
செல்வத்தின் அதிபதியான குபேரனை வழிபடுவதற்கு ஏற்ற நாள் வியாழக்கிழமையாகும். மகாலக்ஷ்மியை வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவது போல் குபேரனை வியாழக்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பு. குபேரனுக்குரிய மந்திரங்களைக் கூறி மகாலக்ஷ்மியுடன் சேர்த்து வழிபடுவது குபேரனின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி நமக்கு அருட் கடாட்சத்தை அருள்வார்.
வழிபடும் முறை: வியாழக்கிழமை அதிகாலை குளித்து, வீட்டை சுத்தம் செய்து வாசலில் பச்சரிசி மாவு கோலம் போட வேண்டும். வாசல் நிலைப்படிக்கு சந்தனம் தடவி, மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். பின்னர் வழக்கம் போல் பூஜையறையில் குபேரன் படத்திற்கு முன்பு குபேர விளக்கோ அல்லது அகல் விளக்கோ அல்லது பித்தளை விளக்கோ ஏற்றலாம். தாமரை மலர், சங்கு ஆகியவற்றை இருபுறமும் வைத்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். மகாலக்ஷ்மியைப் போல் குபேரனுக்கு நெல்லிக்காய் படைத்து வழிபடுவது மிகவும் சிறந்தது. அவலுடன் சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நைவேத்தியம் படைக்க வேண்டும்.
குபேரனுக்கு விருப்பமான விஷயங்கள்: வீட்டில் குபேர விளக்கு இருந்தால் அதை வியாழக்கிழமைகளில் ஏற்றுவது சிறப்பு. அந்த விளக்கில் நெய்யோடு இரண்டு கற்கண்டுகளை சேர்த்து ஏற்றுவது நல்லது. குபேரனுக்கு மிகவும் பிடித்தமானது சில்லறை நாணயங்கள். சில்லறை நாணயங்களைப் பரப்பி வைத்து அதன் மீது குபேரன் சிலையை வைக்கலாம்.
ஒரு ரூபாய் நாணயத்தால் குபேரனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. இப்படி அர்ச்சனை செய்த நாணயங்களை வேறு எதற்கும் பயன்படுத்தாமல் வியாபாரம் செய்யும் இடங்களில் வைக்கவும். இப்படி வைக்க, படிப்படியாக செல்வ நிலை உயரும்.
குபேர வழிபாட்டுக்குரிய நேரம்: குபேர மந்திரத்தை மனதில் உச்சரித்து, ஒவ்வொரு வியாழனன்றும் மாலை 5 மணியிலிருந்து எட்டு மணிக்குள் வீட்டு நிலை வாசற்படியில் வடக்கு திசை நோக்கி ஒரு விளக்கு ஏற்ற, வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் பெருகிக்கொண்டே இருக்கும்.
வடக்கு குபேரனுக்கான திசையாக இருப்பதால் பணம் அல்லது நகைகள் வைக்கும் பெட்டி அல்லது பீரோ வடக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். குபேரனின் திசையான வடக்கு திசையில் குபேரன் சிலையை வைத்து வழிபடுவது செல்வம் சேர வழிவகுக்கும்.
குபேர வழிபாட்டின் பலன்: வியாழக்கிழமையில் குபேரனுக்கு விருப்பமான முறையில் வழிபடுவதால் கடன் பிரச்னை தீர்ந்து நிம்மதி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரம் பெருக குபேர வழிபாடு வகை செய்யும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, செல்வம் நிலவ குபேர வழிபாடு சிறந்தது. நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை குபேர வழிபாடு வழங்கும்.