வில்வ இலைகள் சுற்றுச்சூழலை பாதுகாத்து அதிக அளவு பிராணவாயுவை வெளியிடும் தன்மை கொண்டவை.
ஈசனின் அடையாளங்கள் ருத்ராக்ஷம், திருநீறு, வில்வம் மற்றும் பஞ்சாட்சர மந்திரம். அபிஷேகப் பிரியரான சிவனுக்கு வில்வார்ச்சனை மிகவும் விருப்பமான ஒன்று. பல சொர்ண புஷ்பங்களுக்கு இணையானது வில்வம்.
அஷ்ட வில்வங்கள் என்பது துளசி, நாயுருவி, வன்னி, நெல்லி, நீர்முள்ளி, விலா, அருகு மற்றும் வில்வமாகும்.
வில்வ சமித்தால் ஹோமம் செய்வது செல்வத்தை உண்டாக்கும். வில்வ மரத்தின் அடியில் ஜபம் செய்வதும், வில்வ மர பிரதக்ஷிணம் செய்வதும் புண்ணியத்தை தரக்கூடியது.
வில்வ மரத்தின் வேர், இலை, பழம், பட்டை போன்றவை நோய் தீர்க்கும் மருந்தாகும். வில்வப் பழம் தோலை பதனிடுவதற்கும், வர்ணம் தீட்டுவதற்கும் தொழில்முறையில் பயன்படுத்தப்படுகிறது.
வில்வ இலை அர்ச்சனைக்கும், வில்வப்பழம் அபிஷேகத்திற்கும், இந்த மரத்தினுடைய கட்டையானது ஹோமம் செய்வதற்கும் பயன்படுகிறது. வில்வ பழத்தின் ஓட்டை சுத்தம் செய்து அதில் விபூதியை வைத்துக்கொண்டு பயன்படுத்த எண்ணிலடங்கா பலன்கள் கிடைக்கும்.
காட்டூர் திருவாலீஸ்வரன் திருக்கோவிலில் மகிழ மரம் தல விருட்சமாக இருந்தாலும் இக்கோவில் வளாகத்தில் உள்ள மகாவில்வ மரம் மிகவும் புனிதமானது. ஒரு வில்வ தளத்தில் 7, 9,11,13 இதழ்கள் உள்ளன. இந்த அதிசய வில்வ தளத்தால் வாலியும், அனுமனும் காட்டூர் திருவாலீஸ்வரனை அர்ச்சித்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.
தெய்வீகத் தன்மை பொருந்திய வில்வ தளத்தைக் கொண்டு ஈசனை அர்ச்சிக்க நம் பாவங்கள் அனைத்தும் விலகும்.
வில்வ இலைகளை பூஜைக்கு பயன்படுத்திய பிறகு மீண்டும் கழுவி பூஜைக்கு உபயோகிக்கலாம். இப்படி ஆறு மாதங்கள் வரை காய்ந்தாலும் வில்வ இலைகளை பூஜைக்கு பயன்படுத்தலாம். அதன் புனிதம் கெடாது.
வில்வ மரத்தை பதினொரு முறை வலம் வந்து வணங்குவது எவ்வளவு பெரிய தீராத பிரச்சினைகளையும், நோய்களையும் தீர்த்து வைக்கும்.
சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி மற்றும் மாத பிறப்பு தினங்களில் வில்வத்தை பறித்தல் கூடாது. முதல் நாளே பறித்து வைத்துக் கொள்ளலாம்.
மார்கழி மாதத்தில் திருப்பதியில் வெங்கடேச பெருமாளுக்கு வில்வ தளத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
மயிலாப்பூரில் உள்ள மாதவப் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமிக்கு வில்வத்தால் அர்ச்சனை நடைபெறுகிறது.
மகாலட்சுமியின் சொரூபமாக போற்றப்படும் வில்வ மரத்தை வீடுகளில் வளர்ப்பது செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.