
இலங்கை அசுரன் ராவணனை வதைத்த பின்னர் ஶ்ரீராமர் சீதையுடன் அயோத்தி திரும்பினார். இலங்கை போரில் ஸ்ரீராமருக்கு உதவிய வானரக் கூட்டமும் அயோத்திக்கு வந்தது. வழக்கமாக வானரக் கூட்டம் எப்போதும் ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டும் , அங்கும் இங்கும் தாவிக்கொண்டும், கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வீசிக்கொண்டும், குட்டிக்கரணம் அடித்து குதூகலமாகவே இருக்கும். இது அவற்றின் பிறவிக் குணம் என்றும் சொல்லலாம்.
எப்போதும் வனத்தில் இருந்ததால் அவற்றின் சேட்டைகளைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், அவை நாட்டுக்குள் வந்ததும் தங்களது வாலுத்தனத்தை சுருட்டி வைக்க அவசியம் ஏற்பட்டது. அயோத்தி அரியணைக்குரிய செம்பியர் குல தோன்றல் ஶ்ரீராமரும், அவரது சகோதரர் லஷ்மணனும், சீதா தேவியும் வனவாசம் முடிந்து மீண்டும் வந்ததால் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருந்தது. இந்தக் கொண்டாட்டத்தில் அயோத்தி மக்கள், வானரங்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் செய்த சேட்டைகளை ரசித்தனர்.
ஶ்ரீராமரின் பட்டாபிஷேகம் முடிந்ததும், சீதா தேவி பிறந்த மிதிலை நாட்டில் இருந்து தூதுவர் வந்தார். சீதா தேவியின் தோழியர்கள் எழுதிய கடிதத்துடன் ஸ்ரீராமரை சந்தித்தார். அரசவையில் இருந்த ஸ்ரீராமர் தூதர் கொண்டு வந்த கடிதத்தினைப் படிக்க உத்தரவிட்டார். ஆனால், தூதரோ இந்தக் கடிதத்தினை அரசவை மற்றும் பொதுவெளியில் படிக்க முடியாது. இது அரசுசார் கடிதம் அல்ல, தனிப்பட்ட முறையில் சீதா தேவிக்கு அவரது தோழியர் எழுதிய கடிதம் என்று சீதையிடம் மடலை ஒப்படைத்தார்.
பிறகு, தனது அறையில் சீதாவுடன் இருக்கும்போது அந்தக் கடிதத்தினை ஸ்ரீராமர் படிக்க ஆரம்பித்தார். அதில், ‘அயோத்தி அரசர் தசரதனின் மைந்தனை நாங்கள் ஒருமுறைதான் பார்த்தோம். அதுவும் சுயம்வரத்தில் ஶ்ரீராமரின் அழகை நாங்கள் சரிவரக் காணவில்லை. அவரை எப்போதும் அயோத்தி மக்களே தரிசித்துக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு எப்போதும் ஸ்ரீராமரின் தரிசனம் கிடைக்கும். ஆனால், மிதிலை நாட்டு மக்கள் அவரை தரிசிப்பது எப்போது? எங்களுக்கு எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும்? நாங்கள் திருமணக் கோலத்தில் ஶ்ரீராமரையும் சீதையையும் காண ஆவலாக உள்ளோம்’ என்று எழுதப்பட்டிருந்தது.
சீதா தேவியின் தோழிகளின் ஆசையை நிறைவேற்ற ஶ்ரீராமர் சீதாவுடன் திருமணக் கோலத்தில், ஊர்வலமாக மிதிலை தலைநகர் ஜனகபுரியில் அவரது மூன்று சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவியரான சீதையின் மூன்று சகோதரிகளுடன் ஆரவாரமாக நுழைந்தார். இந்த ஊர்வலத்தில் வானரங்கள் அனைத்தும் கலந்து கொண்டன. ஆனால், ஸ்ரீராமர் வானரங்களுக்கு ஒரு கட்டளை இட்டிருந்தார். ‘மிதிலைக்குள் அவர்கள் எந்த ஒரு சேட்டையும் செய்யக் கூடாது என்று.’ என்ன இருந்தாலும் மாமனார் ஊராச்சே!
வானரங்களை அமைதியாகக் கொண்டு வரும் பொறுப்பு ஜாம்பவான் கரடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு ஜாம்பவான் ‘தன்னைப் பின்பற்றி அமைதியாக இருக்க வேண்டும், நான் சொன்னதை மட்டும் செய்தால் போதும்’ என்று அவற்றுக்கு உத்தரவிட்டார். ஜாம்பவான் பேச்சைக் கேட்ட வானரங்கள் ஊர்வலத்தில் மிகவும் அமைதியாக வந்தன. மிகவும் அமைதியாக உள்ள வானரங்களைக் கண்ட ஜனகராஜா அதிசயமாக உணர்ந்தார். வானரங்களை கௌரவிக்க அவர்களுக்கு விருந்தளித்தார்.
அப்போது ஜாம்பவான் கரடி ஒரு மாம்பழத்தை சாப்பிட எடுத்து, அது கடினமாக இருந்ததும் சற்று அழுத்திப் பிடிக்க, அதைப் பார்த்து அனைத்து வானரங்களும் இலையில் இருக்கும் மாம்பழத்தை எடுத்து அழுத்த மாங்கொட்டைகள் எல்லாம் மேலே பறந்து விழ ஆரம்பித்து விட்டன. அதைப் பார்த்த வானரங்கள் ‘திருதிரு’வென விழிக்க ஆரம்பித்து விட்டன. பின்னர் ஒருவர் மீது ஒருவர் மாங்கொட்டைகளை வீச, இதைப் பார்த்த ஜனக மகாராஜா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். இப்படி ஸ்ரீராமரின் மிதிலா விஜயம் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.