கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முகக் கவசம் முதலானவற்றை நாம் தினமும் பாராயணம் செய்தால் முருகப்பெருமானின் அருளைப் பெறலாம். இதுபோலவே அருணகிரிநாதர் அருளிச்செய்த வேல் வகுப்பு என்ற திருப்புகழ் பாடலை வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ‘வேல் மாறல்’ என்னும் பெயரில் ஒரு மகா மந்திரமாக அருளிச்செய்து நமக்குத் தந்திருக்கிறார். இது ஒரு சக்தி மிக்க மகா மந்திரமாகும்.
அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு என்ற பாடலின் பதினாறு அடிகளை மேலும் கீழும் முன்னும் பின்னும் ஏறி இறங்கி வருவது போலவும் மாறி மாறி நான்கு மடங்காக அமைத்து 64 அடிகள் கொண்ட வேல் மாறல் மகா மந்திரத்தை அருளியிருக்கிறார்.
பஞ்சாட்சரம் எனும் திருவைந்தெழுத்து மற்றும் சடாட்சரம் எனும் திருஆறெழுத்து முதலான மந்திர எழுத்துக்களை ஐங்கோணம் அறுகோணச் சக்கரங்களுக்குள் அமைத்து அந்த எந்திரங்களை பூஜை செய்வதால் பலன்கள் கிடைக்கும். இதே அமைப்பில் வேல்மாறல் மகாமந்திரத்தை வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார். இதன் காரணமாகவே வேல்மாறல் மந்திரம் சக்தி படைத்த ஒரு மந்திரமாக விளங்குகிறது.
வேல்மாறல் மகா மந்திரத்தை தொடர்ந்து ஒரு மண்டலம், அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் முருகன் படத்திற்கு முன்பாக விளக்கேற்றி வைத்து இந்த மகாமந்திரத்தைப் பாராயணம் செய்வது மிகுந்த பலனைத் தரும். இதை தினமும் காலை ஒரு முறை மற்றும் மாலை ஒரு முறை பாராயணம் செய்ய மனதிலுள்ள பய உணர்வு நீங்கும். மனதிற்கு நிம்மதி கிடைக்கும். மகிழ்ச்சியும் நிரந்தரமாகும். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து நம்மை பாதுகாத்து அருளும். மேலும், முருகனுக்குரிய முக்கிய விரத நாட்கள் மற்றும் கந்த சஷ்டி தினங்களில் இந்த வேல்மாறல் மகா மந்திரத்தைப் பாராயணம் செய்ய பல மடங்கு அதிகமான பலனைத் தரும். இதை முறையாக பாராயணம் செய்து வருபவர்களுக்கு அளவில்லாத பலன்களை அள்ளி வழங்கும். நோய்கள் அனைத்தும் தீரும், பிரச்னைகள் விரையில் அகன்றோடும்.
வேல் மாறல் மகா மந்திரம்:
‘திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில் உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் (1)
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் (64)
தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
வீரவேல் தாலைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை
வேலும் மயிலும் துணை’
இனி, வேல் மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்யும் முறையைப் பற்றி அறிவோம்.
‘திருத்தணியில் உதித்து அருளும்’ எனும் அடியை முதலில் பன்னிரண்டு முறையும் நடுவில் ஒவ்வொரு அடி முடிந்ததும் ஒரு முறையும் ஓத வேண்டும். முடிவில் மீண்டும் பன்னிரண்டு முறை ஓதவும். வேலும் மயிலும் துணை என்பதை ஆறு முறை சொல்லி முடிக்கவும்.
கார்த்திகை மாதத்தில் வேல் மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்வது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்குள் வேல் மாறல் மந்திரத்தை நீங்கள் பாராயணம் செய்து முடித்து விடலாம். காலை மாலை என இரு வேளையும் இதை நீங்கள் பாராயணம் செய்து வர உங்கள் வீட்டில் முருகப்பெருமான் எழுந்தருளுவார் என்பது ஐதீகம். சகல சௌபாக்கியங்களும் உங்களுக்குக் கிடைக்கும் என்பது நிச்சயம்.