முருகப்பெருமான் என்றாலே கையில் வேலுடன் அழகிய குழந்தை முகமும், ஆறு முகங்களுடன் அபயக்கரம் நீட்டும் சுவாமியாகவும் அறிந்திருப்போம். ஆனால், வேறெங்கும் இல்லாத சிறப்பாக 11 முகங்களுடன் 22 கரங்களுடன் விளங்கும் அதிசய விஸ்வரூப முருகனை இராமநாதபுரத்தில் உள்ள குண்டுக்கரையில் மட்டுமே தரிசிக்க முடியும். இராமநாதபுரம் மாவட்டம், குண்டுக்கரை அருகில் அமைந்துள்ளது குண்டுக்கரை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயில். இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக முருகப்பெருமான் சுவாமிநாத சுவாமியாக வீற்றிருக்கின்றார்.
தீயவர்களை ஒடுக்கவே கடவுள் அவதாரங்கள் நிகழ்கிறது. அந்த வகையில் கொடியவன் சூரபத்மனை வதம் செய்யும் பொருட்டு தோன்றியவரே முருகப்பெருமான். திருச்செந்தூரில் சூரபத்மன் வதம் நிகழும் முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார் எனவும், அப்போது முருகன் 11 தலை 22 கைகளுடன் விஸ்வரூபத்தில் இருந்ததாகவும் இக்கோயில் தல வரலாறு சொல்கிறது. இன்றும் அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் இத்தலத்து உத்ஸவர் முருகப்பெருமான் தரிசனம் தருகிறார்.
இத்தலத்து முருகன் சுவாமிநாதனாக அருள்பாலிக்கக் காரணம், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி என்பவர் குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வது வழக்கம். ஒருசமயம் சுவாமிமலை சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் தோன்றிய முருகன், ‘குண்டுக்கரை கோயிலில் உள்ள தமது பழைய சிலையை எடுத்து விட்டு புதிய சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும்’ என கூறி மறைந்தார்.
பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து, சுவாமிமலை முருகன் பெயரான சுவாமிநாதன் என்பதையே இத்தலத்து முருகனுக்கும் சூட்டியதாக தல வரலாறு கூறுகிறது.
சுவாமி மலையில், பிரணவத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போன்ற சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவத்துக்குப் பொருள் சொல்ல, ஈசன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. தந்தை சிவனும் முருகனுக்குள் ஐக்கியமாகி உள்ள முருகனின் இந்த நிலை, இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
இத்தலத்து முருகப்பெருமானை வேண்டி வழிபட்டால் கல்வி அறிவுடன் நல்ல மனநிலையும் கிடைக்கும் என்கின்றனர். இராமநாதபுரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் விஸ்வரூப முருகனை வழிபட்டு அருள் பெற்று வாருங்கள்.