்பித்து குழந்தை பிறந்திருப்பதை தம் கத்தலின் வழியே காண்பித்துக் கொடுத்து விடும் என்பது கம்சனுக்கு நன்றாகத் தெரியும்.
கம்சன் நினைத்ததை போலவே ஏழு குழந்தைகள் பிறந்ததுமே கழுதை கத்த, அந்த கத்தலின் துணை கொண்டு தேவகியின் ஏழு குழந்தைகளையும் உடனடியாக கொன்றான் கம்சன். எட்டாவது குழந்தையாக கண்ணன் பிறந்த உடனேயே நேராக வசுதேவர் கழுதையிடம் சென்று அதன் காலில் விழுந்து வணங்கி, “தயவு செய்து கத்தி விடாதே” என கெஞ்சினார். பிறந்திருப்பது இறைவன் என்பதை உணர்ந்த அந்தக் கழுதை சத்தம் போட்டு கண்ணனை கம்சனிடம் காட்டி கொடுக்காமல் காப்பாற்றியது.
வாயற்ற ஜீவன்கள்தான் என்றாலும், நம்மை இவ்வுலகிற்கு கொண்டு வந்த இறைவனுக்கு ஏதோ ஒரு வகையில் நாம் நன்றி உடையவர்களாக இருப்போம் என்றே அணிலும், கழுதையும் ஒரு மிகப்பெரிய வாழ்க்கைப் பாடத்தை அல்லவா நமக்கு நடத்திக் காட்டி இருக்கின்றன!