
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் கோமதி அம்மன் சன்னிதிக்கு எதிரே சரஸ்வதி தேவிக்கு தனிக் கோயில் உள்ளது.
காஞ்சிபுரத்தில் ராஜசிம்ம பல்லவனால் எழுப்பப்பட்ட கைலாசநாதர் கோயிலில், மூன்று இடங்களில் சரஸ்வதி தேவி சிற்பங்கள் உள்ளன. இரு சிற்பங்களில் நான்கு கரங்களுடன் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள். வலக்கரங்களில் அட்ச மாலையும், தியான முத்திரையும் திகழ, இடக்கரங்களில் கமண்டலமும், ஓலைச்சுவடியும் ஏந்தி தரிசனம் தருகிறாள். மூன்றாவது சிற்பத்தில் வலக்கரங்களில் அட்ச மாலையும், அபய முத்திரையும், இடக்கரங்களில் கமண்டலமும், தாமரையும் ஏந்தி காட்சி தருகிறாள்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் சோழ நாட்டிலிருந்து தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள பத்மநாபபுரம் வந்தபோது, தான் வழிபட்ட சரஸ்வதி தேவி சிலையையும் எடுத்து வந்தார். அச்சிலை பத்மநாபபுரம் கோட்டையில் இன்றும் உள்ளது.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில், சரஸ்வதி தேவி நான்கு கரங்களுடன், வீணையேந்தி தரிசனம் தருகிறாள்.
திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி தேவி எழுத்தாணியுடன் காட்சி தருகிறாள்.
நாகை மாவட்டம், கடலங்குடி சிவன் கோயிலில், சரஸ்வதி தேவி முத்துச்சரங்கள், நெற்றிம் பட்டம், கிரீடம், கொலுசு, வளையல்கள் அணிந்து அலங்கார கோலத்தில் காட்சி தருகிறாள்.
சிருங்கேரியில் சரஸ்வதி தேவி, மாணவியாக, படிக்கின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
சரஸ்வதி தேவிக்கு பொதுவாக அன்ன வாகனம் என்று சொல்லப்படுகிறது. மயில் வாகனம் என்றும் மேஷ (ஆடு) வாகனம், யாளி, சிம்மம் என்ற வாகனங்களும் சரஸ்வதி தேவிக்கு உண்டு என்று புராண நூல்களில் கூறப்பட்டுள்ளன.
சிதம்பரம், தில்லை காளியம்மன் கோயிலில் சரஸ்வதி தேவி நின்ற கோலத்தில், ‘வீணை வித்யாம்பிகை’ எனும் பெயரில் அருள்புரிகிறாள்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாணியம்பாடியில் சரஸ்வதி தேவிக்கு கோயில் உள்ளது. இத்தல சரஸ்வதிக்கு ஞான சரஸ்வதி என்று பெயர். சரஸ்வதியின் பெயர்களில் ஒன்றான வாணியின் பெயரில் வாணியம்பாடி என்று அவ்வூர் பெயர் பெற்றது.
திருச்சி மாவட்டம், உத்தமர்கோவிலில் சரஸ்வதி தேவி தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். இங்கு தரப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் சிறப்புடையது.
மகாராஷ்டிரா மாநிலம் எனும் ஜோதிர்லிங்கத் தலத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் அன்ன வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் சரஸ்வதி தேவி தரிசனம் தருகிறாள். கைகளில் வீணை, ஜப மாலை, ஓலைச்சுவடிகள் உள்ளன. இரு சேவகர்கள் தேவிக்கு வெண்சாமரம் வீசியவாறு நிற்கிறார்கள்.
கர்நாடக மாநிலம், ஹூப்ளி நகரில் உள்ள சிவ கிருஷ்ணா கோயிலில் சரஸ்வதி தேவிக்கும், பிரம்மாவுக்கும் தனி சன்னிதிகள் உள்ளன. சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. புத்தகங்கள், பேனா போன்ற எழுது பொருட்கள் வைத்து இன்று தேவியை வழிபடுகின்றனர்.
சென்னை, போரூர் மதனந்தபுரத்தில் உள்ள துர்கா, லட்சுமி, சரஸ்வதி கோயிலில் தனி சன்னிதியில், அன்ன வாகனம் முன்னே நிற்க, சரஸ்வதி காட்சி தருகிறாள்.
சென்னை, சோழிங்கநல்லூர் பிரத்தியங்கரா கோயிலில், நீல சரஸ்வதி எனும் பெயரில் சரஸ்வதி தேவி தரிசனம் தருகிறாள்.
தஞ்சாவூர், கண்டியூரில் உள்ள பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயிலில், பிரம்மாவுடன் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி தேவியின் பெயர், ‘யாழைப் பழித்த மொழியாள்’ என்பதாகும். இத்தலத்தில் கையில் வீணை இல்லாமல் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள்.
காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோயிலில், சரஸ்வதி தேவி எட்டு கைகளுடன் ‘ராஜசியாமளா’ என்ற பெயரில் தரிசனம் தருகிறாள்.
கேரள மாநிலம், பாலக்காடு கொடுந்திரப்புள்ளி ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சரஸ்வதி பூஜை அன்று நவமி விளக்கு திருவிழா நடைபெறுகிறது. அன்று கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர். நகர் முழுவதும் விளக்குகள் ஏற்றி யானைகள் ஊர்வலம் நடைபெறும்.
கூத்தனூரில் தனி கோயில் கொண்டுள்ள சரஸ்வதி தேவி கவிச்சக்கரவர்த்தி கம்பருக்காக கிழங்கு விற்கும் மூதாட்டியாகவும், இடையர் குலப் பெண்ணாகவும் நேரில் வந்து காட்சி தந்திருக்கிறாள். புலவர் ஒட்டக்கூத்தருக்கு இரண்டாம் ராஜராஜ மன்னன் இவ்வூரை தானமாக வழங்கியதால், கூத்தனூர் எனும் பெயர் வந்தது.