காஞ்சிபுரம் நவகிரஹ ஸ்தலங்களை அரை நாளில் தரிசிப்பது எப்படி?

Temple
Temple
Published on

கும்பகோணம் பகுதியைச் சுற்றிலும் நவகிரஹ ஸ்தலங்கள் அமைந்துள்ளன என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் காஞ்சிபுரம் நகரத்திற்குள்ளேயே மிகப்பழமையான நவகிரஹ ஸ்தலங்கள் அமைந்துள்ளன. அவற்றையும் நவகிரஹ ஸ்தலங்களை அரைநாளில் எப்படி தரிசிப்பது என்பதையும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

சூரியன் பரிகார ஸ்தலமான ஸ்ரீபரிதீஸ்வரர் திருக்கோவில் பெரிய காஞ்சிபுரத்தில் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள தமிழ்நாடு அரசின் விதைப்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு அருகிலேயே செவ்வாய் பரிகார ஸ்தலமான ஸ்ரீசெவ்வந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

சந்திரன் பரிகார ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீசந்திரேஸ்வரர் திருக்கோவில் பெரிய காஞ்சிபுரத்தில் பிள்ளையார்பாளையம் என்ற பகுதியில் சந்தவெளி அம்மன் கோயிலுக்குப் பின்புறத்தில் அமைந்துள்ள தெருவில்அமைந்துள்ளது. புதன் பரிகார ஸ்தலமான ஸ்ரீபிரம்மராம்பிகை சமேத ஸ்ரீஸத்யநாதர் ஸ்வாமி திருக்கோவில், பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருக்காலிமேடு என்ற பகுதியில் அமைந்துள்ளது.

குரு பரிகார ஸ்தலமான ஸ்ரீ காயாரோகணீஸ்வரர் திருக்கோவில் பிள்ளையார்பாளையம் என்ற பகுதியில் முடங்கு வீதியில் இத்தலம் அமைந்துள்ளது. சுக்கிரன் பரிகார ஸ்தலமான ஸ்ரீஇஷ்ட சித்தீஸ்வரர் திருக்கோவில் அருள்மிகு கச்சபேஸ்வரர் கோயிலுக்குள் ஒரு தனி கோவிலாக இத்தலம் அமைந்துள்ளது. சனி பரிகார ஸ்தலமான ஸ்ரீமணிகண்டீஸ்வரர் திருக்கோவில் சின்ன காஞ்சிபுரத்தில் திருக்கச்சி நம்பி தெருவில் அமைந்துள்ளது.

Temple
Temple

ராகு கேது பரிகார ஸ்தலமான ஸ்ரீமாகாளேஸ்வரர் திருக்கோவில் காமாட்சி அம்பாள் கோவிலுக்கு அருகில் ஜவஹர்லால் தெருவில் அமைந்துள்ளது. மற்றொரு ராகு கேது பரிகார ஸ்தலமான ஸ்ரீபணாமுடீஸ்வரர் திருக்கோவில் கீரை மண்டபம் என்ற பகுதியில் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் நவகிரஹ ஸ்தலங்களைப் பொறுத்தவரை சில கோவில்கள் காலை வேளைகளில் மட்டுமே ஒருகால பூஜைக்காகத் திறக்கப்படுகின்றன. எனவே ஒன்பது கோவில்களையும் தரிசிக்க காலை ஏழு மணிக்கு காஞ்சியில் இருக்கும்படி நீங்கள் திட்டமிட வேண்டும். பிற்பகல் பனிரெண்டு முப்பது மணிக்குள் ஒன்பது கோவில்களையும் சுலபமாக தரிசித்து விடலாம்.

இனி அரைநாளில் இக்கோவில்களை எப்படி தரிசிப்பது என்பதைப் பார்க்கலாம்.

முதலில் தரிசிக்க வேண்டிய கோவில் சூரியன் பரிகார ஸ்தலமான அருள்மிகு பரிதீஸ்வரர் திருக்கோவில். பெரிய காஞ்சிபுரத்தில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு பின்புறத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இந்த கோவில் காலை மட்டுமே திறந்திருக்கும். காலை ஏழு மணி முதல் ஏழரை மணிக்குள் இந்த கோவிலை முதலில் தரிசித்து விடவேண்டும்.

அடுத்ததாக இத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள செவ்வாய் பரிகார ஸ்தலமான அருள்மிகு செவ்வந்தீஸ்வரர் திருக்கோவில். இரண்டாவதாக இத்தலத்தை தரிசிக்க வேண்டும்.

செவ்வந்தீஸ்வரர் திருக்கோவிலை தரிசித்து முடித்ததும் இங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் பிள்ளையார்பாளையத்தில் சந்தவெளி அம்மன் கோயிலுக்குப் பின்புறத்தில் அமைந்துள்ள தெருவில் உள்ள சந்திரன் பரிகார ஸ்தலமான ஸ்ரீசந்திரேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும். இத்தலத்திற்கு அருகிலேயே முடங்கு வீதியில் குரு பரிகார ஸ்தலமான ஸ்ரீ காயாரோகணீஸ்வரர் திருக்கோவில் (குரு கோவில்) அமைந்துள்ளது. நான்காவதாக இத்தலத்தை தரிசிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தடை நீக்கும் திருத்தலங்கள்
Temple

அடுத்ததாக கீரை மண்டபத்தில் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள ராகு கேது பரிகார ஸ்தலமான அருள்மிகு பணாமுடீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று தரிசனத்தைச் செய்ய வேண்டும். இங்கிருந்து திருக்காலிமேடு பகுதியில் அமைந்துள்ள புதன் பரிகார ஸ்தலமான ஸ்ரீஸத்யநாதர் ஸ்வாமி திருக்கோவிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும். இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சனி பரிகார ஸ்தலமான ஸ்ரீமணிகண்டீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று தரிசித்து முடிக்க வேண்டும். சின்ன காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் திருக்கச்சி நம்பி தெருவில் இத்தலம் அமைந்துள்ளது.

அடுத்ததாக காமாட்சி அம்பாள் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள ராகு கேது பரிகார ஸ்தலமான ஸ்ரீமாகாளேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும். கடைசியாக ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலுக்குள் ஒரு தனி கோவிலாக அமைந்துள்ள சுக்கிரன் பரிகார ஸ்தலமான ஸ்ரீஇஷ்ட சித்தீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று தரிசித்து நவகிரஹ பரிகார ஸ்தல தரிசனத்தை முடிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அம்மன், அரூபமாக இருந்து தவம் செய்த இடம் எது தெரியுமா?
Temple

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com