நம் வீட்டில் செல்வம் சம்பந்தமான பொருட்கள், நகைகள், விலை உயர்ந்த பொருட்களை பீரோவில் வைப்போம். அந்த பீரோவை வாஸ்துபடி சரியான இடத்தில் வைக்கும்போதே செல்வம் அதிகரிக்கும். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நாம் சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக பயன்படுத்தும்போதே மகிழ்ச்சியடைய முடியும். அத்தகைய பணத்தை வீட்டில் சரியான வாஸ்து முறைப்படியான இடத்தில் சேமித்து வைக்கும்போதுதான் அது மென்மேலும் பெருகும் என்று சொல்லப்படுகிறது.
நம்மிடம் இருக்கும் பணம் அதிகரிக்க வேண்டுமே தவிர, தண்ணீர் மாதிரி கரைந்துவிடக் கூடாது. வாஸ்து முறைப்படி தண்ணீர் இருக்கும் திசையாக வடகிழக்கு திசையைச் சொல்வார்கள். இந்த திசையில் பீரோவோ அல்லது செல்வம் சம்பந்தமான எந்த பொருளையும் வைக்கக்கூடாது. பீரோ, லாக்கர் ஆகியவை வடகிழக்கு மூலையில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நெருப்பில் போடும் எந்தப் பொருளாக இருந்தாலும் எரிந்து சாம்பலாகிவிடும். நாம் சம்பாதிக்கும் பணமும் அவ்வாறு ஆகக் கூடாது. எனவே, வாஸ்து முறைப்படி 'அக்னி மூலை' என்று தென்கிழங்கு திசையை சொல்வார்கள். இந்த தென்கிழக்கு மூலையிலும் பணம் சம்பந்தமான எந்த பொருளையும் வைக்கக்கூடாது. இந்த மூலையில் பணம், நகை, பத்திரம் போன்று எந்தப் பொருட்களையும் வைக்கக்கூடாது.
பீரோவை வைக்க சரியான திசை எதுவென்று கேட்டால், தென்மேற்கு மூலையை சொல்லலாம். இங்கே பீரோவை வைத்தால் செல்வம் மென்மேலும் அதிகரிக்கும். மேலும், தென்மேற்கு திசையில் பீரோவை வைப்பதன் மூலமாக நமக்கு வீண் செலவுகளும், மருத்துவ செலவுகளும் குறையும்.
தென்மேற்கு திசையை ‘கன்னி மூலை’ என்றும் கூறுவார்கள். இந்த திசை விநாயகருக்கு உரியதான இடமாக சொல்லப்படுகிறது. எனவே, இங்கே பணம், நகை வைக்கும்போது அது மென்மேலும் பெருகும். தென்மேற்கு திசையில் பீரோவை வைத்து அதை கிழக்கு திசை அல்லது வடக்கு திசை நோக்கி திறப்பது போல வைத்துப் பயன்படுத்தலாம்.
தென்மேற்கு மூலையில் பீரோ வைக்க முடியவில்லை என்றால் வடமேற்கு மூலையிலும் பீரோவை வைத்துப் பயன்படுத்தலாம். இதன் மூலமாக காற்று போல பணம் உங்களிடம் எந்நேரமும் நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. வடமேற்கு திசையில் பீரோவை வைத்தால் கிழக்கு அல்லது தெற்கு திசையை நோக்கி திறப்பது போல பீரோவை வைக்கலாம்.
மேலும், பீரோவில் முதலில் மஞ்சள் துணியை வைத்து அதன் மீது செல்வம் தொடர்பான பணம், நகை, பத்திரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது அது மென்மேலும் அதிகரிக்கும். பணத்தை ஈர்க்கக்கூடிய பொருட்களான பச்சை காற்பூரம், வசம்பு, கிராம்பு, ஏலக்காய், கல் உப்பு இவற்றையெல்லாம் பீரோவில் வைப்பதன் மூலமாக அவை மென்மேலும் பணத்தை ஈர்த்துக்கொண்டு வரக்கூடிய தன்மையைக் கொண்டது என்று சொல்லப்படுகிறது.