
மகாபாரதக் காவியத்தின்படி, ஒவ்வொரு மனித ஆன்மாவும் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு மூன்று கடன்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்றாகிய, ‘பித்ரு ரின்’ பிரம்மாவிற்குக் கடன் பட்டுள்ளதெனக் கூறப்படுகிறது. ஆடி அமாவாசை தினத்தில் மூதாதையர்களை வணங்கி தர்ப்பணம் செய்வதின் மூலம் பித்ரு ரின் நீங்கும்.
வருடந்தோறும் வரும் அமாவாசைகள் அனைத்துமே பித்ருக்களை எண்ணி வணங்குவதற்கு உரியதாகும். அவற்றில் முக்கியமானதாகக் கருதப்படும் மூன்று அமாவாசைகளாகிய தை, ஆடி, மஹாளயம் ஆகியவற்றின் நடுவே கம்பீரமாக வீற்றுள்ளது ‘ஆடி அமாவாசை.’
ஆடி அமாவாசையன்று, நமது மூதாதையர்கள், அதாவது பித்ருக்கள், பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு தாங்கள் வாழ்ந்த குடும்பத்தைத் தேடி வருவதாக ஐதீகம். பித்ரு லோகம் என்பது உடலை விட்ட ஆன்மாக்கள், தங்களுக்கு வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இருப்பிடமெனக் கூறப்படுகிறது.
ஒரு ஆன்மா வேறொரு உடலைத் தேடுவதை, திருவள்ளுவரின், ‘குடம்பைத் தனித்தொழியப் புள்பறந்தற்றே உடம்போடு உயிரிடை நட்பு’ என்கிற குறள் தெரிவிக்கிறது. இந்த வருடம் கடக மாதத்தில் வரும் ஆடி அமாவாசை தந்தையாகிய சூரியனும், தாயாகிய சந்திரனும் சேர்கின்ற முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. ஆடி அமாவாசை பித்ருக்களுக்கு பூஜை செய்யும் நாள்.
பித்ரு பூஜை விபரங்கள்: நம் குடும்பம் சிறப்பாக இருக்க, ஆடி அமாவாசை தினத்தன்று பித்ருக்களை வணங்கி, சிரத்தையுடன் எள்ளும் நீரும் அளிப்பது அவர்களுக்கு மன நிறைவைத் தரும். ஆடி அமாவாசையன்று ஆண்கள் அதிகாலையில் நீராடி, பிதுர் தர்ப்பணத்தை செய்தல் வேண்டும். அச்சமயம் தாய் மற்றும் தந்தை வழியைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர்களின் பெயர்கள் மற்றும் கோத்திரங்களைக் கூற வேண்டும். தர்ப்பணம் செய்ய சந்ததி இல்லாமல் இருப்பவர்களுக்கும் சேர்த்து எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டும். ஆடி அமாவாசையன்று அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. பசுவிற்கு உணவு வழங்குவது சிறப்பானது. ஆடி அமாவாசை தர்ப்பணத்தை சமுத்திரக்கரை, நதி மற்றும் குளக்கரைகள் அல்லது வீட்டிலேயே காவிரியையும் கங்கையையும் மனதார நினைத்து செய்யலாம்.
திருவெண்காடு, ‘ருத்ரகயா’ என்று அழைக்கப்படுகிறது. காரணம், ஆடி அமாவாசை தர்ப்பணத்தை, புதன் தலமாகிய திருவெண்காட்டில் (ருத்ரகயாவில்) செய்கையில், 21 தலைமுறைகள் உய்வடையும் என்பதாகும்.
பொதுவான நமது வாழ்வியல் உண்மையை, தேய்பிறையில் 15 திதிகளும், வளர்பிறையில் 15 திதிகளும் உணர்த்துகின்றன. முழு ஒளியிலிருந்து படிப்படியாக தேய்ந்து இருட்டை நோக்கி நகர்வது அமாவாசை. முழு இருட்டிலிருந்து படிப்படியாக வளர்ந்து ஒளியை நோக்கி நகர்வது பௌர்ணமி.
புனரபி ஜனனம், புனரபி மரணம் என்பது போல, இவ்வுலகில் ஒவ்வொரு உயிரினமும் சிறிது சிறிதாக வளர்ந்து ஒரு நிலையை அடைந்த பின் மெதுவாகத் தேயத் தொடங்கும் செயல் விடாமல் நடந்து கொண்டிருக்கிறது. வெளிச்சம் என்று ஒன்றிருந்தால், இருட்டு என்பதும் உண்டு. ‘இருட்டு வந்து விட்டதே’ என சோகத்தில் துவளாமல், மீண்டும் வெளிச்சம் ஏற்படும் என்கிற நம்பிக்கை வேண்டும். ஆடி அமாவாசை தர்ப்பணத்தை மனதார செய்கையில், பித்ருக்களின் ஆசிகள் நிச்சயம் கிடைக்கும். வாழ்க்கையும் வளம் பெறும்.