தசரா திருவிழா: மைசூரை மிஞ்சும் குலசை முத்தாரம்மன் வைபவம்!

kulasai mutharamman Temple Dussehra festival
kulasai mutharamman
Published on

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்கு அருகில் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ளது அருள்மிகு முத்தாரம்மன் உடனுறை ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில். சுமார் 300 ஆண்டுகள் பழைமையான சக்தி தலமாக இது விளங்குகிறது. இக்கோயில் திருச்செந்தூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயில் மூலவர் முத்தாரம்மையும், ஞானமூர்த்திஸ்வரரும் ஒருசேர ஒரே பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி போன்ற அம்மன்கள் தனித்த ஆட்சிமை நிகழ்த்துவது போல், முத்தாரம்மை இல்லை. இவள் ஞானமூர்த்தீஸ்வரரை மாதொருபாகனாகக் கொண்டு அவரையே விஞ்சும் வண்ணம் தன்னாட்சி புரிந்து இத்தலத்தில் அருளாட்சி நிகழ்த்தி வருகின்றாள்.

இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொடிமரம் கொண்டு ஆட்சி செய்யும் அம்பிகையாக வீற்றிருந்து குலம் காக்கிறாள் இந்த முத்தாரம்மை. குலசையை சுற்றியுள்ள ஊர்களான காயல்பட்டினம், உடன்குடி, பழையகாயல் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளை வெளியூர்வாசிகள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு இருக்க வாடகைக்கு எடுத்துத் தங்கிக்கொள்கின்றனர். மேலும், இப்பகுதிகளில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினரும் சாதி, சமய பேதமின்றி தங்கள் குடியிருப்புகளில் பக்தர்களை தங்குவதற்கு அனுமதிக்கின்றனர். வெளியூர், வெளிநாடுகள் என்று பக்தகோடி பெருமக்களின் கூட்டம் வருடாவருடம் கூடிக் கொண்டே செல்கிறது.

இதையும் படியுங்கள்:
துர்கா கவசத்தை தினசரி கூறி வருவதால் கிடைக்கும் 5 வகை ஜாதகப் பலன்கள்!
kulasai mutharamman Temple Dussehra festival

குலசையை சுற்றி முத்தாரம்மையின் வேண்டுகோளுக்கு இணங்க வீர மனோகரி, மயானகாளி, பத்ரகாளி, கருங்காளி போன்ற அட்டமகாகாளிகள் காவல் காக்கின்றனர். கடற்கரையின் ஒவ்வொரு திசையிலும் இக்காளி மூர்த்தங்கள் அமைந்து பக்தர்களைக் காத்து அருளுகின்றனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் பொருட்டு வேடமிட நினைக்கும் அலங்காரப் பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும், கடைகளிலும் இம்மாதம் அதிகமாகக் கிடைக்கும்படி விற்பனை செய்யப்படுகின்றன.

Kulasai Dussehra Festival
Kulasai Dussehra Festival

குலசை முத்தாரம்மன் வரம் கொடுக்கும் அம்மை மட்டுமல்ல; நமது முன்வினை பாபங்களை தீர்க்கும் பரோபகாரியாகவும் விளங்குகின்றாள். மேலும், இக்கோயிலில் காளி வேடம் பூண்டு விரதம் மேற்கொள்பவர்கள் அம்மனின் கட்டளைக்கு இணங்கவே இந்த வேடத்தை எடுப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் ஓலைக் குடிசை வேய்ந்து சிறு அறை போல் அமைத்து, காளி வேடம் சூடுபவர்கள் தங்குகின்றனர். அச்சிறு ஓலைக்குடிசையை, ‘காளிப்பறை’ என்று கூறுகின்றனர். அப்பறையில் அம்மன் சிலை வைத்து கோயில் போல் வழிபாடு, பூஜைகள் நிகழ்த்தி, அங்கேயே சமைத்து உண்டு விரதம் மேற்கொள்கின்றனர். வேடம் எடுக்காதவர்களும் காப்பு கட்டி  விரதம் மேற்கொண்டு தசராவில் கலந்துகொண்டு வேண்டுதலை நிகழ்த்துகின்றனர்.

இதையும் படியுங்கள்:
துர்கா கவசத்தை தினசரி கூறி வருவதால் கிடைக்கும் 5 வகை ஜாதகப் பலன்கள்!
kulasai mutharamman Temple Dussehra festival

இத்திருவிழாவில் பக்தர்கள் எடுக்கும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மை அருளுவதாக பக்தகோடிகள் நம்புகின்றனர். முனிவர் வேடம் முன்வினைகளைத் தீர்ப்பதாகவும், குறவர் வேடம் குறைகளைத் தீர்ப்பதாகவும், பெண்கள் வேடம்  திருமணக்  குறையையும், காளி வேடம் காரிய ஸித்தியையும், அனுமன் வேடம் மன அமைதியையும் தருவதாக நம்பிக்கை.

Kulasai Dussehra Festival
Kulasai Dussehra Festival

வேண்டுதல் பொருட்டு வெளியூரில் இருந்துவரும் பெரும் பணக்காரர்களும் தங்கள் உடைமைகளையும் அணிகளையும் துறந்து, கிழிந்த சட்டையையும், உடைந்த பிளாஸ்டிக் பாட்டில் கோர்த்த மாலையையும் கழுத்தில் பூண்டு தங்கள் தலைக்கனத்தை கீழே இறக்கி வைத்து, யாசகம் எடுக்கும் வேடத்தில் அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கின்றனர். மேலும், பக்தர்கள் எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் மாலை அணிந்து விரதம் பூண்டு பத்து  வீட்டிலாவது யாசகம் பெற்று அந்தப் பணத்தை  கோயிலில் கொண்டு போய் சேர்க்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
அசுரர்களை நடுங்கச் செய்த நவராத்திரி போர்: மகிஷாசுரமர்தினி தோற்ற வரலாறு!
kulasai mutharamman Temple Dussehra festival

வருடா வருடம் ஊரும் கடற்கரையும் கொள்ளாத அளவுக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் இங்கு அலை மோதுகிறது. மாலை அணிபவர்கள் தொடர்ந்து மூன்று வருடங்கள் அணிந்து, பிறகு நிவர்த்தி செய்வதையோ அல்லது தொடர்வதையோ அம்மனின் உத்தரவு கேட்டே முடிவு செய்கின்றனர். ஒவ்வொரு மாலையும் ஒவ்வொரு பலனை அளிப்பதாகக் கூறப்படுகிறது. பச்சை மாலை பசுமையான வாழ்வினையும், மஞ்சள் மாலை மங்கல நிகழ்வையும், கருங்காலி மாலை நல்லெண்ணத்தையும், துளசி மாலை புனிதத்தையும், ருத்திராட்சம் சன்னியாச வாழ்வையும் அளிப்பதாக ஐதீகம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக முத்தாரம்மனுக்கே  காணிக்கை அதிகப்படியாகக் கிடைப்பதாக கோயில்சார்  துறைகள் கூறுகின்றன. வேடங்களும் மாலைகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதைப் போலவே, அம்மனின் கடைக்கண் பார்வை கடாட்சமும் வருடா வருடம் பக்தர்களை பக்திப் பெருக்கில் திளைக்கவே செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com