
பைரவர் என்றால் பயத்தைப் போக்குபவர், பயம் தருபவர் என்று இரு பொருள் உண்டு. தன்னை வழிபடும் பக்தர்களின் பயத்தைப் போக்கியும், அவர்களின் எதிரிகளுக்கு பயத்தைத் தருவதும் பைரவ மூர்த்தியின் செயல்கள் ஆகும். வேண்டியதை வேண்டியபடி அருளும் பைரவர் குறித்த சில தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்.
அஷ்ட பைரவர்கள்: அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் மற்றும் கால பைரவர் ஆகி எட்டு பைரவ மூர்த்திகளே அஷ்ட பைரவர்கள் எனப்படுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆரகழூரில் உள்ள காமநாதீஸ்வரர் கோயிலில் அஷ்ட பைரவர்களைக் கண்டு தரிசிக்கலாம்.
விருத்தாச்சலம், விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அருளும் பைரவர் பத்து கரங்களுடன் காட்சி தருகிறார்.
சங்கரன்கோவில், ஸ்ரீசங்கர நாராயணர் கோயிலில் அருளும் பைரவர் நின்ற திருக்கோலத்தில், இடது மேற்கரத்தில் பாம்பை ஏந்தியபடி காட்சி தருகிறார்.
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் உள்ள சிவன் கோயிலில் அமர்ந்த கோலத்தில் பைரவர் காட்சி தருகிறார்.
திருக்கண்டீஸ்வரம், திருக்கண்டீஸ்வரர் கோயிலில் ஆறு கரங்களுடன் பைரவர் வளைந்து நிற்கும் விநோத நிலையில் காட்சியளிக்கிறார்.
சிவகங்கை மாவட்டம், சூரக்குடியில் உள்ள தேசிகநாதர் கோயிலில் பைரவர், கதாயுதம் ஏந்தியவராகக் காட்சி தருவது சிறப்பு. இந்த பைரவர், ஆனந்த பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக, பைரவர் சூலத்துடன் காட்சி தருவார். ஆனால், இங்கு கதாயுதத்துடன் காட்சி தருவது வித்தியாசமான கோலமாகும்.
ஸ்ரீவாஞ்சியத்தில் பைரவர் தனது தண்டங்களை எல்லாம் வைத்துவிட்டு, யோக பைரவராகக் காட்சியளிக்கிறார்.
சேரன்மாதேவியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் காலபைரவர் எட்டு புஜங்களுடன் காட்சி அளிப்பது சிறப்பு.
இதேபோல், திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலிலும் பைரவர் எட்டு புஜங்களுடன் தரிசனம் தருகிறார்.
சென்னை, திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழு பைரவர் சன்னிதிகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமியின்போது, ஏராளமான பக்தர்கள் இங்கு பைரவருக்கு வடைமாலை சாத்தி, வழிபடுகின்றனர்.
கும்பகோணம் அருகில் உள்ள திருவிசலூர் திருத்தலத்தில் உள்ள சிவயோகநாதர் கோயிலில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.
காசியில் அருளும் காலபைரவர் பொன்னால் உருவாக்கப்பட்டவர் என்பது தனிச் சிறப்பு.