மதுரையிலிருந்து இருபது கி.மீ. தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயக கோரக்கர் அருள்கிறார். பக்தர்களின் நோய்களையும், சனி தோஷத்தையும் இங்கே விநாயகர் உருவில் கோரக்கர் சித்தர் நிவர்த்தி செய்கிறார்.
ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகரை தரிசிக்கலாம். தட்சிணாயன காலத்தில் இந்த விநாயகரின் தெற்குப் பக்கத்திலும், உத்தராயன காலத்தில் வடக்குப் பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்கும் அதிசயத்தைக் காணலாம்.
கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகர் சிவலிங்க ஆவுடையார் மேல், வலது கையில் ஒடித்த தந்தத்துடனும், இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசானிய திசை நோக்கி அமர்ந்திருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் அருள் புரிகிறார் மிளகு பிள்ளையார். மழை பொய்த்தால், மிளகை அரைத்து இவரது உடலில் தடவி அபிஷேகம் செய்தால் உடனே மழை பொழியும் என்பது நம்பிக்கை.
மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் தன் காவலுக்கு நிறுத்தப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்துவிட்டார். அந்தச் சிறுவன் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்கிறார். இக்கோயிலில் திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்க்கும் வழக்கம் பக்தர்களிடையே இருக்கிறது.
விழுப்புரம் தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும்போது அதில் பொறிக்கப்படுள்ள விநாயகர் உருவத்தைக் காணலாம்.
நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதி கும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் காட்சி தருவது வித்தியாசமான அமைப்பு.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுப்ரமணியர் கோவிலினுள் ஆஜார்ய விநாயகரைத் தரிசிக்கலாம். யானை உருவில் வந்து வள்ளியை பயமுறுத்தி, தம்பி முருகனிடம் அடைக்கலம் புக வைத்த விநாயகர் இவர். ஆச்சிரயம் என்றால் பலமிக்க ஒருவனைத் தஞ்சமடைதல் என்று பொருள். அதுவே ஆஜார்ய என்றாகிவிட்டது!
தூத்துகுடி ஆறுமுக மங்கலத்தில் 2000 வருடத்திற்கு முன் ஆதிசங்கரரால் பாடப்பட்ட ஆயிரத்தெண் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கே சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள், பஞ்சமுக ஹெரம்ப கணபதி, நடராஜப் பெருமானோடு திருவீதி உலா வருகிறார்.
கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி காட்சி தரும் தலையாட்டி கணபதியை தரிசிக்கலாம்.
சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டன் நம்பிக்கு அருள் புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். பொள்ளாப் பிள்ளையார் என்றால் உளியால் செதுக்கப்படாதவர் என்று பொருள்.
தஞ்சாவூர் கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திற்கு வந்துதான் கொண்டாடுகிறார்கள்.
ஓசூர் – பேரிகை பாதையில் பாகலூர் பகுதியில் மாடி விநாயகர் அருள்கிறார். இவருடைய சந்நதியின் இரு புறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரும், மலைக்கோட்டை மாணிக்க விநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர்.
திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருள் பாலிக்கிறார். இவர் வேதகோஷத்தைச் சற்றே செவியைச் சாய்த்த வண்ணம் கேட்பதால் செவி சாய்த்த விநயகர் என்று வணங்கப் படுகிறார்.
கும்பகோணம் ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக்குடியில் தேள் போன்ற வடிவில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார்.
திருச்சிக்கு அருகே உள்ள பிச்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் கொண்டிருக்கிறார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னன் துளசாஜி மகாராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரைத் தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்டப் பிள்ளையார்!
தஞ்சாவூர் கீழவாசலில் வல்லபாம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை நிற விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் வழிபடப்பட்ட இவருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயர் உண்டு.