

சனாதன தர்மமானது இயற்கையில் தோன்றியதால் , அதன் கோட்பாடுகள் எப்போதும் இயற்கையை பாதுகாக்கும் வண்ணம் , அதற்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுவதாக இருக்கின்றன. ஹிந்து மதத்தில் வில்வமரம் என்பது மிகவும் புனிதம் வாய்ந்ததாகவும் சிவபெருமானுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. திங்கட்கிழமை எப்போதும் சிவனுக்கு உரிய நாளாக இருக்கிறது , அதன் காரணமாக அந்த கிழமை சோமவார் என்றும் கூட அழைக்கப்படுகிறது.
அந்த நாளில், சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான வில்வ இலைகளை அர்ப்பணித்து வழிபாடு செய்வதால், அவர் மனமிறங்கி பக்தர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்வார். உலகம் முழுக்க எத்தனையோ மரங்கள் இருந்தாலும் சிவபெருமானுக்கு வில்வ மரத்து இலைகள் எதனால் மிகவும் பிடித்தமானது? என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராண கதையும் உள்ளது.
வில்வ மரத்தின் தோற்றம்:
புராணக் கதைகளின்படி பார்வதி தேவி ஒருமுறை மந்தார மலைச்சாரலில் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தார். விளையாடியதால் மிகவும் களைப்புற்ற அவரது நெற்றியில் இருந்து ஒரு துளி வியர்வை பூமியில் விழுந்தது. அந்த வியர்வை துளி பூமியில் ஒரு விருட்சமாக வளர்ந்தது. அதுதான், சிவபெருமானுக்கு பிடித்தமான மிகவும் புனிதமிக்க வில்வ மரம். தேவியின் வியர்வைத் துளியில் இருந்து தோன்றியதால், அந்த மரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தேவியின் பல்வேறு அம்சங்கள் நிறைந்து இருக்கிறது.
வில்வ மரத்தின் வேர்களில் மலைமகள் கிரிஜா தேவி வசிக்கிறாள், தண்டு பகுதியில் மகேஸ்வரி தேவியும், கிளைகளில் தாட்சாயணி தேவியும், இலைகளில் பார்வதி தேவியும், பூக்களில்
கௌரியும், கனிகளில் காத்யாயனி தேவியும் இருக்கிறாள். இப்படி வில்வ மரம் முழுமையாக உமையின் சொரூபமாக இருப்பதால், சிவபெருமானுக்கு பிடித்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. அவருக்கு மிகவும் வில்வ இலைகளைக்கொண்டு பூஜை செய்யும் போது மணம் மகிழ்கிறார்.
பல இடங்களில் வெட்டவெளியில் இருக்கும் சிவலிங்கங்கள் பெரும்பாலும் வில்வ மரத்தடியில் இருக்கும் , சிவனும் வில்வமர நிழலில் வாசம் செய்வதையே விரும்புகிறார். வில்வமர நிழல் அவரை குளிர்விப்பது, பார்வதி தேவியே அவரை தழுவுவதாக உணர்கிறார்.
வில்வ இலைகள் எப்போதும் மூன்று இலைகளை கொண்ட தோற்றத்தில் இருக்கும். இவை மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு , பிரம்மா ஆகியோரைக் குறிக்கிறது. இது சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கிறது. சிவனின் நெற்றிக்கண்ணையும் சேர்த்து மூன்று கண்களையும் இது பிரதிபலிக்கிறது. மேலும் பிறப்பு, நிகழ்வு, இறப்பு ஆகிய முக்காலங்களையும் உணர்த்துகிறது.
வில்வ இலைகளில் ஏராளாமான மருத்துவ குணங்களும் உள்ளன. புராண காலத்தில் பாற்கடலை கடையும்போது, தோன்றிய விஷத்தின் வீரியத்தைக் குறைக்க வில்வ இலைகளை அதன் மீது தூவியதாக சொல்லப்படுவதும் உண்டு. சித்த மருத்துவத்தில் வில்வ மரத்தின் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக பயன்படுத்தப் படுகிறது. வில்வ மரத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு புராணக் கதையும் உண்டு.
சிவராத்திரி தினமான அன்று, காட்டில் வேடன் ஒருவன் புலியிடம் மாட்டிக் கொண்டான், அதனிடமிருந்து தப்பிக்க அருகில் இருந்த ஒரு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான். புலி எப்போது அவன் இறங்குவான் என்று மரத்தடியில் காத்திருந்தது, நேரம் இப்படியே போகும்போது, வேடன் மரத்தில் உள்ள இலைகள் ஒவ்வொன்றாக பிய்த்து கீழே போட்டுக் கொண்டிருந்தான்.
இந்த செயல் விடியும் வரை நிகழ்ந்து கொண்டே இருந்தது. வேடன் அமர்ந்திருந்தது வில்வ மரம் அதன் பறித்தது வில்வ இலைகளை, அவன் எதேச்சையாக கீழே போட்ட இலைகள் அனைத்தும், மரத்தடியில் இருந்த சிவலிங்கம் மீதே விழுந்தது.
அன்று சிவராத்திரி ஆனதால், அவன் விடிய விடிய கண் விழித்து வில்வ இலைகளை தெரியாமல் சிவனுக்கு அபிஷேகம் செய்த காரணத்தினால், சிவபெருமான் வேடன் முன்னால் தோன்றி, அவனுக்கு வீடுபேற்றை அளித்தார். இந்த சம்பவத்தில் இருந்து வில்வ இலைகளின் பெருமை அதிகரித்தது. விஷ்ணு , பிரம்மா, இந்திரன் உள்ளிட்ட தேவர்களும் சிவபெருமானை வில்வ இலைகளில் அபிஷேகம் செய்துள்ளனர்.