
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் கோடங்கிப்பட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது விருப்பாச்சி ஆறுமுக நாயினார் முருகன் கோவில். இக்கோவில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள தீர்த்த தொட்டியில் தண்ணீர் வற்றாது வந்துக் கொண்டேயிருப்பது அதிசயமாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் உருவான கதையை இந்தப் பதிவில் காண்போம்.
தலவரலாறுப்படி ஒருமுறை அசுரன் ஒருவனை அழிக்கச் சென்ற சப்தகன்னிகள் தவறுதலாக மகரிஷி ஒருவரை அழித்து விட்டனர். இந்த தோஷம் நீங்குவதற்காக இங்கு தீர்த்தம் உருவாக்கி முருகப்பெருமானை வழிப்பட்டனர். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து பிராயச்சித்தம் தேடியதால் முருகன் அவர்களது தோஷத்தை போக்கி அருள் புரிந்தார்.
அன்றைய காலக்கட்டத்தில் இவ்விடத்தில் தீர்த்தம் மட்டுமே இருந்தது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் விருப்பாச்சி அருகே வந்துக் கொண்டிருந்த போது தொடர்ந்து வரமுடியாமல் பரிதவித்தார். அப்போது அங்கே ஒரு தெய்வீக சிறுவன் தோன்றி அவரிடம் முனை மழுங்கிய வேலைக் கொடுத்து தைரியமாக தொடர்ந்து செல்லுங்கள் என்றான். முருகப்பெருமானும் வேல் ரூபத்தில் அவருடனேயே சென்றார்.
அப்போது வழியில் இருந்த தீர்த்தத் தொட்டியில் நீராட அந்த விவசாயி வேலை ஊன்றி வைத்துவிட்டு சென்றார். நீராடி திரும்பியதும் வேலை எடுக்க முயன்றார். ஆனால், ஊன்றிய வேலை எடுக்கவே முடியவில்லை. அந்த தகவல் அப்பகுதியில் இருந்த மக்களுக்கு பரவியது. உடனே அதே இடத்தில் முருகப்பெருமானுக்கு கோவில் ஒன்று எழுப்பப்பட்டது.
வேலுடன் வந்து உருப்பெற்றதால் வள்ளி, தெய்வாணை இன்றி முருகன் தனித்தே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனால் இக்கோவிலில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் போன்ற வைபவங்கள் நடைப்பெறுவதில்லை. திருமணம், ஐஸ்வர்யம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு என்று பல வேண்டுதல்களையும் நிறைவேறும் ஸ்தலமாக இருந்து வருகிறது.
விருப்பாச்சி ஆறுமுக நாயினார் இங்கு மூலவராகவும், சுப்ரமணியர் உற்சவராகவும் அருள் பாலிக்கிறார்கள். இக்கோவிலின் தலவிருட்சம் வில்வ மரமாகும். இங்கு இரண்டு வில்வ மரங்கள் இருக்கின்றன. தீர்த்த தொட்டிக்கு முன்பு சப்த கன்னிகளின் சிலை இருக்கிறது. இது சிவபெருமான், முருகன், பிள்ளையாரை வழிப்படுவது போல அமைந்திருக்கிறது. தமிழ் புத்தாண்டு, திருகார்த்திகை, தை பூசம் போன்ற பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த முருகன் கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது நன்மை பயக்கும்.