ஏகாதசி விரதத்துக்கு இணையான பலனைத் தரும் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு!

Vishnupathi Punyakalam
Vishnupathi Punyakalamhttps://ena.laatech.net

சித்திரை முடிந்து வைகாசி பிறக்கப்போகிறது. இது விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ணிய காலங்கள் வருவதுண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வருகிறது.

வைகாசி மாதம் விஷ்ணுபதி புண்ணியகாலம் பிறக்கப்போகிறது. இது ஏகாதசிக்கு நிகரான புனிதமான நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவையும் தாயாரையும் நினைத்து வணங்க, தீராத குடும்ப பிரச்னைகள் அனைத்தும் தீரும்.

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மகாவிஷ்ணுவுக்கு உரியவை. ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவை சிவனுக்குரியவை. பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ணிய காலம் எனப்படும். சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ணியகாலம் எனப்படும்.

வைகாசி மாத விஷ்ணுபதி புண்ணிய காலத்தின்போது உங்களின் பிரச்னைகளை, வேண்டுதல்களை மனமுருகி மகாவிஷ்ணுவிடம் சொல்லுங்கள். தங்களின் நியாயமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறும். இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்கு உயர்வானது.

பொதுவாக, திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவர் புரியும் பூஜைகளும் அனுஷ்டிக்கும் விரத முறையும் அனைத்திலும் சிறந்த பலன் தரும். ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தரவல்லது விஷ்ணுபதி புண்ணியகாலமாகும். மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும் பூரணமாகவும் கிடைக்கும் அரிதான நாளாக இது அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தும்மல் பற்றி அறிய வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்கள்!
Vishnupathi Punyakalam

இந்த புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் ஸ்ரீ மகாவிஷ்ணு மற்றும் ஸ்ரீதேவியின் துதிகளை கூறி, நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவின்றி செய்யலாம். மகாவிஷ்ணு கோயிலுக்குப் போக முடியாது என்றால் நம் வீட்டிலேயே பெருமாளை மனதார நினைத்து நம்முடைய வேண்டுதலை கூறி வணங்கலாம். மன அமைதி மற்றும் மோட்சத்தை தரக்கூடியது இந்த புண்ணிய காலம்.

நாளை விஷ்ணுபதி புண்ணிய காலம். இந்த புண்ணியகாலத்தில் விரதம் இருப்பவர்களுக்கு அந்த மகாலட்சுமியின் அருளும் ஸ்ரீமன் நாராயணன் அருளும் நிச்சயம் கிடைக்கும். ஒருவர் ஒருமுறை இந்த விஷ்ணுபதி புண்ணியகால விரதத்தை அனுஷ்டிப்பது பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம்.

பெருமாள் கோயிலுக்குச் சென்று கொடிமர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிராகார வலம் வாருங்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள். 27 சுற்று முடிந்த பின்பு மீண்டும் கொடி மர நமஸ்காரம் செய்யுங்கள். பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு தங்களின் பிரார்த்தனைகளை மனம் உருகி சொல்லுங்கள். உங்களின் நியாயமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவதற்குள் நிறைவேறியே தீரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com